ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால தோழியும் போயஸ் இல்லத்தில் அவருடனேயே வாழ்ந்த சசிகலா நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவில்லத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதா , சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் 2016-ஆம் ஆண்டு உடல் நலம் குன்றி சிகிச்சைப் பின்னர் ஜெயலலிதா இறந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா சென்ற ஆண்டு சிறையில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நடந்து வந்ததால் சசிகலாவால் ஜெயலலிதா சமாதிக்குச் செல்ல முடியவில்லை. ஜெயலலிதா சமாதியை புனரமைப்புப் பணிகள் என்று சொல்லி மூடி வைத்திருந்தார்.
இப்போது ஆட்சி மாற்றம் நடந்து திமுக வந்த பின்னர் சமாதிகளுக்கு மக்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா இன்று ஜெயலலிதா சமாதி செல்ல முடிவெடுத்து இன்று சென்றார். இதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இன்று சசிகலா ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். அவரது வருகையையொட்டி ஏராளமான அதிமுக தொண்டர்களும் திரண்டனர். அவர்கள் அதிமுக கொடிகளை ஏந்தியிருந்தனர்.
ஜெயலலிதா சமாதியில் இருந்து அவர் திநகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்திற்கும், ராமாவரம் நினைவில்லத்திற்கும் செல்வார் என்று தெரிகிறது.
“அம்மாவின் நினைவிடத்திற்கு தாமதமாக வந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும் அம்மாவோடு நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதி ஆகும். இந்த ஐந்து ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவின் சமாதியில் இறக்கி வைத்து விட்டேன். தலைவரும், அம்மாவும் தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள். அம்மாவிடம் நான் வந்து நடந்த விஷயங்களையும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லி வந்தேன்.