Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமகால மலையக இலக்கியத்தில் சி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் : எம்.எம்.ஜெயசீலன்

சமகால மலையக இலக்கியத்தில் ஸி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் (எம்.எம்.ஜெயசீலன்,விரிவுரையாளர், தமிழ்த்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்)

(சி.வி.யின் 100வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மக்கள் பண்பாட்டுக் கழகம் கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஹட்டனில் நடாத்திய சி.வி பற்றிய ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)

அறிமுகம்

‘மக்கள் நல்வாழ்விற்காகவும், அவர்கள் நாகரிகம் மேம்பாட்டை அடைவதற்காகவும் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்த பெரியார்கள் காலத்திற்குச் சொந்தமானவர்கள்’ என பேராசிரியர் கைலாசபதியின் அஞ்சலி உரையில் ஸி.வி. வேலுப்பிள்ளை கூறிய கூற்று அவருக்கும் பொருத்தமானதேயாகும். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாகத் தீவிர அக்கறையுடன் இயங்கிய அவரது எழுத்துப் பயணத்தால் மலையகத் தமிழ் இலக்கியம் மட்டுமன்றி ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியமும் பெரிதும் வளம் பெற்றுள்ளது. எழுத்துச் செயற்பாடுகளால் மட்டுமன்றி அரசியல் மற்றும் தொழிற்சங்கச் செயற்பாடுகளாலும் கல்விச் செயற்பாடுகளாலும் மலையக சமூக இயங்குதளங்களைப் புதிய திசைகளை நோக்கி நகர்த்துவதற்கு பலமுனைகளிலும் ஸி.வி செயற்பட்டுள்ளார். இவ்வாறு பல தளங்களில் இயங்கியபோதும் அவருக்கு ‘மலையகத்தைச் சாராத மற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் மத்தியில் ஏகோபித்த புகழையும் பாராட்டுதலையும் மட்டற்ற மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது அவரது கலை இலக்கியப் பணிகளே ஆகும்.’ (மேற்கோள் : சாரல்நாடன், 1986: 4,5) இலக்கியத் தளத்தில் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் மலையகத் தமிழ் இலக்கியப் பரப்பில் புது ஒளியைப் பாய்ச்சின. அவ்வகையில் சமகால மலையக இலக்கியத்தில் ஸி.வியின் படைப்பிலக்கியத் தாக்கத்தினை ஆராய இக்கட்டுரை முனைகிறது.

பெருந்தோட்டத் தொழில்துறைசார் சமூகத்தையும் அதன் தனித்துவமான வாழ்வியல் அம்சங்களையும் அச்சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளையும் பிரதிபலிக்கும் இலக்கியமே மலையகத் தமிழ் இலக்கியம் எனப்படுகிறது. எனினும் மலையகத் தமிழர் என்போர் யார் என்பதையும் மலையகத் தமிழ் இலக்கியங்கள் எவை என்பதை வரையறுப்பதிலும் பல கருத்து முரண்பாடுகள் உள்ளன. குறிப்பாக மலையகத் தமிழ் இலக்கியம் என்ற தொகுதியினுள் இன்று கிடைக்கப்பெறுகின்ற படைப்புக்களில் பெரும்பான்மையானவை பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பற்றியனவாகவே அமைந்துள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் சித்திரிக்கப்படும் அளவிற்கு மலையக சமூகத்திலுள்ள ஏனைய குழுமங்களின் வாழ்வியல் அவ்விலக்கியங்களில் பிரதிபலிக்கப்படவில்லை. ஆங்காங்கே அருகிய நிலையிலேயே ஏனைய குழுமங்கள் பற்றிய வெளிப்பாடுகளைக் காணமுடிகிறது. இந்நிலையானது மலையகச் சமூகத்தை ஒரு தேக்கநிலைச் சமூகமாகவும் கல்வி கேள்விகளில் மிகவும் பின்தங்கியவர்களாகவும்பொருளாதார வளமற்றவர்களாகவும் தொடர்ந்து கணிப்பிடுவதற்கு ஏதுவாக அமைகிறது.

பெருந்தோட்ட சமூக உருவாக்கத்தில் அதன் பலமாகவும் தளமாகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அமைந்ததாலும் அச்சமூகத்தில் தோற்றம் பெற்ற ஏனைய வர்க்க அமைப்புக்கள் அத்தொழிலாள வர்க்கத்தை அடியொற்றியும் அதன் தேவைகள் சார்ந்தும் உருக்கொண்டதாலும், மிகப் பெரும்பான்மையாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு பல சமூகத் தட்டுக்களைத் தன்னுடன் உருவாக்கி வளரும் ஒரு சமூகமாக மலையகத் தமிழர்கள் உருவெடுத்திருந்தார்கள். (சாந்திகுமார், எல்: 1981, சிவத்தம்பி,கா: 1993) எனவே, அச்சமூக உருவாக்க காலத்து இலக்கியங்கள் அத்தொழிலாளரின் வாழ்வினையே பெரிதும் பிரதிபலித்தன. பிரதிபலிக்க வேண்டும். எனினும், பெருந்தோட்ட சமூக உருவாக்க காலத்தைவிட அதன் வளர்ச்சிப் போக்கில் அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அச்சமூகத்தின் குறிப்பிட்டதொரு பகுதியினர் பெருந்தோட்டத் தொழில்துறைக்குள் மூடுண்ட நிலையிலிருந்து விடுபட்டு, அரச, தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுவதுடன் பெருந்தோட்டங்களைச் சார்ந்த நகரங்களில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் சிறிய மற்றும் பெரிய வணிக முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர். அத்தோடு அச்சமூகத்தின் பிரதான பொருளாதார சக்தியாக அமைகிற தோட்டத் தொழிலாளரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவருகின்றது.

எனவே, சமகால மலையகத் தமிழ் இலக்கியத்தில் பெருந்தோட்டத்துறைசார் சமூகத்தினர் எதிர்கொள்ளும் புதிய சவால்களும் நெருக்கடிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதோடு அச்சமூகத்திலிருந்து மேற்கிளம்பும் மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வியலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எனினும், அவற்றை சமகால மலையகத் தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் பிரக்ஞைபூர்வமாக வெளிப்படுத்திவருகிறார்களா என்பது தனித்த ஆய்விற்குரியது.

ஐஐ

மலையகத் தமிழரின் வாழ்வியலை யதார்த்தபூர்வமாக இலக்கியமாக்கிய முன்னோடிகளில் ஸி.விக்கு முதன்மையான இடமுண்டு. ஸி.வி எழுத்துலகில் அறிமுகமாவதற்கு முன்பும், எழுத்துலகில் அறிமுகமாகி மலையகத் தமிழரின் வாழ்வியலை பிரக்ஞைபூர்வமாக வெளிப்படுத்தத் தொடங்கிய 1940களின் பிற்பகுதியிலும், இலக்கியகர்த்தாக்கள் பலர் மலையகத்தில் இருந்தபோதிலும் அவர்களது படைப்புக்களில் மலையகத் தமிழரின் வாழ்வியல் அம்சங்கள் முனைப்புப்பெற்றிருக்கவில்லை. ‘சமயச்சார்பான பாடல்களையே அதிகம் பாடியுள்ள அருள்வாக்கி அப்துல்காதிர் புலவர் (1866 – 1918) மலையகத்திலே (தெல்தோட்டையில்) வளர்ந்ததனாற்போலும், மலையகச் சூழலை பிரதிபலிக்கும் வகையில் கும்மிப்பாடல்களையும் நொண்டிச்சிந்து முதலியவற்றையும் இயற்றியுள்ளார். எனினும் தொழிலாளர் பற்றிய அம்சங்கள் அவற்றில் முக்கியத்துவம் பெறவில்லை. இதேபோன்றே கா. பெரியசாமிப்பிள்ளை, வி.எஸ். கோவிந்தசாமிதேவர், எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை, பி.ஆர். பெரியசாமி, கா.சி. ரெங்கநாதன், தொண்டன் எஸ்.எஸ். நாதன், பதுளை வ. ஞானபண்டிதன், சிதம்பரநாதபாவலர், சீனிவாசகம், எஸ்.எம். ராஜப்பா முதலியோரது இலக்கிய முயற்சிகளும் அமைந்துள்ளன. இவர்களுள் அதிகமானோரின் ஆக்கங்கள் சமயச்சார்புடையனவாகவும் நாட்டுவளத்தினையும் இயற்றை அழகினையும் வருணிப்பவையாகவும் ஓரிரு இடங்களில் தொழிற்சங்கம், அரசியல், சமூகம் முதலியன தொடர்பான விடயங்களைச் சுட்டி நிற்பனவாகவும் அமைந்துள்ளன. (அருணாசலம், க, 1994: 95,96) அத்தோடு மலையகத் தமிழரின் எழுச்சிக்கான வீறார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்த முன்னோடிகளுள் ‘நடேசையர், டி. சாரநாதன், டி. இராமானுஜம் போன்றோரது எழுத்துக்களும் ஏடுகளும் பத்திரிகைத் தொடர்புகளும் இலக்கியப்படைப்புக்களாக இல்லாமல் போய்விட்டன. அந்த எல்லையைத் தொட்டவர் ஸி.வி. வேலுப்பிள்ளை ஒருவரேயாவார்’ (சாரல்நாடன், 1986: 07) அவ்வகையில் மலையகத் தமிழ் இலக்கியம் என்ற புதிய இலக்கியப் பாரம்பரியத்தின் மேற்கிளம்புகைக்கும் அதன் வளர்ச்சிக்கும் வளமான அத்திவாரமிட்டதில் ஸி.வி. வேலுப்பிள்ளையின் பங்களிப்பே கனதியானதெனலாம்.
ஸி.வியின் கலை – இலக்கிய வாழ்வினை பின்வருமாறு பகுத்து நோக்கலாம்,

01. படைப்பாக்கம் (கவிதை, புனைகதை)
02. நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
03. கட்டுரை
04. பேனாச்சித்திரம்
05. இதழியல் செயற்பாடு

இவ் ஐந்து தளங்களும் பெரும்பாலும் மலையகப் பெருந்தோட்டத் தொழில்துறை சமூகத்தின் வாழ்வியலைப் பொருண்மையாகக் கொண்டுள்ளதோடு, அம்மக்களின் வரலாறு மற்றும் இனவரைவியலின் தகவற்களஞ்சியமாகவும் விளங்குகின்றன.

ஒரு கவிஞனாக படைப்புவெளியில் அறிமுகமான ஸி.வியின் படைப்புலகம் தனித்துவமானது. ‘அவரின் ஆரம்பகால கவிதைகள் தாகூரின் ரொமாண்டிச பாதிப்பிற்கு உட்பட்டனவாக அமைந்திருந்தன.’ (சாரல்நாடன், 1986) ஆனால், பிற்பட்ட காலத்தில் அப்பாணியிலிருந்து விடுபட்டு சமுதாயப் பார்வை கொண்டவையாக அவரது இலக்கியச் செயற்பாடுகள் அமையத்தொடங்கின. இத்தளமாற்றத்திற்கு ஸி.வியின் அரசியல் மற்றும் தொழிற்சங்கச் செயற்பாடுகளும், நாடு சுதந்திரமடைந்த பின்னர் மலையகத் தமிழருக்கு அரசு இழைத்த கொடுமைகளும், ஜோர்ஜ்கீற்றுடனான ஸி.வியின் தொடர்பும் பிரதான காரணிகளாக அமைந்தன எனலாம். ஜோர்ஜ்கீற்றுடனான தொடர்பு ஏற்படுத்திய தாக்கத்தினை ஸி.வி பின்வருமாறு கூறியுள்ளார்:

‘ஐம்பதுகளின் முற்பகுதியில் தான் நான் திரு. ஜோர்ஜ் கீற்றைச் சந்தித்தேன்… மலைநாட்டு மண்வளத்திற்கு எனது கவனத்தைத் திருப்ப அவரது ஆலோசனைகள் தான் காரணமாயிருந்தன. மலைநாட்டு மக்கள், அவர்களது சுகதுக்கம், பழக்கவழக்கம், நாடோடிப்பாடல்கள் போன்றவற்றில் நான் ஈடுபாடு கொண்டேன்’ (மேற்கோள், சாரல்நாடன், 1986: 13,14)
எனவே, ஸி.வியின் படைப்பு மனதை மலையகத் தமிழரின் வாழ்வியல் வெளிக்குள் ஆற்றுப்படுத்தியதில் ஜோர்ஜ்கீற்றின் பங்களிப்பு முக்கியமானதெனலாம். இப்பின்னணியில் மலையகத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் முன்னோடியாக மேற்கிளம்பிய ஸி.வி அவ்விலக்கிய மரபின் நிலைபேறுக்கான பல வாயில்களையும் அமைத்துத் தந்துள்ளார். அவற்றுள் மலையகத் தமிழ் இலக்கியம் என்ற தனித்த அடையாளத்திற்கான பொருண்மைகளும் அதனை வெளிப்படுத்துவதற்கான மொழியும் விசேடமாகக் கவனத்தில் கொள்ளத்தக்கன.

பெருந்தோட்டத் தொழில்துறைச் சமுதாயத்தின் அமைப்பு, அதன் இயக்கம், அம்மக்களின் துயர்தோய்ந்த வரலாறு, வாழ்க்கைப் போராட்டங்கள், அவர்களின் கலை, பண்பாட்டுக் கூறுகள் என்பனவற்றோடு அத்தொழிலாளர்களின் தோல்விகள், எதிர்கால நம்பிக்கை போன்றவற்றைப் பாடுபொருளாக்கி, மலையகத் தமிழ் இலக்கியம் என்ற தனித்த அடையாளத்திற்கான பொருண்மைகளை ஸி.வி. உருவாக்கித்தந்துள்ளார். அப்பொருண்மைகளின் வெளிப்பாடு ஆங்கிலத்தில் அமைந்த காரணத்தால் மலையகத் தமிழரின் துயர்தோய்ந்த வாழ்வு தமிழ் எல்லைகளைக் கடந்து அறியப்பட்டதுடன் உலக அரங்கில் மலையகத் தமிழ் இலக்கியத்திற்னாக வலுவான ஏற்புடமையும் ஏற்படத்தொடங்கியது.

ஸி.வி தேர்ந்தெடுத்த இப்பாடுபொருள்களே பிற்காலத்தில் பல தளங்களில் விரிவடைந்து, மலையகத் தமிழ் இலக்கியத்தின் காத்திரமான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததோடு பெருந்தோட்டத் தொழில்துறை சமூகம் குறித்த பரந்தளவிலான கருத்தாடல்களை முன்னெடுப்பதற்கும் காரணமாக அமைந்தன. குறிப்பாக 1960களில் மலையகத்தில் மேற்கிளம்பிய ஆத்திரப்பரம்பரை என்றுகூறப்படுகின்ற இளந்தலைமுறையினரின் வீறார்ந்த செயற்பாடுகளுக்கு ஸி.வி ஏற்படுத்தித்தந்த களமே தளமாக அமைந்தது. அத்தோடு அப்புதிய தலைமுறையினரின் வளர்ச்சியை ஆதரித்து அவர்களுடன் உடன்நின்று ஊக்கமளித்தவராகவும் ஸி.வி விளங்கியுள்ளார். இதனை அப்புதிய தலைமுறையினரின் முன்னணிச் செயற்பாட்டாளரான இர. சிவலிங்கத்தின் பின்வரும் கூற்றின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

‘..1960களில் புதியதோர் ஆத்திரப்பரம்பரை தலைதூக்கியது. எழுத்திலும் பேச்சிலும் கவிதையிலும் சீற்றமிகுந்த இளந்தலைமுறையின் துடிப்பும் விழிப்பும் மலையகத்தை இனங்காட்டியது. பழந்தலைவர்கள் அருவெறுப்போடும் அலட்சியத்தோடும் இப்புதிய போக்கினை நோக்கினர். ஸி.வி அவர்கள் இப்போக்கினை ஆதரித்தார். இதன் வளர்ச்சியை விரும்பினார். இக்கால இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார்கள். இளந்தலைமுறையினரை உற்சாகப்படுத்தினார்கள். முற்போக்கு இலக்கியவாதிகளோடு இணைந்துநின்றார்கள்’ (நாடற்றவர்கதை முன்னுரை, 1987: 13)

இத்தகைய பின்னணியில் 1960களில் பரந்தளவிலான கவனிப்பைப் பெற்ற மலையகத் தமிழ் இலக்கியம் 1980களில் மேலும் விகசிப்பு அடைந்தது. எனினும், 1990களின் பின்னர் மெல்ல அவ்வளர்ச்சி குன்றத்தொடங்கி இரண்டாயிரத்திற்கு பிற்பட்ட காலத்தில் அதன் வேகத்தில் பாரிய தளர்ச்சியை நோக்கி நகர்வதைப் போலத் தெரிகிறது. சமகால மலையக இலக்கிய கர்த்தாக்களிடம் மாறிவரும் மலையக சமூகத்தின் வாழ்வியல் கோலங்களை பிரக்ஞைபூர்வமாக வெளிப்படுத்துவது அருகியே காணப்படுவதோடு இலக்கியப் பரப்பில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வலிமையும் அப்படைப்புக்களில் அரிதாகவே வெளிப்படுகிறது. என்றாலும் படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மலையகப் பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஓர் ஆரோக்கியமான நிலையெனலாம்.

பெருந்தோட்டத் தொழில்துறைசார் பெண்களின் அவலங்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் முனைப்புடன் வெளிப்படுத்துதல் மலையகத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பண்புகளில் ஒன்றெனலாம். புதுமைப்பித்தன் முதல் நடேசையர் உள்ளிட்ட மலையக இலக்கியத்தின் முன்னோடிகளது படைப்புக்களிலும், பிற்காலத்தில் தோன்றிய படைப்பாளிகளதும், அண்மைக்காலங்களில் மேற்கிளம்பிவரும் பெண் படைப்பாளிகளின் படைப்புக்களிலும் பெருந்தோட்டத் தொழில்துறைசார் பெண்களின் அவலங்கள் பரந்தளவில் பேசப்பட்டேவருகின்றன. புதுமைப்பித்தனைத் தவிர்த்து, மலையகப் பிராந்தியத்தில் மேற்கிளம்பிய படைப்பாளிகளில் பெருந்தோட்டத் தொழில்துறைசார் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களை யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்தியவர்களில் முன்னோடியாக விளங்குபவரும் ஸி.வி. வேலுப்பிள்ளையே ஆவார். அவரது தேயிலைத்தோட்டத்திலே என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் பெருந்தோட்டத் தொழில்துறை பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களை சிறப்பாகப் பதிவு செய்துள்ளன. ஒருவகையில் பெருந்தோட்டத் தொழில்துறைப் பெண்கள் தொடர்பான மொத்தப் படைப்புக்களின் இயங்குதளம் அக்கவிதைகளின் பொருண்மைகளை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளதெனலாம். எடுத்துகாட்டாக,

தளர்ந்த உடலம் ஃ தாங்காச் சுமையைத்
தாமே சுமந்து ஃ தளிர் இளம் மாதர்
வளர்ந்த மலைகள் ஃ மடுக்கள் முதலாய்
விரைவரே! மிருகச் ஃ சுமை யூர் வலமென

பளுவைத் தாளாது ஃ பட்டுடல் நொந்து
பாவையர் முகமெலாம் ஃ வியர்வையே சிந்த
உளமும் ஏங்கி ஃ ஒருவர் பின் ஒருவராய்
ஒடுங்கியே நிறுவை ஃ முறையினை மேவும்

நேரம் நோக்கி ஃ நின்று, நின்று
நினைப்பும் சோர்ந்து ஃ நலிவரே: இவர்தம்
பாரம் உள்ளப் ஃ பாரமோ! உலகப்
பாரமோ – யாரே ஃ பகரவும் கூடும்!
வெட்கமும் துயரமும் ஃ வேதனைப் பளுவும்
முட்களாய் உள்ளம் ஃ முழுமையும் துளைக்கினும்
வீட்டுப் பணியில் ஃ தம்துயர் களைந்து
வாட்டும் வறுமைதனையும் மறந்து ஃ பிள்ளையும் கணவனும்
புசிப்பதற்குணவு ஃ கொள்ளை கொள் பாசக்
குறிப்புடன் சமைப்பளே! ஃ இரவும் நெருங்கும்
இவளுடல் சோர்வால் ஃ தரையிலே பழம்பாய்
தனில் விழுந்தயருமே ஃ ஆயினும்
அன்னாள் அயர்வும் ஃ நித்திரையாமோ!
அவ்விருட் காலத்தும் ஃ அமைதி மேவுமோ!
முன்னைய வெறுமைக் ஃ காலக்கனவிலும்
மூடுபனி சூழ் ஃ உதய நினைவிலும்
கண்விழிப்பூட்டும் ஃ பறைக்குமுறலிலும்
கடுமையாம் துன்பப் ஃ பாரந் தனிலும்
கண்ணிமை திறந்தும் ஃ மூடியும், இரவுக்
காலம் போக்குதல் ஃ கற்பனையல்லவே
கனவும் அல்லவே
……………….
வினை மனைகளிலும் ஃ வேலைத்தளத்திலும்
மனம்விரும்பாத மங்கையர் தம்மை ஃ அற்பர்களான
அதிகாரிகளோ ஃ கற்பைக் கெடுக்கும்
காமப்பேய்களாய் ஃ எழில் மிகுகுமரியர்
வாழ்வைக் கெடுப்பதை ஃ இங்கவர் சீவியம்
பாழ்படச் செய்வதை ஃ பொழியும் வானமும்
அன்னை பூமியும் ஃ பொறுக்குமோ உள்ளம்
பொறுக்குமோ… (ஸி.வி. வேலுப்பிள்ளை, 2007:32-38)

இப்பொருண்மைகளே பிற்பட்ட காலத்தில் வௌ;வேறு நோக்குமுறைகளில் வௌ;வேறு எடுத்துரைப்புக்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் குறிஞ்சித் தென்னவன், தமிழோவியன், முரளிதரன், மல்லிகை சி. குமார், நித்தியானந்தன் போன்றவர்களின் கவிதைகளும் மலையகப் பெண்கவிஞர்களின் குறிஞ்சிக்குயில்கள் மற்றும் இசை பிழியப்பட்ட வீணை முதலிய கவிதைத் தொகுப்புக்களும் என்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன்பன், மு.சிவலிங்கம், மொழிவரதன், சிவனுமனோகரன் உள்ளிட்ட பல படைப்பாளிகளின் சிறுகதைகளும் கோகிலம் சுப்பையா, தெளிவத்தை ஜோசப், தி.ஞானசேகரன் போன்றவர்களின் நாவல்களும் குறிப்பிடத்தக்கன.

ஐஐஐ

ஸி.வி தான் தேர்ந்தெடுத்த கருப்பொருட்களை செம்மையாக சித்திரித்தது போலவே அவற்றை வெளிப்படுத்திய வடிவங்களையும் பிரக்ஞைபூர்வமாகவே கையாண்டுள்ளார். ஸி.வி அடிப்படையில் ஒரு கவிஞராவார். அவரது எல்லாவகை எழுத்துக்களிலும் அக்கவிதை முகத்தினை அடையாளங்காணமுடியும். மொழிபெயர்ப்பின் வழியேதான் தமிழுக்கு அவரது கவிதைகள் அறிமுகமானபோதும் மலையகத் தமிழ்க்கவிதை வளர்ச்சியை எழுதுவோர் எவரும் அவரை எளிதில் புறக்கணிக்க முடியாதுள்ளது. உதாரணமாக மலையகத் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றி கூறும்போது பேராசிரியர் க. அருணாசலம் “மலையக இலக்கிய உலகில் ‘இமயம்’ என உயர்ந்து நிற்கும் ஸி.வி. வேலுப்பிள்ளை அவர்களை, மலையகத்துப் பாரதி எனலாம்” (க.அருணாசலம், 1994: 167) என்று கூறியுள்ளார். மலையகத்தில் பிற்காலத்தில் தோன்றிய குறிஞ்சித் தென்னவன், தமிழோவியன, அரு. சிவானந்தன், சு. முரளிதரன் போன்ற கவிஞர்கள் வௌ;வேறு தளங்களில் முக்கியம் பெற்ற போதும் அவர்கள் எவராலும் ஸி.வியின் எல்லையை எட்டமுடியாமல் போய்விட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

ஸி.வியின் கவிதைகளில் மேலோங்கியிருந்த நவீன கவிதைக்குரிய உருவப் பிரக்ஞை, அவரைத் தொடர்ந்து மலையகக் கவிதைப் பரப்பை ஆக்கிரமித்த குறிஞ்சித் தென்னவன், தமிழோவியன் போன்றோரது கவிதைகளில் வெளிப்படாமல் போனமை ஒரு துரதிஸ்டமே எனலாம். அவர்களது கவிதை வெளிப்பாடானது சமகால தமிழ்க் கவிதையுடன் இணைந்ததாக அமையாமல் பெரும்பாலும் நாட்டாரியல் தன்மை கொண்டனவாகவே அமைந்துள்ளன. ஸி.வியின் கவிதைகள் ஆங்கிலத்தில் அமைந்தமையும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பின் போதாமைகளும் நவீன கவிதைக்குரிய வடிவக் கச்சிதம் மலையகத்தில் தொடர்ச்சியற்றுப்போனமைக்கு ஒரு காரணமெனலாம். இந்நிலையானது மலையகக் கவிதை வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திற்று என்பது மறுக்கமுடியாது.

மலையகத் தமிழ்க்; கவிதையானது ஒட்டுமொத்த தமிழ்க் கவிதை மரபோடு ஒப்பிடும் போது சற்று வீரியம் குன்றிய நிலையிலேயே காணப்படுகிறது என்பது பலரதும் கணிப்பாகும். இக்கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ஸி.வியுடன் மேற்கிளம்பிய மலையக நவீன கவிதைக்குரிய வடிவக் கச்சிதம் தொடர்ச்சியற்றுப் போனதோடு உடனடி தளமாற்றம் எதனையும் அக்கவிதை மரபு பெறவில்லை. மேலும், ஸி.வி, குறிஞ்சித் தென்னவன், அல் அஸ்மத், தமிழோவியன், க.ப. லிங்கதாஸ், மல்லிகை சி.குமார், அரு. சிவானந்தன், சு. முரளிதரன், இரா. நித்தியானந்தன் போன்ற கவிஞர்களைத் தொடர்ந்து விசேடமாக அடையாளப்படுத்தக் கூடிய கவிஞர்கள் யாரும் மலையகத்தில் இன்னும் தோற்றம் பெறவுமில்லை. கவித்துவ வீச்சுச் செறிந்த பல கவிஞர்கள் மலையகத்தில் இருக்கின்ற போதும் தொடர்ந்தேர்ச்சியாக அவர்கள் இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபடாமலிருப்பதாலும் அவர்களது உதிரியான கவிதைகள் தொகுத்து வெளியிடப்படாமையாலும் இத்தகையதொரு நிலைமை தொடர்கிறது எனலாம். என்றாலும் மலையகத் தமிழ்க் கவிதைப் பரப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மலையகப் பெண்கவிஞர்களின் ‘இசைபிழியப்பட்ட வீணை’ என்ற தொகுப்பு அமைகின்றதென்பது மகிழ்ச்சிக்குரிய ஓர் அம்சமாகும். ‘மலையகத் தமிழ்க் கவிதைப் பரப்பில் புதிய ஒளியைப் பாய்ச்சும் வகையில் இசை பிழியப்பட்ட வீணை தொகுப்பில் உள்ள பல கவிதைகள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக புனிதகலா, சந்திரலேகா கிங்ஸ்லி, எஸ்தர் லோகனாதன், சாரதாம்பாள், வே. சசிகலா போன்ற பலரது கவிதைகள் மலையகத் தமிழ்க் கவிதைப் பரப்புக்கு செழுமைத் தரக்கூடியவையாக அமைந்துள்ளன. அவர்களது படைப்புக்கள் யாவும் தனித்தனி தொகுப்புக்களாக வெளிவருமானால் அவர்களின் படைப்பாற்றல் குறித்தும் மலையகத் தமிழ்க் கவிதையின் வளர்ச்சிப் போக்கு குறித்தும் புதிய கருத்தாடல்களுக்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.’ (ஜெயசீலன். எம்.எம், (க.ஆ) 2012: 04)

மலையகத் தமிழ்நாவல் வளர்ச்சியிலும் ஸி.வியின் பங்களிப்பு காத்திரமானதாகும். மலையக நாவலாசிரியன் என்ற வகையில் இற்றைவரை அதிகமான நாவல்களை எழுதியவராக அவரே விளங்குகின்றார். வாழ்வற்றவாழ்வு, பார்வதி, எல்லைப்புறம், காதல் சித்திரம், வீடற்றவன், இனிப்படமாட்டேன் ஆகியன அவர் எழுதிய நாவல்களாகும். அவற்றில் பார்வதி, எல்லைப்புறம் என்பன இன்னும் நூலுருப்பெறவில்லை.

நாவல் என்ற கலைச்சாதனமானது மலையகத் தமிழ் இலக்கியப் பரப்பில் வளமான போக்கிலேயே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ‘மலையகம் தொடர்பாக இதுகாலவரை வெளிவந்த ஆகக்கூடியது முப்பது நாவல்களுள் தரமானவை என்ற வகையில் ஆகக்குறைந்தது பதினேழு நாவல்களையாவது எவ்வித தயக்கமுமின்றி தெரிவு செய்யலாம். மலையகம் பற்றிய நாவல்கள் அந்த அளவிற்குச் சிறந்து விளங்குவது மனங்கொளத்தக்கது’ (க. அருணாசலம், 1999:05) என்ற பேராசிரியர் க. அருணாசலத்தின் முடிவு ஏற்கத்தக்கதேயாகும். எனினும் மலையகத்தின் முதல் நாவல் எது, எப்போது வெளிவந்தது என்பன தொடர்பாக தெளிவான முடிவுகள் இன்னும் எட்டப்பெறவில்லை. கிடைக்கப்பெற்ற நாவல்களுள் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தினகரன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்த ஸி.வியின் ‘வாழ்வற்ற வாழ்வு’ என்ற நாவலே காலத்தால் முந்தியதாக அமைகிறது. 1960ஆம் ஆண்டுக்கு முன்னரே மு.வெ.பெ. சாமி அவர்களின் ‘யார் கொலைகாரன்’ (1952) டீ.எம். பீர். முஹம்மது அவர்களின் ‘கங்காணி மகள்’ (1954) ஆகிய இரு நாவல்களும் வெளிவந்ததாக குறிப்பிடப்பட்டாலும் அவை இன்று கிடைக்கப்பெறவில்லை. (அருணாசலம், க, 1999)

ஸி.விக்கு பின்னர் நாவல் முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் நந்தி, கோகிலம் சுப்பையா, யோ. பெனடிக் பாலன்,தெளிவத்தை ஜோசப், கே.ஆர். டேவிட், தி.ஞானசேகரன், க. சதாசிவம், மாத்தளை சோமு, மாத்தளை ரோஹினி போன்ற பலர் விசேடமாக குறிப்பிடத்தக்கவர்கள். எனினும் தற்காலத்தில் மலையகத் தமிழ் நாவல் இலக்கியம் பெரும் தேக்கநிலையடைந்துள்ளமை கண்கூடு. அண்மைக்காலத்தில் பெயர் சொல்லக்கூடிய அளவில் எந்த நாவலும் நாவலாசிரியனும் மலையகத்தில் தோற்றம் பெறவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். மலையகத்தில் மட்டுமல்லாது இலங்கைத் தமிழ்ச் சூழலிலும் காத்திரமான நாவல்களின் வரவு அண்மைக்காலத்தில் அருகியே காணப்படுகின்றது.

மலையகத் தமிழ் இலக்கியத்தில் இற்றைவரை மிகவும் உன்னதமான கலைச்சாதனமாக சிறுகதையே விளங்கிவருகின்றது என்பதில் மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சிறுகதை உலகிற்கு வளமான சிறுகதையாசிரியர்கள் சிலரையும் பல சிறுகதைகளையும் தந்த பெருமை மலையக இலக்கியத்திற்குண்டு. ஸி.வியின் சிறுகதை இலக்கியத்திற்கான பங்களிப்பு காத்திரமானதாக அமையாவிட்டாலும் அவர் சிறுகதை எனும் இலக்கியவடிவத்தின் முக்கியத்துவத்தினையும் மலையகத்தில் அதனுடைய வளர்நிலையையும் நன்கு உணர்ந்திருக்கிறார் எனலாம். அதனுடைய ஒரு வெளிப்பாடே ‘கதை’ (1960 களில்) எனும் சிறுகதைக்கான அவரது சஞ்சிகையாகும். துரதிஸ்டவசமாக அச்சஞ்சிகை முதல் வரவினோடே நின்றுபோய்விட்டது. என்றாலும் மலையகத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அச்சஞ்சிகைக்கும் முக்கிய இடமுண்டு. அத்தோடு மலையகத்தின் முன்னணி சிறுகதை எழுத்தாளர்கள் பலரும் ஸி.வியின் எழுத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்டவர்களாகவே விளங்குகின்றனர்.

ஸி.வியின் இலக்கியச் செயற்பாடுகளுள்ளே மகுடமாக அமைவது, மலையகத்தமிழரின் முதுசொமான நாட்டார் இலக்கியத்தில் ஒருபகுதி நாட்டார் பாடல்களைத் தொகுத்ததன் மூலம் மலையகப் படைப்பியக்கத்தின் ஊற்று மூலங்களை அடுத்த தலைமுறைகளுக்கு கையளித்தமையாகும். உலகளாவிய ரீதியில் நாட்டார் வழக்காற்றியல்சார் அம்சங்களைத் தொகுத்தலும் பகுத்தலும் அவற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்தலும் என பலதளங்களில் ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன. தமிழ்ச் சூழலிலும் இவ்வகை ஆய்வுகள் பெருகிவருகின்றன. மலையகத்தில் இதனைத் தொடக்கிவைத்த பெருமை ஸி.வி அவர்களையே சாரும். அவரின் ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ என்ற தொகுப்பே மலையகத்தின் முதலாவது நாட்டாரியல் தொகுப்பாக அமைகிறது. அத்தொகுப்பாக்கத்தின் தொடர்வளர்ச்சியாகவே சாரல்நாடன், சு.முரளிதரன், மு.சிவலிங்கம் போன்றோரது மலையக நாட்டாரிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் அமைகின்றன.

ஸி.வியின் படைப்புக்களில் அதிகமாக பேசப்பட்ட விடயங்களில் ஒன்று அவரது படைப்புக்களில் இயல்பாக வெளிப்பட்டுள்ள மலையக மக்களின் பேச்சுவழக்காகும். ஆரம்பகாலத்தில் ஆங்கிலத்தில் எழுதிய ஸி.வி ஆங்கிலத்திலும் மலையகத் தமிழரின் பிராந்திய பேச்சுவழக்கினை சிறப்பாக கையாண்டுள்ளதோடு பிற்காலத்தில் தமிழில் எழுதத் தொடங்கிய காலத்தும் அவரது படைப்புக்களில் வெகு இயல்பாக மலையகப் பிராந்திய வழக்கு வெளிப்பட்டுள்ளது.
முடிவுரை

ஒரு படைப்பாளியின் தாக்கமானது: படைப்புலகம், படைப்பாளிக்கும் காலத்திற்கும் இடையிலான உறவு, காலத்தின்மீது படைப்பாளி நிகழ்த்த வேண்டிய எதிர்வினை, சிறந்த பயிற்சியுடன் இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபட வேண்டியதன் அவசியம் போன்றன பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும். அப்படைப்பாளியின் வெற்றிகளிலிருந்து மாத்திரமன்றி தோல்விகள், பலவீனங்களிலிருந்தும் இவை கருக்கொள்கின்றன. எனவே, மலையகத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான ஸி.வி வேலுப்பிள்ளையை கண்டடைவதும் கண்டறிவதும் காலத்தின் தேவையாகும்.

1960-களிலிருந்து மலையகத்தில் ஏற்பட்ட வீறார்ந்த எழுச்சிக்கும் மலையகத் தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட வளர்ச்சிக்கும் பெருந்தோட்டத் தொழில்துறைசமூகம் குறித்த புதிய கருத்தாடல்களுக்கும் வழிசமைத்தவர்களில் ஸி.வி. வேலுப்பிள்ளைக்கு முதன்மையான இடமுண்டு. மலையகத் தமிழ் இலக்கியப் பரப்பில் அவர் தொடக்கிவைத்த புள்ளிகளின் தாக்கங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இற்றைவரை பிரதிபலிக்கின்றன. மலையகத் தமிழ் இலக்கியம் என்று தனித்து பரந்தளவில் கவனிப்பைப் பெற்ற 1960களிலிருந்து தற்காலம் வரை மலையகத்தில் தோன்றிய பெரும்பாலான படைப்பாளிகள் ஸி.வி என்ற படிமத்துடன் இணக்கமாகவும் ஒட்டியும் இயங்கியுள்ளதையும் இயங்கிவருவதையும் காணலாம்.

சமகால மலையகத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை ஸி.வியின் நேரடியான தாக்கத்தை விட மறைமுகமான தாக்கங்களே அதிகமாக வெளிப்படுகின்றன. இந்நிலைமைக்கு ஸி.வியின் படைப்புக்கள் யாவும் சமகால படைப்பாளிகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதும், அவர் தொடர்பான சீரிய ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படாமையும் முக்கிய காரணங்களெனலாம். எனவே, அவரது தொகுக்கப்படாத எழுத்துக்களைத் தொகுத்தலும் வெளிவந்தவற்றை மறுபதிப்பு செய்தலும் மொழிபெயர்ப்புக்களின் போதாமைகளை நீக்கி செம்மையான புதிய மொழிபெயர்ப்புக்களை மேற்கொள்ளுதலும் அடிப்படைத் தேவைகளாகும்.

எம்.எம்.ஜெயசீலன்,
விரிவுரையாளர், தமிழ்த்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்

முதன்மை ஆதாரங்கள்:

ஏநடரிடைடயi. ஊ.ஏஇ (1970) டீழசn வழ டுயடிழரசஇ ஊழடழஅடிழஇ ஆ.னு. புரயௌநயெ
வேலுப்பிள்ளை. ஸி.வி, (1976) மலைநாட்டு மக்கள் பாடல்கள், கொழும்பு, மாவலிப் பிரசுரம்.
…………………….. (1987) வீடற்றவன், சென்னை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்.
…………………….. (1984) இனிப்படமாட்டேன், மதுரை, மீனாட்சி புத்தக நிலையம்
…………………….. (2001) வாழ்வற்ற வாழ்வு, கொட்டகலை, சாரல் வெளியீட்டகம்.
……………………. (2007) தேயிலைத் தோட்டத்திலே, பாக்கியா பதிப்பகம்.

துணை ஆதாரங்கள்:

அருணாசலம். க, (1994) மலையகத் தமிழ் இலக்கியம், ராஜகிரிய, தமிழ் மன்றம்.
………………. (1999) மலையகத் தமிழ் நாவல்கள் ஓர் அறிமுகம், கொழும்பு, குமரன் புத்தக இல்லம்.
சிவத்தம்பி. கா, (ப.ஆ) (1993) மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும், உதயம் நிறுவன வெளியீடு.
சாந்திகுமார். எல்,(க.ஆ) (1980) “மலையகம்-சில குறிப்புக்கள்”, தீர்த்தக்கரை – ஜுன் – ஆகஸ்ட்.
சாரல் நாடன் (1986) சி.வி. சில சிந்தனைகள், மலையக வெளியீட்டகம்.
வேலுப்பிள்ளை. ஸி.வி, (1987) நாடற்றவர் கதை, ஐலண்ட் அறக்கட்டளை வெளியீடு.
……………… (1992) “கலாநிதி கைலாசபதி காலத்திற்குச் சொந்தமானவர் : 1982ஆம் ஆண்டு பேராசிரியர் கைலாசபதி அஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை”, குன்றின் குரல்-இதழ் 04.
ஜெயசீலன். எம்.எம், (க.ஆ) (2012) “மலையகப் பெண் கவிஞைகளின் எதிர்ப்புக் குரல்கள்” இளங்கதிர், தமிழ்ச் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம்.

Exit mobile version