சேரிகள் எங்கும் சிகை நிமிர்த்தி
சிங்காரித்துச் சிலித்து நிற்கும்
ஆலய தேவாலய மசூதிகள்.
உயர்ந்து நிற்பதால்
குனிந்து பார்ப்பதில்லை
பார்த்தாலும் தெரிவதில்லை
பாவத்தின் பாதங்கள்
ஆண்டவனைச் சாட்டிய ஆலிங்கனங்கள்
சேரியில் வாரி வளங்கிக் கிடக்கின்றன
உணவற்று…. உதைபட்டு……வதைபட்டு…..!
தன்னைத்தானே காக்கமுடியாத இத்திருப்பதிகளா
மக்களையும்…மனிதத்தையும்…உலகையும் ….?
உலகில் உயர்ந்ததும்
விலையுயர்ந்தது சக்திதான்
அது தேவைதான்.
ஊரெங்கும் விரதம்…பட்டிணிவிரதம்
ஆம் சக்தி விரதம்
வருடம் முழுவதும் விரதமிருக்கும்
சேரிக்கு இன்னும் சக்தியின் அருளில்லை
வருடம் வருடம் சத்தியெடுக்கும்
சத்தியவதிகளுக்கும் குறைவும் இல்லை
அல்லாவுக்கும் அப்பனுக்கும் கர்த்தருக்கும்
ஆணுறை அறிமுகப்படுத்தப்படவுமில்லை.
சக்தியற்ற மக்களுக்கு விரதம்
சக்திக்கு மட்டும் ஏன் சக்கரைச்சாதம்?
இன்று சக்திபூசை முடிவு…..விஜயதசமி
இஸ்லாத்தின் (ஈட்) ஈகைத்திருநாளுடன்;.
மதங்கள் மதம்பிடித்தாலும்
கைகோர்த்தே நிற்கின்றன.
ஈசனைச் சாட்டி
சக்தி ஈன்ற ஒரு சக்தியை
ஈகைத்திருநாளில்
ஈர்ந்தாள் ஒருத்தி
திருத்தலமருகே
குப்பைத்தொட்டியில்.
தூமை துடையா தூயசக்தியை
உயிருடன் நாய்கள் உரித்துத்தின்ன
சங்கு மணி அரோகரா ஒலியிலும்
வேதக் குறான் ஓதல்களிலும்
குழந்தையின் அழுகுரல் கேட்கவே இல்லை
மனிதத்தின் காதுகள் செவிடுபட்டன மதங்களால்
அதன் விதங்களால்
நாய்கள் பசிபோக்கி பிள்ளையை
புசித்துப் போனபின்
பக்தர்களுக்குப் படையலாக
வீதியின் கிடக்கிறது சிசுசக்தியின்
மண்டையோடும் எலும்புகளும்
ஊடக வியாபாரத்திற்காய்
20.10.2013