இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலைவருமா என்று அரசுகள் ஆலோசித்து வரும் நிலையில் முதல் அலையில் கொரோனா தொற்றுக்கு பலியான இருவரது உடல்களை பெங்களூரு மருத்துவமனை மறந்து போன நிலையில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது இந்திய சுகாதாரக் கட்டமைப்பு தொடர்பாக பல கேள்விகளை எழுப்புகிறது.
2020- கொரோனா தொற்று முதல் அலையில் போது கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பெட் என்ற பகுதியைச் சேர்ந்த துர்கா என்பவரும் கேபி அக்ரகாரா என்ற பகுதியைச் சேர்ந்த முனிராக் என்பவரும் 2020 ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு நகரில் உள்ள இஎஸ் ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட உடல்கள் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
உறவினர்கள் இறந்தவர்களின் உடலைக் கேட்ட போது மருத்துவமனை நிர்வாகம் சுகாதாரத்துறையே இருவரின் உடலை அடக்கம் செய்து விடும் உடல்களை கொடுக்க மாட்டோம் என்றிருக்கிறார்கள். உறவினர்களும் இறப்புச் சான்றிதழை பெற்று விட்டு சென்று விட்டார்கள். இறந்தவர்களின் உடலை பிணவரையில் வைத்ததையே மருத்துவமனை நிர்வாகம் மறந்து விட்டது.
ஓராண்டுகள் ஆன நிலையில் பிணவறையை சுத்தம் செய்வதற்காக பிணவறை ஊழியர்கள் பணிகளைச் செய்த போது ஒரு குளிர்பதன பெட்டியில் இரு உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன, அந்த இரண்டு உடல்களும் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த துர்கா மற்றும் முனிராஜூன் உடல்கள் என்பது தெரியவந்துள்ளது.
15 மாதங்களுக்கும் மேலாக இறந்து போன இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் அப்படியே இருந்தது கர்நாடக மாநிலத்தில் பலத்த அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரி வருகிறார்கள்.