சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை (32) விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள 8 நக்சல்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையினரின் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்களை நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற சத்தீஸ்கர் மாநில அரசுக்கு வரும் புதன்கிழமை வரை மாவோயிஸ்டுகள் `கெடு’ விதித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறையில் இருக்கும் 2 பெண்கள் உள்பட 8 மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்; மாவோயிஸ்டுகளுக்கு எதிராக `பசுமை வேட்டை’ என்ற பெயரில் நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்; பஸ்தார் பகுதியில் இருந்து ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டு உடனடியாக தங்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும் ஆகியவை அந்த நிபந்தனைகளாகும்.
தங்களது கோரிக்கையை வரும் 25ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.