Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி தலைமையில் உருவாகும் புலம்பெயர் மாபியா வலைப் பின்னல்?

சர்வதேச ஆயுதக் கடத்தல் குற்றவாளியான கே.பி என்ற குமரன் பத்மநாதன் மற்றும் இனப்படுகொலைத் திட்டத்தை வகுப்பதில் பிரதான பாத்திரத்தை வகித்த கோதாபய ராஜபக்ச ஆகியோரது இணைவில் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசின் மாபியா வலைப் பின்னல் ஒன்று உருவாக்கம் பெறுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இலங்கை சென்று கே.பி ஐச் சந்தித்த ஒன்பது புலம் பெயர் தமிழர்கள் கொண்ட குழு தவிர முன்னதாகவே பலர் கே.பி மற்றும் கோதாபய ஆகியோரைச் சந்தித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பில் ஈடுபட்டோரில் கே.பி மலேசியாவிலிருந்து தலை மறைவான வேளையில் அவருடன் தங்கியிருந்த சிலரும் அடங்குவர் என மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசுடன் இணைந்து தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் கே.பி யைச் சந்தித்துத் திரும்பிய ஒன்பது பேர் குழுவில் ஒருவரான விமலதாஸ் என்பவர் மேற்கு லண்டன் எல்லையிலுள்ள நியூமோள்டன் பகுதியில் தமிழ்ப் பாடசாலை ஒன்றை நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. இப் பாட்டசாலையை விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த நடேசனின் உறவினர்கள் சிலரும் விமலதாஸுடன் இணைந்து நடத்தி வருகின்றனர்,
இன்டர் போல் நிறுவனத்தால் தேடப்படுகின்ற கே.பி யுடன் ஏற்கனவே தொடர்பிலிருந்ததாக குறிப்பிடும் இந்த நபர்கள் பிரித்தானிய அரசின் சட்டச் சிக்கல்களுக்கு உள்ளாவார்களா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
தவிர, புலி உறுப்பினர்கள் சரண்டைவின் போது இடைத் தரகராகச் செயற்பட்ட சந்திரனேரு, கேபியைச் சந்திக்கச் சென்ற சார்ள்ஸ் அன்டனிதாஸ், மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பாதிரியார்  ஜெகத் கஸ்பர் போன்றோரிடையேயான தொடர்புகள் குறித்தும் பரவலான சந்தேகங்கள் நிலவுகின்றன.

Exit mobile version