Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி இன் இந்தியச் சார்பு நிலையும் இந்தியாவின் இஸ்ரேலும் : சபா நாவலன்

 

ஆதிக்க நாடுகளின் அதிகாரத்துவ மையம் இன்று

அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் எல்லையை மீறி இந்திய, சீன பொருளாதார வல்லரசுகளோடு பங்குபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமரிக்காவிலும் ஐரோப்பவிலும் சிதைந்து செல்லும் பொருளாதார அமைப்பின் தற்காலிகமான உச்சபட்ச மாற்று வடிவம் புதிய ஒழுங்கமைப்பாக அதிகாரத்தைப் பங்கீடு செய்துகொள்ளும் இந்திய சீன வல்லரசுகளை உருவமைத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட “ஜனநாயக”ச் சொல்லாடலுக்கு இந்திய அரசு இன்று புதிய அர்த்தங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. சீன “ஜனநாயகத்தின்” முன் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு தெற்காசியாவில் இந்தியா கட்டமைத்த ஜனநாயகத்தின் முதல் பெரும் படுகொலைதான் வன்னியில் தனது ராஜபக்ஷ பொம்மை அரசின் ஊடாக இந்தியா நிகழ்த்திய முதல் மனிதப் படுகொலைகள்.

மனிதாபிமானிகளும், அரசியலாளர்களும், அனைத்து மக்கள் சார் சமூக சக்திகளும் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்க இன்றும் முகாம்களில் தொடரும் மக்களின் ஓலக்குரல்கள் தெற்காசியா எங்கும் ஒலிக்கப் போகிறதா என்ற அச்சம் அனைத்து மனிதாபிமானிகள் மத்தியிலும் நிலவுகிறது.

நாடு முழுவதிலும் மக்கள் இயக்கங்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொள்ளும் பரிசோதனை முயற்சியே லால்காரில் இன்று நடந்துகொண்டிருக்கும் படுகொலைகள் எனவும் லால்கார் என்பது இந்திய அரசின் பரிசோதனைக்கூடம் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(CP(ML)) பொதுச் செயலாளர் தீபங்கார் பத்தாச்சார்யா ரீடிவ் இணையத்திற்கு வழங்கிய செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

 

முன்னைய பதிவுகள்
இலங்கை ஒரு பரிசோதனைக்கூடம்? : சபா நாவலன்

இந்தப் பரிசோதனைக் கூடம் லால்காரில் ஆரம்பிக்கப்பட்டதல்ல. வன்னியிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. வன்னியில் மனிதப்படுகொலைகள் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது இனியொருவிலி ஏப்பிரல் 2009 இல் வெளியான கட்டுரையில் இது குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

காந்தி தேசத்தின் அகிம்சை அதன் உள்வீட்டுக்குள் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் லால்கார் கொலைகள் மறுபடி ஒருமுறை மனித குலத்தை அதிர்ந்து போகச் செய்திருக்கிறது. ஊடகங்கள் மறுக்கப்பட்டு வெளியுலகிலிருந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு அப்பாவி மக்களை லால்காரில் கொன்று போடும் அரச பயங்கரவாதம், தான் வன்னி சோதனைக் கூடத்தில் 50 ஆயிரம் மக்களின் மரண ஓலத்தில் கற்றுக்கொண்ட பாடத்தை மறுபடி ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறது.
முன்னெழுந்து கொண்டிருக்கும் இந்திய வல்லரசானது வன்னிச் சோதனைக் கூடத்தில் நிகழ்த்திய மனிதப்படுகொலையில் கற்றுக்கொண்வை போருக்கான தயாரிப்புக் காலம், போர் நிகழும் காலம், பின் போர்க் காலப்பகுதி என மூன்று பிரதான அரசியல் நிகழ்வுகளின் கால அட்டவணை களை அடிப்டையாகக் கொண்டவையாகும்.

முன் போர்க் காலம்
முன் போர்க் காலத்தில் இந்திய மேலாண்மைக்கு எதிரான எல்லா அரசியல் சமூக சக்திகளும் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தப்பட்டன.
பாசிசத் தன்மை வாய்ந்த சிங்கள தேசியவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன(மக்கள் ஐக்கிய முன்னணி)() என்ற கட்சியானது இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் அடுத்தபடியாக பலம் வாய்ந்ததாகவும் உறுதியான உள்ளகக் கட்டமைப்புக்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. அதன் உருவாக்கக்க் காலப்பகுதியிலிருந்தே இந்திய எதிர்ப்பு வாதத்தை பிரதான கோஷமாகக் கொண்டிருந்த இக்கட்சியானது திட்டமிட்டுப் பிளவுபடுத்தப்பட்டது. இதன் ஒருபகுதி அரச ஆதரவு அணியாக மற்றய அணி பலவீனமடைந்து போக சிங்கள மக்கள் மத்தியிலான இந்திய எதிர்ப்பு வாதமும் பலமிழந்து போனது.

புலிகளின் இருப்பானது தெற்காசியாவின் அமைத்துக்கு மட்டுமல்ல உலக சமாதானத்திற்கே அச்சுறுத்தலானது என்று பரந்துபட்டளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 2006 நடுப்பகுதியில் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டது.

இது தவிர சிங்கள மக்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் புலிகள் நடாத்திய குண்டுத்தாக்குதல் சிங்கள மக்களின் வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு பகுதியாக மாறிவிட, புலிகளின் அழிவு மட்டுமே தமது அன்றாட வாழ்வை உறுதிப்படுத்தும் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இச்சிந்தனைப் போக்கானது சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அரச எதிர்ப்புச் சக்திகளை மௌனிக்கச் செய்திருந்தது மட்டுமன்றி புலியழிப்பிற்கு எந்த விலையையும் எத்தனை உயிரிகளையும் இவர்கள் வழங்கத் தயாராகவிருந்தனர். இவ்வாறான வெறுப்புணர்வை மேலும் வளர்த்தெடுக்கவும் சிங்கள மக்களின் ஆதரவை மேலும் வளர்த்தெடுக்கவும், எதிர்ப்புச் சக்திகளை நிர்மூலமாக்கவும் இலங்கை அரசே பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெடிகுண்டுப் புரளியைக் முடுக்கிவிட்டிருந்தது.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த புத்திஜீவிகளிலிருந்து இடதுசாரிகள் வரை மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இனப்படுகொலை நிகழ்த்தப் படும் போது அதன் பிரதான எதிர்ப்பு சக்திகளாக அமைய வல்ல புலம்பெயர் இலங்கைத் தமிழர்களையும், தமிழ் நாட்டுத் தமிழர்களையும் கையாளும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன, இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கென இலங்கை அரசு தனது வரவுசெலவு நிதி ஒதுக்கீட்டின் போது பெருந்தொகையான பணம் ஒதுக்கப்பட்டிருந்ததை ஒத்துக்கொண்டிருந்தது.

போர் ஆரம்பிக்கப்படுவதற்குச் சில வருடங்களின் முன்னதாகவே புலம் பெயர் ஐரோப்பிய நாடுகளில் புலியெதிர்ப்பாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் அரச ஆதரவாளர்களாக மாறிவிட்டிருந்தனர். அரசின் துணை இராணுவக் குழுக்கள் தமது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருந்ததன. புலி ஆதரவாளர்களில் பலர் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். சென்னையிலிருந்த இலங்கையின் இந்தியாவிற்கான துணைத்தூதர் இனப்படுகொலைகளின் போது இந்திய அரசியலைச் சிறப்பாகக் கையாண்டமைக்காக பிரித்தானியத் தூதுவராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது இங்கு குறித்துக் காட்டத்தக்கது.

இந்த அரசியல் நகர்வுகள் அனைத்திற்கும் சர்வதேச அரசில் சூழலின் மாற்றமும் அதனூடான இந்தியா, சீனா போன்ற புதிய ஏகபோக அதிகார மையங்களின் உருவாக்கமும், அடிப்படையான காரணமாக அமைந்திருந்தது மட்டுமல்ல இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அரசியல், பொருளாதார, இராணுவ வலிமையை வழங்கியதும் இந்தப் புதிய ஏகபோக அதிகார அமைப்புக்களே.

இந்த முன்னேற்பாடுகள் தான் போர் நிகழும் காலப்பகுதியில் இலங்கை அரசு விரும்பியவாறு மனிதப்படுகொலைகளை மேற்கொள்வதற்கு ஆதாரமாக இருந்தவை எனலாம்.

மாஓ சேதுங் யார் மக்கள் என்ற தனது கட்டுரையில் மக்கள் பகுதிகளின் வர்க்க சார்பு நிலைகள் தொடர்பாகவும் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம் தொடர்பாகவும் கூறுவது போல், உலக முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதிகார வர்க்கமும் யார் மக்கள் என்று தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறது. தமது சர்வதேச வியாபாரத்திற்கு எதிரான சக்திகளாக உருவாகக் கூடிய எல்லா மக்கள் பிரிவுகளையுமே அவர்கள் மக்களாகக் கருதுவதில்லை. இந்தியாவில் விவசாயத்தை சர்வதேச வியாபாரத்திற்கு உட்படுத்திய போது தற்கொலைசெய்து மாண்டு போன இரண்டு லட்சம் விவசாயிகளை இவர்கள் மக்களாகக் கருதியதில்லை. லால் காரிலும் சிறப்புப் பொருளாதார வலையத்தை நிறுவ அரசு முயற்சிகள் மேற்கொண்ட போது விரடியடிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்த எதிர்ப்புப் போராட்டத்தின் விலை தான் இன்று இந்திய அரசாங்காம் மேற்கு வங்க மாநில அரசோடு இணைந்து மேற்கொள்ளும் மனிதப்படுகொலைகள்.

சிங்கூரில் காணி சுவீகரிப்பிற்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்களின் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டிரும்க்கும் வன்முறை நூற்றுக்கணக்கான அப்பாவிகளைப் பலி கொண்டிருக்கிறது.
பிரித்தானியாவில் முதலாளித்துவம் உருவான காலப்பகுதியில் கோதுமைச் செய்கை நிலங்களிலிருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கம்பளி உற்பத்திக்காக ஆடுகள் வளர்க்கப்பட்ட போது பெரும்பகுதி விவசாயிகள் ஆலைகளில் வேலைசெய்யும் கூலிகளாக மாற இன்னொருபகுதியினர் உணவின்றியும் உயிர்வாழ வழியின்றியும் இறந்து போயினர்.
இந்தக் கூலி விவசாயிகளின் எதிர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தவும் அவர்களின் தற்காலிக உயிர் வாழ்தலை உறுதி செய்யவும் தற்காலிக மாற்று வழிமுறைகளை பிரித்தானிய அரசு கையாண்டிருந்தது.
அனுபவ முதிர்ச்சியடைந்த, உலக முதலாளித்துவத்தின் ஒரு பகுதியான இந்திய முதலாளித்துவமும் ஆளும் வர்க்கமும் இவ்வாறான எதிர்ப்புக்களைக் கையாள்வதற்கு மனிதப்படுகொலைகளையே தீர்வாக முன்வைக்கின்றன.

எந்த எதிர்ப்புமின்றி புதிய, “ஜனநாயகத் தாராளவாததின்” கோரக்கரங்களுக்குப் பலியாகும் இந்த அப்பவி மக்கள், ஆசிய ஜனநாயகத்திற்குப் பலியெடுக்கப்படுகிறார்கள்.

வன்னி என்ற குறிகிய நிலப்பரப்பினுள் சாட்சியும், தடயங்களுமின்றி 4 லட்சம் ஆயிரம் மக்களின் மீது இலங்கை அரசின் துணையோடு நடாத்திய பரிசோதனை இன்று மேற்கு வங்கத்தில் பிரயோகிக்கப்படுகிறது. இது நிறுத்தப்படப் போவதில்லை. தமது சர்வதேச வர்த்தகத்திற்கு எதிரான எல்லா சக்திகளையும் இந்த அதிகாரங்கள் கொன்றுபோடும்!

போர்க்காலம்

போர்க் காலத்தின் போதான அரசியல் மிகவும் அவதானமாகக் கையாளப்பட்டது.இலங்கைப் பாதுகப்புச் செயலர் கோதாபாய ராஜபக்ஷ, கனரக ஆயுதங்களைக் கட்டுப்படுத்த முடியாது என அறிக்கை வழங்க, தமிழக முதலமைச்சர் கருணாநிதி இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவனையை நிறுத்தியுள்ளதாக செவ்வி வழங்கினார். இனப்படுகொலையின் பின்புலமாகவமைந்த ஆளும் கட்சியோடு இவர் தேர்தல் கூட்டமைக்க, கருணாநிதியோடு திருமாவளவன் கூட்டமைத்துக் கொண்டார். பொருளாதார நெருக்கடியில் திண்டாடிக்கொண்டிருத மேற்கு, இந்தியவினதும் சீனாவினதும் பங்களிப்பின்றி பொருளாதாரத்தை மீளமைக்க வேறு வழிக்ளில்லை எனத்தெரிந்து வைத்திருக்கிறது. ஏற்கனவே மனிதப்படுகொலைகளின் மீதும் போரின் மீதும் தனது சரியும் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்திருக்கும் மேற்குலகத்தின் பொருளாதார ஆதிக்கத்தை ஆசிய நாடுகளில் கட்டுபடுத்தும் இன்னொரு நோக்கமும் இந்தியா நடாத்திய இப்போரின் பரிசோதனைப் பொருட்களில் ஒன்றென மேற்கு அறிந்து வைத்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளும் தமது தலையீட்டை நிகழ்த்த மறுபடி மறுபடி பரிசோதனை நிகழ்வுகளை மேற்கொண்டது. இலங்கை அரசு பிரித்தானிய தூதுக்குழுவை நிராகரித்தது. சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கையில் அனுமது வழங்க மறுத்துவிட்டது.

ஐ.எம்.எப் வித்தத் நிபந்தனைகளை உதாசீனம் செய்த இலங்கை அரசு இந்தியா தமக்கு உதவிசெய்யத் தயாராகவிருப்பதாக வெளிப்படையாகவே அறிவித்தது. போர் அழிவுகள் தொடர்பாகவும் மனிதப் படுகொலைகள் குறித்தும் வெளிப்ப்டையாகப் பேசியவர்களில் பிரித்தானி வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபாண்டும் ஒருவர். பிரித்தானியாவும் பிரான்சும் தலைமை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தலையிட முற்பட்ட போதெல்லாம் இந்தியா இலங்கைக்கு ஆதரவவு வழங்கியது மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியில் மேற்கிற்கு எதிரான தேசிய உணர்வு மேலோங்கவும் வழிசெய்தது. ஈராக்கிலும் ஆப்கானிலும் மனிதப்படுகொலை மேற்கின் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தல் இங்கு நோக்கமல்ல. சீன-இந்திய நாடுகளின் தலைமியிலான ஆசிய அதிகார மையம் மேற்கின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் பரிசோதனைக் கூடமாக வன்னியைப் பயன்படுத்துக் கொண்டது என்ப்தை நிறுவுதலே கட்டுரையின் நோக்கம்..

இவற்றிலெல்லாம் ஆசியப் பொருளாதார ஆதிக்கம் வெற்றிவாகை சூடிக்கொண்டு கொழும்புத் தெருக்களில் கொலைக் கொண்டாட்டங்களை நடாத்தியது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் தென்னிந்தியத் தமிழர்கள் மத்தியிலும் இலங்கை – இந்திய அரசுகள் முழுமையாகத் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

பின் போர்க்காலம்

பின் போர்க் காலத்தில் இலங்கை அரசு தனது இனப்படுகொலையை எந்தத் தடையுமின்றி புதிய ஆசிய வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனையற்ற ஆதரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசு இலங்கையச் சர்வதேசக் குற்றவியல் சட்டங்களின் பிடியிலிருந்து விடுவித்த அதேவேளை மேற்கின் தலையீட்டிற்கெதிராகவும் தம்மை நிலை நிறுத்திக்கொண்டன. இலங்கையை முன்வைத்து மேற்கு நாடுகளின் தலையீட்டிற்கெதிராக நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆசிய அதிகார மையங்கள் சர்வதேச இராஜதந்திர வெற்றியீட்டியுள்ளன. இலங்கையில் தலையீடு மேற்கொள்வதற்கான மேற்குலகின் அனைத்து அரசியற் தந்திரங்களையும் இந்தியா தலைமைதாங்கிய அரசியல் நகர்வுகளால் முறியடித்துள்ளது.

இந்திய அதிகார வர்க்கத்தின் வியாபாரப் பசிக்குப் பலியான இரண்டு லட்சம் விவசாயிகளைப் போல, நந்திகிராமில் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலை நிறுவுதற்காக இரவோடிரவாகக் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவிகளைப் போல, சிறப்புப் பொருளாதார வலையத்தை நிறுவுதற்காக லால்காரிலும் சிங்கூரிலும் கொன்றொழிக்கப்படும் பொதுமக்களைப் போல, இலங்கையின் தடுப்பு முகாம்களில் வதைக்கப்படும் அப்பாவித் தமிழர்கள் அதிகார வர்க்கத்தால் மனிதர்களாகக் கருதப்படுவதில்லை. மனித் உயிர்கள் மீது இந்தக் இவர்களெல்லாம் நடாத்தி முடித்த பரிசோதனைகளின் தொடர்ச்சி தெற்காசியத் தெருக்களில் இன்னுமின்னும் மனிதர்கள் கொசுக்கள் போலக் கொல்லப்படுவார்கள் என்பதௌ உணர்த்தி நிற்கின்றன.

இலங்கை முகாம்களுக்குப் புறத்தே வடகிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் துணை இராணுவக் குழுக்களின் துணையோடு மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவின் இஸ்ரேலாக உருவாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் இலங்கை தமிழ்ப்பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையை இந்திய அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் தொடரும் என்பதற்கான எதிர்வுகூறல்களுக்கு இன்னும் ஆயிரம் சாட்சிகள் முன்வைக்கப்படலாம். இந்தியாவின் இஸ்ரேலை உருவாகுதற்காக சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் சிங்கள மக்கள் மத்தியில் ஆழ விதைக்கப்படுகிறது. யூதர்களைப் போலவே சிங்கள பௌத்தர்களுக்கான ஒரே நாடு என்று மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசர்களில் ஒருவரான சசங்க குணதிலக குறிப்பிடுவதும் இதே உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பின் போர்க்காலத்தில் இந்திய இலங்கைக் கூட்டு நடவடிக்கைகள் இரண்டு பிரதான விடயங்களில் எதிர்பார்த்த வெற்றியை எட்டமுடியவில்லை.

1. மேற்கு நாடுகளில் புலம் பெயர் இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்குதல்.
2. தமிழக மக்களின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவைச் சீர் குலைத்தல்.

இலங்கை அரசு ஒத்துக்கொண்டிருப்பது போலவே புலம்பெயர் நாடுகளில் அதற்காக வேலைகளுக்காகப் பெருந்தொகைப் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழ்ப் புலி எதிர்ப்பாளர்களில் பெரும் பகுதியினர் அரசின் இனப்படுகொலைகளை வெளிப்படையாகவே நியாயம் கற்பிக்குமளவிற்கு தரம் தாழ்ந்துபோனட்தானது இலங்கை அரசின் புலம்பெயர் நாடுகளிலான உத்வேகத்தை சுட்டி நிற்கின்றது.

மேற்கு நாடுகளில் இவர்களிற்கிருக்கும் குறித்த எல்லைகுட்பட்ட சுதந்திரமும், இங்கு வாழ்கின்ற இரண்டாவது தலைமுறையின் புதிய எழுச்சியும் தமிழ் அரச ஆதரவாளர்களின் அரச ஆதரவுப் பிரச்சாரங்களுக்குப் போதியளவு வெற்றியைத் தேடித்தரவில்லை.

இந்த நிலையில் இவர்களில் பலர் தென்னிந்தியாவில் தமது அரச ஆதரவுப் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சூழ்னிலையில் கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மனாதனின் அரசியற் பிரவேசமும் புலிகளின் சர்வதேச அரசியற் பிரிவின் புதிய உருவாக்கமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரித்தானிய இன்ரபோல் உளவு அமைப்பினால் தீவிரமாகத் தேடப்படுகின்ற இவர், தகவற் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற, சர்வதேசச் சட்டங்களால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதியாக வெளிப்படையாக இயங்குவது எப்படிச் சாத்தியமானது என்ற வினாக்களெல்லாம் தொக்கி நிற்க, மேலும் பல சந்தேகங்களும் விடைகாணப் படாதவையாகவே அமைந்துவிடுகின்றன.

இன்று வரைக்கும் இலங்கையில் நிகழ்த்தப்படும் அப்பாவிமக்கள் மீதான பிரகடனப்படுத்தப்பட்ட யுத்ததிற்கு இந்தியாவே பின்புலமாக அமைந்துள்ள அரசியற் சூழலில் கே.பி தனது செவ்வியில் இலங்கையில் நடைபெற்ற யுத்ததிற்கு சீனாவும் ரஷ்யாவுமே காரணம் என்று குறிபிட்டு இந்தியாவைத் தவிர்த்திருந்தமை பல சந்தேகங்களை பலரின் மத்தியில் விதைத்திருக்கிறது.

இலங்கையில் தடுப்பு முகாம்களில் வதைக்கப்படும் அகதிகளிற்கு உதவும் நோக்கோடு இந்தியாவை அணுகும் நோக்கமே இவ்வாறான அரசியல் நகர்வுகளுக்குக் காரணம் என்ற தொனிப்பட கே.பீ கூற முனைந்துள்ளது அவரின் ஹெட்லைன்ஸ் டுடே வானொலிக்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படுகிறது.

தடுப்பு முகாம் அகதிகளுக்கு உதவவென ஆயிரக்கணக்கான மனித உரிமை அமைப்புக்களும் தயாரவுள்ள போதிலும் இந்திய அரசின் ஆதரவோடு மகிந்த அரசு அனைத்து உதவிகளையும் தடை செய்துவருக்கின்றது மட்டுமல்ல அந்த மக்களை அரச பாசிசத்தின் நவீன அடிமைகளாக மாற்றி வருகின்றது. இங்கு உதவிகள் அவர்களைச் சென்றடைய வேண்டுமானால், மூன்று லட்சம் மக்களும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டுமால் இலங்கை அரசின் மீதும் அதற்கு ஆதரவாக அமையும் இந்திய அரசின் மீதும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பல மில்லியன்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் தொடர்பாக கேள்வியெழுப்பப்படும் சூழலில், இலங்கை அரசின் மீதான அழுத்தத்தின் முதற்படியாக இலங்கை அரசிற்கெதிரான போர்க்குற்ற வழக்குகள் சர்வதேச நீதி மன்றத்திலும் ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திலும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இவைபோன்ற ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல அழுத்தங்களையெல்லாம் நிராகரித்து விட்டு இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தப் போகிறேன் என்பதும், தமிழ் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த முனைகிறேன் என்பதும் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

குறிப்பாக இனப்படுகொலையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டிவரும் இலங்கை அரசிற்கெதிரான புலம் பெயர் நாடுகளில் உருவாகக் கூடிய எதிர்ப்பியக்கங்களை நிர்மூலமாக்க கே.பீ ஊடாக இந்தியா மேற்கொள்ளும் சதி முயற்சியா இவையெல்லாம்  என எண்னத்தோன்றுகிறது.

இலங்கையிலும், இந்தியாவிலும், புலம்பெயர் சமூகத்திலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் பற்றும் மனிதாபிமானமுமுள்ள சக்திகள் அதிகார வர்க்கத்தின் மனிதப் படுகொலைகளுகெதிராக இணைந்து கொள்வதே இன்று அனைவரினதும் முன்னாலுள்ள சமூகக்கடமையாகும்.

Exit mobile version