Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமூக நீதி நாள் – பெரியார் 143 –தோழர் கார்த்திக்

இன்று தந்தை “பெரியார்” பிறந்ததினம், சமூக நீதி நாளாக அறிவித்த அரசுக்கு நன்றி. “பெரியார்” என்றால் ” சமூக நீதி”. அந்த ஒற்றைவார்த்தைக்குள் தமிழக வரலாறு உள்ளது. தமிழக வரலாறு என்றால் “ராஜ ராஜ சோழன்” வரலாறா, வள்ளுவர், அவ்வை இவங்களுக்கு திராவிடமா கத்து கொடுத்துச்சு என்று தம்பிகள் வரக்கூடும். ராஜாக்களும், ஆண்ட பரம்பரைகளும் பெயருக்கு ஆள, உண்மையான சிவில் சமூகம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது. ஆண்டது ராஜராஜன் என்றாலும் அவர் குடுமி யார் கையில் இருந்தது? பார்ப்பனீயத்துக்கும், அதிகாரத்துக்கும் எதிரான குரல் பெரியாரின் குரல், பெரியார் என்னும் சொல்லாடலை இங்கு வெறும் பெயர்ச்சொல்லாக தனிநபராக புரிந்துகொள்ள வேண்டாம்? அது ஒரு செயல் ஒரு தத்துவம், அதாவது பெரியார் என்னும் வார்த்தைக்கு பொருள் “சமூக நீதி”. ஆம் இது “சமூக நீதி” நாள்.

“சமூக நீதி” என்னும் வார்த்தைக்குள் வரலாறு உண்டு. எத்தனை முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது. எத்தனை எத்தனை பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து இருக்கிறது.Gross Enrollment Ratio (GER) அதில் தமிழகத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கை ரிக்ஷவை ஒழித்துள்ளது, பேருந்துகளை அரசுடமை ஆக்கியதால், பேருந்து சாதி ஒழிப்பிற்க்கான குறியீடாக மாறுகிறது. படிப்பு, வேலைவாய்ப்பு, சாதி மறுத்து திருமணம் செய்வதெல்லாம் அந்த ஒற்றை வார்த்தையின் வரலாறு தான். கோடிக்கணக்கான பேரின் வாழ்வியலுக்கு உண்டான மாற்றத்தை “சமூக நீதி” என்னும் ஒற்றை வார்த்தையில் அடைக்கலாம். ஒரே ஒரு வார்த்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மாற்றம் என்றால் அது மிகப்பெரிய தத்துவம் தானே. ஒரு தத்துவம் தத்துவமாக நின்று விடாமல் வரலாறாக மாறுகிறது.

காலை எழுந்தவுடன் time line முழுவதும் பெரியார் படங்கள், பெரியார் போஸ்ட்கள். பெரியார் தொடர்ச்சியாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறார். அவரை பேசுவதற்கான தேவை இங்கு இருந்துகொண்டே உள்ளது. பெரியாரை முன்னிறுத்துவதை ஒரு செயலாகவே தோழர்கள் செய்கிறார்கள். எழுத முடிந்தவர்கள் எழுதுகிறார்கள், profile படம் மாற்றுகிறார்கள்,

குழந்தைகளுக்கு பெரியார் வேடம் போட்டு மகிழ்கிறார்கள். பெரியார் புத்தகங்களை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். “பெரியார்” என்றால் “செயல்”, பெரியார் பேத்திகள், பேரன்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். தோழர் சுகுணா திவாகர் எழுதிய “அஞ்சிறை தும்பி” சிறுகதை தொகுப்பில் பெரியார் time machine ஏறி வருகிறார். சமகால இளைஞனுடன் உரையாடுகிறார், சுயவிமர்சனமும் செய்துகொள்கிறார். ஒரு தலைவரை, ஒரு குறியீடை ஒரு செயலை சுட்டிக்காட்டி அவரை நீங்க இப்படி செய்திருக்கலாம் அய்யா என்று சொன்னால், அந்த டைம் machine மூலம் வந்த பெரியார் ஆமாம் தம்பி அந்த நேரத்துல அவ்வளவு தான் அறிவு இருந்துசச்சு என்பார்.. இப்படி ஒரு காட்சியை எழுதியது பெரியாரிஸ்ட் சுகுணா திவாகர் தோழர், எந்த தலைவருடன் ஒரு தொண்டன் இது தவறு திருத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லமுடியும், இது கதை தான் என்றாலும் பெரியாரிடம் தவறென்றால், அவர் மாற்றிக்கொள்ளும் தலைவராகவே இருந்திருப்பார். அது தான் பெரியார். சுட்டுக்காட்டுகிறானே அவர் பெரியார் பேரன், தன்தலைவர் தவறு செய்தால் அதை விமர்சனம் செய்வது அவர் தொண்டன். அது தான் பெரியாரியம் சொல்லிக்கொடுத்த “சமூக நீதி”.

யார் என்ன என்று பார்க்காமல் கேள்விகளை முன்வைப்பது “சமூக நீதி”. சொல்லப்போனால் கேள்வி கேட்பவர்களேயே சமூகம் வளர்ந்துள்ளது. இது வெறும் அரசியல் கண்ணோட்டம் மட்டுமல்ல, அறிவியல் கண்ணோட்டமும் கூட. “ஏன்” என்னும் கேள்வியிலேயே அறிவியல் வளர்ந்துள்ளது. எதையும் கேள்விகேட்காமல் இருப்பவன் சமூகத்துக்கு நல்ல பையனாக பேர் எடுக்கலாம், ஆனால் அவனால் ஒரு நன்மையையும் இல்லை. அறிவியலில் கேள்வி கேட்கும்பொழுது ஒரு புது கண்டுபிடிப்பாக மாறுகிறது. அரசியலில் கேள்வி கேட்கும்பொழுது, சாதி மதம் கடவுள் என்று அனைத்து விழுமியங்களும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. கேள்வி கேட்பதென்பது, பதில் தேடுவதற்கான தொடக்கம். “பெரியார்” என்பது “கேள்வி”, ஆதிக்கத்துக்கு எதிரான “கேள்வி”

அந்த கேள்வியே சாதியை கேள்விகேட்டது, சாதி ஒழிந்துவிட்டதா இல்லை. ஆனால் அதனை பெயர்க்கும் பௌதிக சக்தியை நமக்கு கொடுத்தது. பலரை சாதி மறுப்பாளாராக மாற்றியது. அந்த கேள்வியே ஆணை கேள்விகேட்டது, பெண் அடிமை ஒழிந்தததா இல்லை, அதை எதிர்த்து போராடும் வலிமையை கொடுத்தது. பிற்போக்குத்தனங்கள் சுனாமி போல இருக்க, அதனை எதிர்த்து எதிர்நீச்சல் போடும் தன்னம்பிக்கையை கொடுத்தது. கேள்விகேட்டலே சுற்றத்துடன் தனித்துவிடப்படுவீர்கள், அரசியல்ரீதியாக கேள்விகேட்டால் அம்மா கூட விஷம் வைக்க வாய்ப்பு அதிகம் தான். அப்படியிருக்கும் தருணங்களில் பெரியார் எல்லாம் படித்துவிட்டு நாமே நொந்து போகிறோமே? அந்த நேரத்தில் பெருசு, அந்த காலகட்டத்தில் எப்படி சண்டை செய்திருப்பார் என்று நினைக்கும்பொழுது உற்சாகம் தொற்றிக்கொள்ளும், அது தான் பெரியார்.

Exit mobile version