Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் ஃபொன்சேகா அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

கனடாவில் வெளிவரும் நெஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பிரகடனம்: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து.

மொழிபெயர்ப்பு:  சபாபதி  சிவகுருநாதன்
இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா, கனடாவின் நெஷனல் போஸ்ட் பத்திரிகையின் ஷஷஸ்டுவர்ட் பெல் பத்திரிகையாளரோடு 23.09.2008இல் நடத்திய பேட்டியில் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதோடு அவற்றை முழுமையாக அங்கீகரிக்கவும் இல்லை. இப்பேட்டியில் ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா அதிக அரசியல் இயல்புடைய மனங்கலங்கச் செய்யும் சில அவதானிப்புக்களை குறிப்பிட்டுள்ளார். ஏனைய விடயங்களோடு ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா பின்வருமாறு கூறுகிறார்,

இந்த நாடு முற்றுமுழுமையாக சிங்களவர்களுக்கே சொந்தமானது என நான் உறுதியாக நம்புகின்றேன். ஆயினும், இங்கு வாழும் சிறுபான்மை மக்களை நாங்கள் எமது மக்களைப்போலவே கவனித்து வருகின்றோம். இந்த நாட்டில் 75மூ வீதமானவர்கள் சிங்களவர்கள். எனவே, நாம் ஒருபோதும் இந்த நாட்டை விட்டுக் கொடுக்கப்போவதில்லை. அதனை நாம் பாதுகாப்போம் …. நாம் ஓர் சக்திவாய்ந்த தேசியம். எனவே அவர்கள் எம்முடன் வாழலாம். அதே வேளை சிறுபான்மை மக்களாக இருந்து கொண்டு, அவர்கள் அதிகபட்ச கோரிக்கைகளை எமக்கு முன்வைக்கக் கூடாது.

இத்தகைய உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களை, பல்வேறு சந்தர்ப்பங்களில், ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கள் பற்றி இரண்டு விடயங்களில் நாம் வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலாவது: இராணுவத் தளபதி தனது சுதந்திரமான தனிப்பட்ட கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதே சமயம் சட்ட ரீதியாக அரசியல் நிறைவேற்று அதிகாரிக்குரிய அதிகார எல்லையிலிருந்து கொள்கை தொடர்பான பகிரங்கக் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் முடியும். அரசியல் நிறைவேற்று அதிகாரி கட்டுப்படுத்தாதவரை அவ்வாறாக மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க முடியும். இரண்டாவதாக: இலங்கையின் இனமோதல்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் அதிக சச்சரவுத் தொடர்புடையதும் இயல்பாகவே எளிதில் புண்படக்கூடியதுமான கருத்தியல் தொலைநோக்கையே ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா கொண்டுள்ளார்.

முதலாவது விடயம்: தொடர்பாக அக்கறை கொள்வோமாயின், இலங்கையின் அரசியலமைப்பு நடைமுறை ஜனநாயக விழுமியங்களினதும் அரசியலமைப்பு ரீதியான அரசாங்கங்களினதும் தொலைநோக்கை ஏற்றமைவாகக் கொண்டுள்ளது. இராணுவம் மீது சிவிலியன் கட்டுப்பாடு என்பதே ஜனநாயக அரசாங்கத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். எனவே, கொள்கை வகுப்பு மற்றும் ஓர் அரசாங்கத்தின் இராணுவம் சம்பந்தப்பட்ட அரசியல் மார்க்கம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம் என்பன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கே உரித்தானது. அவர்களே அரசாங்கக் கொள்கை, சட்டம், மற்றும் அரசியலமைப்பு என்ற வரம்பிற்குள் மேற்படி கொள்கை மற்றும் இராணுவத்தின் நடத்தை குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரிகளே பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் பொறுப்பும் வகைப்பொறுப்பும் கூற வேண்டியுள்ளவர்களாவர். தமது தனிப்பட்ட அபிப்பிராயங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதிலிருந்து  இராணுவம் தம்மை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் உள்ளடக்கப் பொருளாகும். சிவிலியன் அரசியல் நிறைவேற்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டலுக்கும் அரசியலமைப்பு ரீதியாக கடப்பாடுடையவராயிருத்தல் இராணுவத்தின் வரையறையும் சட்டரீதியான கடமையுமாகும். தமது முன்னுரிமைகளையோ கொள்கைகளையோ வெளிப்படுத்துவது இராணுவத்தின் கடமைப்பொறுப்பல்ல.

ஒரு சந்தர்ப்பத்தில் 1962இல் இந்நாட்டு இராணுவம் தனது வகிபங்கிற்கு அப்பால் செல்ல முற்பட்டதை நாம் நினைவுகூர விரும்புகின்றோம். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட அன்றைய சிறீலங்கா சுதந்திரக்கட்சி தீர்க்கமான முறையில் இந்த இராணுவச் சதித்திட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரதான பங்காளரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியாகும்.

இனமோதல் பற்றிய அரசியல் அபிப்பிராயங்களைக் கட்டற்ற வகையில் தன்னிச்சையாக வெளிப்படுத்துவதற்கு ஜெனரல் சரத் ஃபொன்சேக்காவிற்கு இடமளிப்பது ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படைக் கோட்பாட்டையே மீறுவதாகும். அரசியல் விவாதங்களில் துணிகரமாகப் பங்குபற்றுவதற்கு இராணுவத்தினருக்கு இடமளிப்பது மூலம் வெறுப்பூட்டும் கடும் குளிரையும் ஐயுற்று அஞ்ச வேண்டிய நிலையையும் தற்போதை அரசாங்கம் எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும். இராணுவம் மீது சிவிலியன் கட்டுப்பாட்டை வைத்திருப்பதில் இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டமையால் எமது அயல் நாடுகளில் ஒன்றான பாகிஷ்தான் எதிர்நோக்கிய துன்பியல் அனுபவங்களை நாம் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

இனத்துவ கருத்தியல் இயல்புகொண்ட, ஆணவம் மிகுந்த அரசியல் அபிப்பிராயங்களை, ஐயமற்ற வகையிலும், உராய்பொருளாகவும் ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா இணைக்கும் விதத்தை நோக்கும்போது, ஒரு ஜனநாயக சமூகத்தில் சிவில் – இராணுவ உறவுகள் தொடர்பான நேரிய எல்லைகளை மீறி, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதையே வெளிப்படுத்துகின்றது. அரசியல் ரீதியாக சரியான ஆதாரங்களின்றி, இலங்கை எந்தச் சமூகத்திற்குச் சொந்தமானது என்ற வகையில் செய்யும் அரசியல் பிரகடனங்கள் ஜெனரல் சரத் ஃபொன்சேக்காவின் மடமையையும் கூருணர்வு இல்லாத் தன்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. அதே சமயம், தான் விடுவிப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப்பற்றி ஒன்றுமே அறியாதவராகவே ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா இவ்வாறான அரசியல் கூற்றுக்களை வெளிப்படுத்தி வருகின்றார். அபிலாசைகள் சமத்துவத்தையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டவை. இனத்துவ மத பன்மைத்துவம் எனும் இலங்கை அரசியல் சூழமைவின் கீழ் ஓர் உள்நாட்டு மோதலுக்கான தீர்வுகள் எனக்கூறுகையில், அது மிக்க சிக்கல் வாய்ந்த ஒரு பிரச்சினையாகும். பலர் அறிந்த வகையில் இன்றைய அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒப்புநோக்குகையில் ஜெனரல் சரத் ஃபொன்சேக்காவின் அபிப்பிராயங்கள் முரண்பாடானதாகவும் முன்னுக்குப்பின் மாறுபட்டதாகவும் தோன்றுகின்றது. மிக அண்மையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஐ. நா. பொதுச்சபையில் உரையாற்றிய ஜனாதிபதி பின்வருமாறு கூறியுள்ளார்: ஷஷஇப்போர் பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரானதேயொழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதே சமயம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் மாநாடு மூலம் அதிகாரப்பகிர்வு – அதிகாரப்பங்கீடு ஊடாக அரசியல் தீர்வு காணப்படும. இலங்கை அனைத்துச் சமூகங்களுக்கும் உரித்தானது|| என்றும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மேற்படி காரணங்களினால் ஜெனரல் சரத் ஃபொன்சேக்காவின் பிரகடனங்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என வருத்தத்துடனும் கண்டனத்துடனும் தெரிவிக்கின்றோம். எதிர்காலத்தில் இத்தகைய பிரகடனங்களைச் செய்யாதிருக்கும் வகையில் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியைக் கோருகின்றோம். அரசியலமைப்பின் நேரிய பண்புகளுக்கமைய சிவிலியன் – இராணுவ எல்லைகளை மீண்டும் நிலைநாட்டி மதிப்பளிக்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்துமாறும் கோருகின்றோம்.

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
நிறைவேற்றுப் பணிப்பாளர்
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்.

 

Exit mobile version