இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் கூட சுப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று சமூக உணர்வுள்ள பலரும் எண்ணுகிறார்கள். வ,கௌதமன் தமிழ் உணர்ச்சியால் உந்தப்பட்டு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என முன்வைக்கும் காரணங்களுக்கும் மக்கள் பற்றுள்ளவர்கள் முன்வைக்கும் காரணங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் எல்லா அழுக்குகளையும் தமிழ் உணர்வு என்ற போர்வைக்குள் மறைத்துவைக்கும் வியாபாரிகளுக்கும் மக்கள் பற்றுக்கொண்டவர்களுக்குமானவையுமாகும்.
இலங்கைக்குச் சென்று அந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்தப் போகிறோம் என்கின்றனர் சுப்பர் சிங்கர் வியாபாரிகள். தமிழ் நாட்டிலிருப்பவர்கள் மட்டும் குதூகலமாகத் துள்ளிக்குதிக்க இலங்கையிலிருக்கும் தமிழர்கள் மட்டும் மூஞ்சூறுகள் போல கொண்டாட்டம் இல்லாமல் அலைவதா என்று வேறு கேட்கின்றனர்.
கௌதமனோ அன்றி ஏனைய தமிழ் உணர்வின் உச்சத்தை அடைந்தவர்களோ அது தவறு என்கின்றனர். அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் தமிழர்கள் இலங்கையில் அல்லல் படுவதை உணர்ச்சி மீட்டர் வைத்து அளவெடுத்து ராஜபக்சவை தண்டிக்கப் போகும் நேரத்தில் அமெரிக்காவிற்கே அழுமூஞ்சியாக நடித்துக் காட்டுங்கள் என்கிறார் இயக்குனர்.
அடப்பாவிகளா, ஜெனீவா விசாரணை என்ற சீரியலின் இயக்குனரே அமெரிக்கா தான், ராஜபக்சவையும் உணர்வாளர்களையும் நடிக்க வைப்பதும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான் என்றெல்லாம் சொன்னால் கௌதமன் கம்பனி கேட்டுக்கொள்ளது. அவர்களுக்கு இயக்கவும் தெரியும் நடிக்கவும் தெரியும். இப்போ மக்களையும் நடிக்கச் சொல்கிறார் பாருங்கள் அங்கே தான் அவர் காமடி இயக்குனாராகிப் போகிறார்.
இங்கு பிரச்சனை அதுவல்ல, சுப்பர் சிங்கரும் விஜய் தொலைக்காட்சி போன்றவையும் தமிழக சினிமாக் குப்பைகளும் ஈழத் தமிழர்களின் கொல்லப் புறத்திலும் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்கின்றனர் மக்களைப் பற்றிச் சிந்திப்பவர்கள்.
வ.கௌதமனுக்கும் அவரின் அடியொற்றும் தமிழ் உணவர்வாளர்களுக்கும் புலம் பெயர் நாடுகளின் நிலைமையோ, இலங்கையின் நிலைமையோ பருமட்டாகக்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குறைந்தபட்சம் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்ப்படும் அந்தத் தொலைக்காட்சிகளை இந்திய பல்தேசிய நிறுவனங்களான விஜய் ரி.வி மற்றும் ஏனைய குப்பைகள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.
அந்த இரண்டு தொலைக்காட்சிகளும் மக்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை என்பது உள்வீட்டு விவகாரம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட விஜய் வகயறாக்கள் தமது வியாபாரத்தைப் புலம் பெயர் நாடுகளில் பரப்புகின்றன. புலம் பெயர் நாடுகளிலிருந்து தென்னிந்திய தொலைக்காட்சிகளுக்கு அண்ணளவாக ஒரு மில்லியன் யூரோக்கள் மாதந்த சந்தாவாக வழங்கப்படுகின்றது என்பது முழுவதுமாக மதிப்ப்பிடப்படாத தகவல்.
தமிழ் உணர்வு ஏற்படுவதற்கு இவர்கள் கூறும் தமிழ்க் கலாசாரம் என்பதை விஜய் தொலைக்காட்சிகளே புலம் பெயர் நாடுகளில் பரப்புகின்றன.
குழந்தைகளுக்கு விஜைய் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளைக் காட்டும் பெற்றோர்கள், அதுதான் தமிழ்க் கலாச்சாரம் என்கின்றனர். எங்காவது தமிழ்ச் சொற்கள் இடைச் சொருகலாக வரும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைக் காட்டி இதுதான் தமிழ் என்று கூறுகின்றனர்.
பணத்திற்காகவும், பாலியல் அடிமைத்தனத்திற்காகவும் தமக்குள் ஒருவரை ஒருவர் தின்று தொலைக்கும் தொலைகாட்சித் தொடர்களைக் காட்டி இதுதான் தமிழ்க் கலாசாரம் என அறிமுகப்படுத்துகின்றனர்.
இதனால் தான் விஜய் போன்றவற்றை வேண்டாம் என்கிறோம். இதையெல்லாம் வ.கௌதமன் போன்றவர்கள் கண்டுகொண்டால் விஜய் தொலைக்காட்சியை புலம் பெயர் நாடுகளில் ஒளிபரப்ப வேண்டம் என அதன் உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தக்கூடாது..
தமிழகத்தில் மக்கள் பட்டினியால் செத்துமடிந்தாலென்ன, கூவத்திலும் குப்பை மேட்டிலும் வாழ்க்கை நடத்திலென்ன, ரிமோட் அக்கறை மட்டுமே ஏற்படுவது தானே தமிழ் உணர்வு. ஆக, ஈழத் தமிழர்களுக்காக அக்கறைப்படுவது என்பது புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுகளுக்கானது என்ற வகையில் ஏன் இப் போராட்டத்தைக் கிளப்பிவிடக்க்கூடாது?
அதனை அறிக்கை விடுவதிலேயே ஆரம்பிக்கலாம். போராலும் ஒடுக்குமுறையாலும் சொந்த தேசத்திலிருந்து நாடோடிகள் போலத் துரத்தப்பட்ட தமிழர்கள் மத்தியில் கலை வியாபாரத்திற்கு முகவர்களாகச் செயற்படும் நிறுவனங்களை ஏன் அம்பலப்படுத்த முடியாது.?
இத்துடன் முடிவடையவில்லை.
தென்னிந்தியாவின் பாலியல் வக்கிரங்களை பெரும் பணச்செலவில் சினிமாவாக மாற்றி போர்ச் சூழலில் திணித்து ஈழத் தமிழர்களிடம் எத்தனை தயாரிப்பாளர்களும் நடிகர்களும் பணம் சுருட்டிக்கொள்கிறார்கள். இதை நிறுத்துமாறு இவர்களை ஏன் கேட்கக்கூடாது.
ஈழத் தமிழர்களின் படைப்புகளின் சமூகப் பெறுமாந்தை இவர்கள் அறிந்திருப்பார்கள். கைலாசபதியிலிருந்து இன்று வரைக்கும் தமிழகத்தின் அழுக்குகளைக் கழுவும் தமிழ் கலையை ஈழத்தவர்களே அறிமுகப்படுத்தியுள்ளனர்.
எழுபதுகளில் தென்னிந்திய சினிமா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்த் காலத்தில், குத்துவிளக்கு, வாடைக்காற்று, அனுராகம், நான் உங்கள் தோழன், கோமாளிகள் போன்ற பல திரைப்படங்கள் மண்வசனையைச் சுமந்துவந்து வெற்றிபெற்றன. தணியாத தாகம் என்ற வானொலி நாடகம் ஈழத்தில் ஒரு கலாசாரப் புரட்சியையே ஆரம்பித்துவைத்தது.
தென்னிந்த்திய அரிவாள் கலாச்சரத்தயும், மனித குலம் அருவருக்கும் வன்முறைகளையும் பிரச்சாரம் செய்யும் சினிமாக்களை இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தபனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது என தனது தமிழ் நாட்டு எஜமானர்களுக்கு எதிராக வ.கௌதமன் போன்றோர் ஏன் போர்க்கொடி உயர்த்தவில்லை. ஈழத்தில் வளராத புலம் பெயர் குழந்தைகளுக்கு அஜித், விஜய் போன்ற இத்தியாதிகள் பச்சையாகக் கொலைசெய்துவிட்டு சிலோ மோர்ஷனின் நடந்துசொல்லும் காட்சிகளை கலாச்சாரம் என அறிமுகம் செய்யும் அவலத்தை உருவாக்கிய பணவெறிகொண்ட வினியோகஸ்தர்களுக்கு எதிராக ஏன் குரலெழுப்ப முடியாது.
பதில் தெரிந்ததுதான்.!
அவர்களும் தமிழர்கள்தான் என்பார்கள். தமிழர்கள் ஒன்றுபடவேண்டிய நிலையில் அவர்களைப் பிரித்து பிளந்துவிட முடியாது என்பார்கள். ஆக, தமிழ் உணர்வாளர்கள் என்ற தலையங்கத்தில் இவர்கள் பாதுகாப்பது வியாபார வெறியர்களை. பாதிக்கப்படுவது தமிழர்களின் எதிர்காலம். இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்ச அரசு இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
அதற்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமைக்காக மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும் சிலர் சொல்கிறார்கள். இதே இனப்படுகொலையைப் பயன்படுத்தி தாம் இயலுமான அளவிற்கு பிழைத்துக்கொள்ள வேண்டும் எனச் சிலர் எண்ணுகிறார்கள்.