Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கைதான குற்றவாளி ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவரே – உறுதிப்படுத்தும் இராணுவம்

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது.
இதேவேளை அரச படையினர் இவர் ஈ.பி.டி.பி உறுப்பினரே என உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் இவரிடம் காணப்பட்டதாகப் படையினர் கூறுகின்றனர். இதே வேளை யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது குறித்து கோதாபாயவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்தக் கைது எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஈபிடிபி உறுப்பினர் கோதாபாய – டக்ளஸ் முரண்பாட்டின் வெளிப்பாடாகக் கைதாகியிருக்கலாம் எனத் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத் துணை வேந்தர் நியமனத்தின் போதும் இந்த முரண்பாடு வெளிப்பட்டதாகத் தெரியவருகிறது. அதே வேளை இலங்கை அரசு சார் புலம்பெயர் ஊடகம் ஒன்று டக்ளஸ் தேவாந்தாவைக் கண்டித்துக் கருத்து வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அரச துணைக் குழு ஒன்றிற்கும் அரசிற்கும் இடையேயான வெளிப்படையான முதலாவது முரண்பாடாக இது கருதப்படுகிறது.

ஈ.பி.டி.பியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு………
08.01.2011
ஊடக அறிக்க
யாழில் கைதுசெய்யப்பட்டிருப்பவர் எமது கட்சி உறுப்பினர் அல்ல. யாராக இருப்பினும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல சில காலங்களுக்கு முன்னர் தமது கட்சி வேலைகளில் ஈடுபட்டிருந்து பின்னர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார். கடந்த ஐந்து வருடங்களாக எம்மோடு எந்த வித உறவுகளோ, தொடர்புகளோ இல்லாத குறித்த நபரின் சட்ட விரோத நடவடிக்கைகளை எமது கட்சியோடு எவரும் சம்பந்தப்படுத்துவது கண்டனத்திற்குரிய விடயமாகும்.
அன்மைக்காலமாக குறிப்பாக யாழ் குடாநாட்டில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் அவர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததை சகலரும் அறிவர்.
இதே வேளையில் இந்த விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்திலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்மையில் உரையாற்றும்போது யாழ்ப்பாணத்தில் நடக்கும் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் தொடர்பாக எமது கண்டனத்தைத் தெரிவித்ததோடு அவை தடுக்கப்படவேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்துக்கு முன்னால் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஒரு தனிநபரின் சட்ட விரோத நடவடிக்கையை எமது கட்சியோடு சம்பந்தப்படுத்தும் விதமாக செய்திகளை திரிபுபடுத்துவது வன்மையான கண்டனத்திற்குரிய விடயமாகும்.
கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்ற நபர் குறித்த விசாரணைகள் பொலிசாரால் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாப சீட்டுக்களை விற்பனை செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டே பதிவில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும்; கைதுசெய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தி சட்ட விரோத அதிஷ்டஇலாப சீட்டின் பின்னணிகளையும் அறிந்து அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் அவலப்பட்டு துயரங்களை சுமக்கும் எமது மக்கள் மீது மேலும் துயரங்களை சுமத்தும் வகையிலான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது எமது கட்சி கொள்கையோ அன்றி நடைமுறையோ அல்ல. அவ்வாறு செயற்படுவோர்களுக்கு எமது கட்சியில் உறுப்புரிமையும் இல்லை.
ஆனாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக கடந்த காலங்களிலும் எம்மீதான பழிகள் சுமத்தப்பட்டு வந்திருந்தமையும், அதை எமது மக்கள் புரிந்து கொண்டு எமக்கான அரசியல் அங்கீகாரத்தை தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறார்கள்.
எமது மக்களை துன்புறுத்தும் வகையிலான வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் எந்த தரப்பாக இருப்பினும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே. இதையே எமது கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டு பழிகளை வேறு திசையில் சுமத்தி விடுவதால், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும், தொடர்ந்தும் அதே வன்முறை சம்பவங்களில் ஈடுபடவுமே வழிவகுக்கும்.
ஆகவே எமது மக்கள் முகம் கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினை குறித்து சகலரும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள முன்வரவேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கந்தசாமி கமலேந்திரன் (கமல்)
அமைப்பாளர
யாழ் மாவட்டம்.
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி

Exit mobile version