ஆதாரங்களை அழி
சேதாரங்களை துடை
துயிலுமில்லங்களைக் கிளறு
நடுகற்களை நாசமாக்கு
வாசனைத்திரவியங்களைத் தெளி
நாற்றத்தை மறை
வருக வருக
ஆசியாவின் அதிசயத்தை பார்க்க வந்த
அம்மையே வருக
நான்காண்டுக்குப் பிறகு
நாடு பார்க்கவந்துள்ளார் வருக
கொத்தாகக் குண்டு போட்டு
குற்றுயிராய் குறையுயிராய்
அக்கினிக் காட்டிடை கிடந்து நாம் துடிக்கையிலே
பன்றிக்கு பால் கொடுத்த பரசிவனாரும் வரவில்லை
பாரம் சுமப்பவரே வாருமென்ற பரமபிதாவும் வரவில்லை
அயலவனும் அடுத்தவனும்
அழித்தவனுக்கே வழி மொழிந்தனர்
அம்மையே ஆண்டு நாலு போய்
திங்கள் மூன்று ஆனபின் இப்போதாகிலும் வந்துள்ளீர்கள்
பிணம் புணரும் தேசம் உங்களை வரவேற்கிறது
கண்ணீரும் ரத்தமும் காய்ந்துவிட்டதென்ற
நம்பிக்கையுடன் வந்திருப்பீர்கள்
வந்து பாருங்கள் தாயே
வெற்றிலை தந்து
வெண்தாமரையையும்
சமாதானப் புறாவையும் காட்டுவார்கள்
பதிவு செய்துவிட்டுப் போங்கள்
தந்ததை வாங்கி தாள் பணிந்து நிற்பவர்
சிலரைப் சாட்சிப் பதிவுகளாக்குவார்கள்
ஒத்திகை பார்த்த பபூன்கள் நன்றாக நடிப்பார்கள்
சலுகைகளை அவர்கள் உரிமைகள் என்பார்கள்
தாயையே விற்றவர்கள்
தரமாக நடிப்பார்கள்
நாடகம் நிகழ்ச்சி நிரலின்படி நடக்கும்
பார்த்துவிட்டுப் போங்கள்
எங்கள் குருதித்துளி
ஒவ்வொன்றுக்கும் கணக்குகள் மனங்களிலுண்டு
காலம் ஒருநாள் ஆய்வு செய்யும்
மரக்காலுடன் நடைபிணமாய் ஒரு கூட்டம்
பொட்டையும் பூவையும்; போருக்களித்த பெண்கள்
தந்தையரை புதைகுழியில் தேடும் குழந்தைகள்
சிறைவாசலெங்கும் பிள்ளைகளுக்காய் தவமிருக்கும் தாய்மார்
அவலங்களை தந்தவனிடமே
மகஜர் கொடுத்து கானல் நீருக்காய் காத்து நிற்கும் கூட்டம்
யாரும் உங்கள் கண்களில் படமாட்டார்
என்செய்வோம்
எல்லாவற்றிற்கும் ஓர் பதிவுகள் எங்களிடமுண்டு
வந்ததுதான் வந்தீர்கள்
வலி மாத்திரை வாங்கித்தருவீர்களா
வலிதந்த பிசாசுடன் முருங்கை மரத்தில்தான் வீடுகட்டி
இணங்கி வாழச்சொல்வீர்களா
அடித்துவிழுத்திவிட்டோமென்ற அகங்காரம் அவர்களுக்கு
இருப்பெல்லாமிழந்துவிட்ட துயரெமக்கு
அடித்துவிட்டோமேயென்ற இரக்கம்கூட அவர்களிடமில்லை
வீழ்ந்துவிட்டோமேயென்ற பெருவலியெமக்கு
ஒன்றை கவனியுங்கள் தாயே
இடைவிடாது இடிவிழுந்தபோதும் எம்பனைகள் சரியவில்லை
வடலிகள் வாடவில்லை
பகை காலில் ஒன்றிரண்டு சருகுகள் விழுந்ததே தவிர
பூவரசு இன்னும் மனோவலியோடுதானுள்ளது உணர்வீர்கள்
பனைமரங்கள் முறியுமேயொழிய வளையாது அம்மா
வேகாத பருப்பென்று தெரிந்தும்
மாகாணசபையில் இறங்கியுள்ளனர் எம்மில் சிலர்
பெருவாழ்வேதும் கிடைக்கப்பெற்றதாய்
அவர்களும் பொச்சடிக்கவில்லை
நாமும் நம்பி நிற்கவில்லை
ஒத்து நிற்பதை உலக வல்லரசுகளிற்கு காட்டவேண்டிய
இழிநிலை எங்களுக்கு
கருவுற்றகாலத்திலிருந்து உணவும் உதிரமும் கொடுத்துக் காத்துவந்த
சுதந்திரக்குழந்தையை
கருவறையில் வைத்தேயழித்த பாவிகளுக்கு
நாமின்னும் ஒத்த உணர்வோடுள்ளோம் என்பதை
எத்தனை தரம் சொல்ல வேண்டும்
பிரதேச சபைத் தேர்தலில்
பாராளுமன்றத் தேர்வில்
எத்தனை தரம் நிரூபிக்க வேண்டும்
உலகச் செவிடர்கள் காதில்
எத்தனை தரம் சங்கெடுத்து ஊத வேண்டும்
தந்ததை வாங்கி நக்கிவிட்டு தாள்பணிந்து நிற்க
தமிழன் ஒன்றும் தரங்கெட்டுப் போகவில்லையென்று
எத்தனை முறை கத்தவேண்டும்
இருந்தாலும் உலகப் பொலிஸ்காரர் கையில்தானாம் அதிகாரம்
உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காய்
தேர்தலில் நிற்கிறோம்.
உள்ளெரியும் நெருப்பை ஒளித்து வைத்துவிட்டு
உள்ளுராட்சிகளில் நின்றோம்
வேகாத பருப்பென்று தெரிந்தும்
மாகாண சபை தேர்தலில் நிற்கிறோம்
வாருங்கள் அம்மையே
பத்தோடு ஒன்றாய் பார்த்து நீர்; போகாமல்
வீழ்ந்த இனத்தின் வலியறிந்து செல்க
கண்ணீரும் ரத்தமும் காய்ந்த பூமியின் உணர்வறிந்து செல்க
சத்தியமாய் அம்மையே
அவர்கள் பூமியில் அரையங்குலம் கூட வேண்டாமெமக்கு
அங்கே அவர்கள் பாதை போடட்டும்
துறைமுகம் கட்டட்டும்
கடலைக்கூட தம் வசமாக்கி நாட்டுக்குள் கூட்டி வரட்டும்
எதுவும் வேண்டாமெமக்கு
எமது மண் சுடும் பாலைமணலாயினும்
இந்திரலோகம் எமக்கு
எங்கள் தோட்டத்து கள்ளிச் செடி கூட எமக்கு கற்பக விருட்சம்
எங்கள் தோட்டத்து வெருளிகளை
விலக்கச் சொல்லி நிற்கிறோம்
காக்கைகளானாலும் எம்பெண்கள்
கந்தர்வக் கன்னிகள் எமக்கு
உங்களுக்கு எப்படியோ
எம் அன்னை எமக்கு அழகு
விட்டுக் கொடுக்கமாட்டோம்
தட்டிப்பறிக்க நினைத்தால் விட்ட இடத்திலிருந்து
பயணம் தொடங்கும்
பாதி வரை வந்த பயணம் தொடரும்
மீதிப்பயணம் ஆரம்பமாகும்
சக்கரச் சிற்கள் என்றும் கீழேயே நிற்பதில்லை
மீண்டும் மேலேழும்
முதுகுக் கூனல் நிமிர்த்தி
முன்னே சென்றவர் கனவை நெஞ்சிருத்தி
பயணம் தொடரும்
அம்மையே ஒன்றுணர்க!
‘உச்சா’ போவதானாலும்
ஊர் மண்ணில் போவதுதான் பெருமை எமக்கு
-ச.நித்தியானந்தன் யாழ். பல்கலைக்கழகம்-