இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வட இந்தியா உட்பட பல மாநிலங்களை மிக மோசமாக பாதித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த மாநிலங்களில் சுகாதார நடவடிக்கையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறப்படுகிறது. பாஜக அளும் மாநிலங்களுக்கு அதிக அளவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் மத்திய அரசு வேறு கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன்முறையாக அனுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆக்சிஜன்களை தமிழக அரசின் அனுமதியில்லாமல் ஆந்திராவுக்கு அனுப்பியதும் தமிழகத்தில் விமர்சனங்களை உருவாக்கியது.
ஆக்சிஜன் தடுப்பாடு நிலவிய நிலையில் எத்தனையோ வழக்குகளை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து விசாரித்தது. அந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது அந்த மனுவில் “நாங்கள் இலவசமாக ஆக்சியன் தயாரித்து அரசுக்கு தருகிறோம். எனவே ஆலையைத் திறக்க சம்மதிக்க வேண்டும்” என்று கேட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசிடம் நீதிமன்றம் கருத்துக் கேட்க மத்திய அரசோ “ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை” என அறிவித்தது. இது தமிழகத்தில் அதிர்ச்சியை உருவாக்கியது.
நீதிமன்றம் தமிழக அரசின் கருத்தைக் கேட்க இன்று காலை அவசரமாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழக அரசு தூத்துக்குடியில் நடத்தியது. அதில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் கூட்டம் முடிந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. மீண்டும் திறந்தால் அங்கு வன்முறை வெடிக்கும். 2018 போன்று மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டை நடத்த முடியாது. அரசு நாட்டின் உள்ள பிற ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பது பற்றி பரிசீலிக்கலாம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது” என்று தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் “மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சொன்ன தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம். வன்முறையை காரணம் காட்டி ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது” என்றது.
இதில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதானந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் ஆன ஹரீஷ் சால்வேயை உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கும் ஆக்சிஜன் தொடர்பான வழக்கில் ஆலோசனை வழங்குவதற்காக நியமித்துள்ளது.