அவர் அவ்வப் போது சிறுகதைகளை எழுதி வந்திருப்பினும் ‘வரலாறு அவளைத் தோற்றுவிட்டது’ என்ற நாவலே ஈழத்து இலக்கிய உலகில் அவரை கணிப்புக்குரியவராக்கியது. இந்நாவல் வெளிவந்த காலத்தில் அதிகம் பேசப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க அசிரியர் வௌ;வேறு காலங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளை தொகுத்து ‘மண்ணின் முனகல்’, ‘பாடுகள்’; என்ற தலைப்புகளில் இரு தொகுப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளார். இவ்விரு தொகுப்புகளையும் நோக்குகின்ற போது அவரது உலக நோக்கில், படைப்பாளுமையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
இலங்கையில் நவீன காலத்தே எழுந்த இலக்கிய வடிவங்களில் சிறுகதைக்கான மவுசே அதிகரித்துள்ளதை அவதானிக்கலாம். அண்மைக் காலத்தில் இலங்கையிலிருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகள், இணைய தளங்கள், இலக்கிய வெளியீடுகள் எனபனவற்றை அவதானித்தால் இவவம்சம் புரியும். உதாரணம் தேடி வெகுதூரம் அலைய வேண்டியதில்லலை. கடந்த காலத்தில் வெளிவந்த ஈழத்து முற்போக்கு சிறுகதை தொகுப்பு, நீர்வை பொன்னையனின் நீர்வை பொன்னயன் கதைகள், நிமிர்வு, காலவோட்டம், தெணியானின் இன்னnhரு புதிய கோணம், ஒடுக்கப்பட்டவர்கள் இதயராசனின் முரண்பாடுகள், தம்பு சிவாவின் சொந்தங்கள், முதுசம், நந்தினி சேவியரின் நெல்லிமர பள்ளிக் கூடம், யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத் துணி, சேகுவேரா இருந்த வீடு, காத்தியாயினி சுபேஸின் தாய் மடி தேடி, மு. அநாகரட்சகனின் நிமிர்வு, வசந்தி தயாபரனின் காலமாம் வனம், சிவனுமனோஹரனின் கோடாங்கி, பிரமிளா பிரதீபனின் பீலிக்கரை, பாக்குப்பட்டை, தேவ முகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி இன்னும் இது போன்ற பலருடைய ஆக்கங்களையும் அது பற்றி வெளிவந்த ஆய்வுகளையும் நோக்குகின்ற போது இவ்;வுண்மை புலப்படாமல் போகாது. இந்த பின்னணியில் நோக்குகின்ற போது டேவிட்டின் இவ்விரு சிறுகதை தொகுப்பும்; கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். இந்த போக்கினை பொதுவான தமிழ் இலக்கிய செல்நெறியாக கொள்ள முடியாதுள்ளது என்பதை தமிழ் நாடடின் இலக்கிய போக்கோடு ஒப்பிடுகின்ற போது அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக தமிழ் நாட்டில் இன்று சிறுகதைக்கு சம அளவில் அல்லது சில வேளைகளில் அதனை விடவும் கூடுதலான அங்கிகாரமும் மதிப்பும் நாவலுக்கு உண்டு என்பதை அவதானிக்கலாம். சுமார் ஆயிரம் பக்கங்களை கொண்ட நாவல்களும் வெளிவந்து அவை வாசகர்களின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளன. மிக அண்மையில் nளிவந்த பா. வேங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ என்ற நாவல் இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். அந்தவகையில் தமிழ் நாட்டின் இலக்கிய செல்நெறியிலிருந்து இலங்கையின் இலக்கிய செல்நெறி மாறுப்பட்டுயிருப்பதன் சமூகப் பின்னணி என்ன என்பது பற்றிய தெளிவுணர்வு இலக்கிய ஆராய்ச்சி மாணாக்கருக்கம் வாசகருக்கும் அவசியம் வேண்டப்பட்டதொன்றாகும். இவ்வினாவுக்கான விடை தேட முனைகின்ற போது நாவல் சிறுகதை அகிய இலக்கிய வடிவங்களின் தோற்றத்திற்கும் சமூகபின்னணிக்குமான உறவு குறித்த பார்வை அவசியமானதாகின்றது. இக்காரண காரிய தெடர்பு பற்றி பேராசிரயர எம்.ஏ நுஃமான் பின்வருமாறு கூறுவார்:
நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் உடைவில் இருந்து முதலாளித்துவ சமூகம் தோன்றும் போது – அத்தகைய பாரிய சமூக மாற்றத்தின் விளைவாக புதிய நிலைகளைப் பிரதிப்பலிக்கும் இலக்கிய வடிவமாக நாவல் தோன்றுகின்றது.
முதலாளித்துவ சமூக அமைப்பு வேரூன்றி, மத்தியதரவர்க்கம் நிலைபேறு அடையும் போது புதிய சமூகவமைப்பின் அமுக்கம் தனிமனிதர்களின் வாழ்க்கையில் தோற்றுவிக்கும் நெரிசலும், மனமுறிவும், சலனங்களும் இறுக்கமாக வெளிப்படுத்தப்படக்கூடிய இலக்கிய வடிவமாக சிறுகதை செல்வாக்கு பெறுகிறது.
முதலாளித்துவ சமூக அமைப்பின் அமுக்கம் அதிகரிக்க அதிகரிக்க, சமூக முரண்பாடுகளும் மோதல்களும் அதிகரிக்க அதிகரிக்க அவைபற்றிய எழுத்தாளனின் பிரக்ஞையும் விரிவடைந்து அவனது மன உலகம் அகல நோக்குப் பெறுகிறது. சமூகமாற்றங்கள் இயக்கங்கள் கருத்தோட்டங்கள். வாழ்க்கைமுறை மாற்றங்கள் போன்றவற்றையெல்லாம் முழுமையாகவும் காரணகாரிய தொடர்ச்சியடனும் தெளிவாக்க வேண்டிய தேவை அழுத்தம் பெறுகின்றது. இதற்கு நாவலே தகுந்த சாதனமாதலால் அது இலக்கிய முதன்மை பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது.’
இவ்வகையில் நோக்குகின்ற போது நாவலே சிறந்த வடிவம் என்பதோ அல்லது சிறுகதை சமூக போராட்டங்களை சித்திரிக்காத இலக்கிய வடிவம் என்றோ நாம் முடிவக்கு வர வேண்டிய அவசியமில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியமாகும். இன்றை நசிவு தரும் சூழலில் நாவல் எவ்வாறு ஜனரஞ்கம் என்ற பெயரில் குடும்ப கதைகள், மர்மக்கதைகள், சரித்திர கதைகள் என பொதுமக்களிடையே விரக்தியையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகின்றதோ அவ்வாறே சிறுகதையும் அத்தகைய பண்புகளை அடிப்படையாக கொண்டு வெளிந்திருக்கின்றது. மறுப்புறத்தில் மக்கள் படைப்பாளிகள் நாவல் சிறுகதை ஆகிய இலக்கிய வடிவங்களை கொண்டு வெகுசன போராட்ட உணர்வை வௌ;வேறு தளங்களில் வடிவங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர எனபதை நாம் அறிவோம்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் அது தோற்றவிக்க கூடிய தனிமனித நெரிசல்கள், தனிமனித முரண்பாடுகள் கூடவே இவற்றையெல்லாம் மூடி மறைத்து அதிகாரத்திலிருப்பவர்களின் சௌகரியத்திற்காக தன்னலம் பேனி இழி தொழில் காக்கும் மனிதர்களின் ஈனச்செயல்கள் தனிமனிதர்களுக்கிடையிலான நெரிசல்களை முனைப்படைய செய்திருக்கின்றன. மேலும் கடந்த முப்பது வருடங்களாக எமது நாட்டில் இடம் பெற்ற இனவிடுதலைப் போராட்டம் பற்றிய ஆழ்ந்த நேர்மையான ஆய்வகள் வெளிவராமையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத் தக்கதே. ஆங்கில மொழிக்கு அடுத்த நிலையில் தமிழ் மொழியிலேயே இணையத்தள வளர்ச்சி காணப்படுகின்றது. இதற்கு மிக முக்கியமான அடிப்படை எமது நாட்டில் இடம் பெற்ற இனவிடுதலைப் போராட்டமும் அதனை அடியொட்டியெழுந்த புலம்பெயர்வு வாழ்க்கையுமே காரணம் என்பதை தமிழ் இணைய தளங்களில் வெளியாகியுள்ள ஆக்கங்கள் சான்றாக அமைந்திருக்கின்றன. இத்தகைய பின்னணி நாவலை விட சிறுகதை தோன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கியிருக்கின்றன என அமைதிக் கொண்டாலும், இனவிடுதலைப் போராட்டமும் அது தோற்றவித்திருக்கும் சமூக மாறுதல்கள்-பன்மைத்துவம் என்பனவற்றை முழுப் பரிமாணத்துடன் சித்திரிக்க கூடிய வடிவமாக நாவல் திகழ்ந்த போதும் இலங்கையில் இனவிடுதலைப் போராட்டத்தை சித்திரிப்பதில் நாவலை விட சுpறுகதை ஏன் முனைப்புப் பெற்றுள்ளது என்பது முக்கியமான வினா. இதுப் பற்றி இக்கட்டுரையின் முடிவில் விவாதிப்போம்.
மண்ணின் முனகல் என்ற தொகுப்பில் ‘ஊர்வலம் செல்கின்றது'(1971), ‘கஸ்தூரி'(1973), ‘இதயங்கள் கரைகின்றன'(1975), ‘அதிர்வு'(1995), ‘பாண் போறனை’ (2010), ‘உணர்வுகள் கட்டுடைந்தால்..?'(1977), ‘ மிசின்பொட்டி'(1982), ‘நாய்மூளை'(2009), ‘சிறைக் கதவுகள் திறநதுக் கிடக்கின்றன'(1978), ‘கண்ணீர் கொந்தளிக்கும்'(1974), ‘மண்ணின் முனகல்'(1999), ‘ நான் கேவலமானவனல்ல'(1985) என பன்னிரெண்டு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே பாடுகள் என்ற தொகுப்பில் ‘தாய்மையின் விலை'(1978), ‘ஆசைச் சாப்பாடு'(1982), ‘ கண்ணீர் எப்ப முடியும்'(1982), ‘சுடுகாடு'(1982), ‘சூடுகள்'(1983), ‘மண்வாசனை'(1985), ‘பாடுகள்'(1986), ‘ ‘சிறுவாணம்'(1994), ‘இருள்'(1994), ‘ஒல்லித் தேங்காய்கள்'(1995), ‘குறுணிக்கல்'(1995), ‘விபச்சாரங்கள்'(2002) என பண்ணிரெண்டு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக் கதையாசிரியரின் கதைகளை வாசித்த போது சில செய்திகள் முனைப்பாக தோன்றுகின்றன.
டேவிட்டின் சிறுகதைகளைத் தொகுத்து நோக்குகின்ற போது கடந்த மூன்று தசாப்தங்களாக எமது நாட்டில் நடைப்பெற்ற இனவாத யுத்தம் எமது நாட்டின் சமூகப் பொருளாதாரம், கல்வி, கலை , பண்பாடு சமூக்கட்டுக் கோப்பு போன்ற அம்சங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவரது சிறுகதைகள் அழகுற எடுத்துக் காட்டுகின்றன. கடந்த காலங்களில் தான் அனுபவித்த துன்பத்துயரங்கள், இதனால் அவர் பெற்ற தாக்கங்களும் மனவெழச்சிகளும் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்துக்களில் தொண்ணூறு சத வீதமான பாத்திரங்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆவார். மேலும் தமது வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய தாகவும் அக்கதைகள் அமைந்துள்ளன. ஒருப்புறமான இனவாத அடக்கு முறைகளும் மறுப்புறமான தமிழ் பாஸிசத்தின் நசிவு தரும் அரசியல் பயங்கரவாதமும் இம்மகளின் வாழ்வை சிதைவுக்குள்ளாக்கியது. இத்தகைய வாழ்வின் கொடுரங்களைங்களையும் அவற்றினிடையே வாழும் மனிதர்களையும் இவரது கதைகள் வௌவேறு வகையில் சித்திரித்துக் காட்டுகின்றன. இனவெறிக்கு பலியாகி தன் குழந்தைக்கு பாலூட்ட கூட மார்பு இல்லாத நிலையில் தவிக்கும் தாயை நாம் ‘நான் கேவலமானவனல்ல’ என்ற கதையில் சந்திக்கின்றோம். இவ்வாறே இனவாத யுத்தத்தின் பாதிப்புகள் பற்றி கூறும் கதைகளாக அவரது அதிர்வு, பாண்போறணை, கண்ணீர் கொந்தளிக்கும், மண்ணின் முனகல், சிறுவாணம், குறுணிகல், விபச்சாரங்கள் ஆகிய கதைகள் அமைந்துள்ளன.
தமிழ் தேசிய போராட்டம் முனைப்புற்றிருந்த சந்தர்ப்பத்தில் மக்கள் இயக்கங்கள் பின் தள்ளப்பட்டு தமிழ் பாசிச இயக்கப் போக்கு முனைப்படைந்திருந்தது. இதன் பின்னணயி;ல் அழகியல் வாதம் ஈழத்த இலக்கிய அரங்கில் மீண்டும் அரியணையேறியது. அதனையும் மீறி யதார்த்தபபை;பகள் தலை காட்டிய போது தமிழக்தில் ஜெமோகன் போன்ற வகையறாக்கல் ஈழத்து படைப்பாளிகள் தமத முதுகொடிய யதார்த்தத்தை சுமர்க்கின்றார் எனவும் அதனால் ஈழத்தவர்களின் படைப்புகளில் கலைத்துவத்தை விட அரசியல் பிரசார வாடையே அதிகரித்தள்ளது என்ற கண்டுபிடிப்பையும் நிகழ்த்தி ஆகவே ஈழத்து படைப்புகள் யாவும வெறும் வெம்பல்கள் என்ற தீர்ப்பையும் வழங்குகின்றார். ஈழத்தில் ஒரு காலக்கட்டத்தில் மார்க்சிய விமர்சகர்களாக திகழ்ந்து பின் அழகியல் வாதத்திற்குள் முடங்கியவர்களும் இக்கருத்தை ஆதரித்திருந்தனர்(இன்று இந்நிலைப்பாட்டில் முhற்றம் எற்பட்டுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேணடும்). அப்படியாயின் அவர்களின் பிரகடனம் தான் என்ன? இலங்கையின் தமிழ் தேசிய போராட்டத்தை அமெரிக்க மேலாதிக்கவாதிகளிடம் அல்லது உள்ளுர் பிற்போக்கவாதிகளிடம் ஒப்படைத்து விட்டு படைப்பாளியொருவர் அரசியல் பாதிப்பின்றி கலைத்துவத்தில் கவனமெடுக்க வேண்டும் என்பதன் பின்னணியில் உள்ள அரசியல் நயவஞ்சகத்தை எம்மால் அறிய முடியாமல் இல்லை.
டேவிட்டின் கதைகளை நோக்குகின்ற போது இந்த போக்கிற்கு மாறாக யதார்த்தவாதத்தை துணைக் கொண்டே தமது படைப்புகளை ஆக்க முனைந்திருக்கின்றார். அவரது கதைகளில் வரும் வகைமாதியான பாத்திரங்கள் யாவும் சமூகத்தில் நடமாடும் மனிதர்களே. ஆந்தவகையில் யதார்த்த நிலை நின்று பாத்திர படைப்புகளை படைப்பதில் இக்கiயாசிரியர் வெற்றிப் பெற்றிருக்கின்றார் என்றே கூற வேண்டும்.
டேவிட்டின் கதைகளில் முக்கியமாக சமூகப் பிரச்சனையாக விளங்குவது கல்வியாகும். இன்றைய கல்வித் திட்டம் சமூக வளர்ச்சிக்கான முழு பரிமாணத்தை கொண்டிருக்கவில்லை எனபதை அசிரியர் தயவு தாட்சண்யமின்றி விமர்சனத்திற்குட்படுத்துகின்றார். ஓர் ஏற்றத் தாழ்வான சமூகவமைப்பில் கல்வியமைப்பிலும் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதை வளர்ச்சியடைந்த நாடுகளின் புள்ளிவிபரங்களும் காட்டுகின்றன. ஓர் உதாரணத்திற்காக அமெரிக்காவில் அரைமில்லியன் மாணவர்களிடத்தே செய்யப்பட்ட ஆய்வறிக்கையின்(கோல்மன்) பின்வரும் விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கது:
ஒரே தன்மையான கல்வி வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதினும் கூட எந்த விதமான சமூக ஏற்றத்தாழ்வுகளுடன் மாணவர்கள் பள்ளியில் நுழைந்தார்களோ, அவற்றில் எவ்வித மாற்றமும் ஏற்படாமலே அவர்கள் பள்ளியை விட்டு செல்கின்றார்கள். ஏழ்மையான மற்றும் பின்தங்கிய பின்புலத்தில் இருந்து வந்த மாணவர்கள் மோசமாக படித்தார்கள் என பின்னடைந்தார்கள் என எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. வேறுசில ஆய்வுகள் வெறும் ஜந்து சத வீத மாணவர்கள் மட்டுமே தாங்கள் படித்த சமூகக் குழுவின் படிநிலையை தங்கள் கல்வியின் மூலம் தாண்டியுள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அந்தவகையில் வணிகமயமாகிவிட்ட கல்வி முறையில் மாணவர்கள் பரீட்சை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்களாகவே காணப்படுகின்றனர். இது பற்றி ‘பாண்போறனை’ என்ற கதையில் இச்சிறுகதையாசிரியரின் உணர்வகள் இவ்வாறு பிரவாகம் கொண்டிருக்கின்றன:
‘ கல்விக் கூடங்கள் என்பன பரீட்சை வினாக்களுக்கான விடைகளைத் தயார்ப்படுத்தும் நிலையங்களே தவிர வாழ்க்கக்கான போதனைகளையோ சமூக முடிச்சகளை அவிழ்க்கும் அல்லது அறுக்கும் போதனைகளையோ செய்யும் சமூக நிறுவனங்கள் அல்ல..
என்ற உண்மையை…
மிக நிண்ட கயிற்றில் ‘கல்வி மேய்ச்சல்’ நடத்தி மிகப் பெரம் கல்வியலாளர்களாலேயே புரியப்படாமல் இருக்கும் போது வறுமை என்ற ஒரு முழக் கயிற்றில் ‘சமூக மேய்ச்சல்’ நடத்திய கபிரியேலால் புரிந்துக் கொள்ள முடியுமா?
என இன்றைய கல்வியன் போக்குகளை விமர்சனத்திற்குட்படுத்துகின்றார். அவரது ‘நாய் மூளை’ என்ற கதையில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து உங்கள் முன் சில முளைகளை வைத்தால் நீங்கள் யாருடைய மூளையை எடுப்பீர்கள் என வினவ அசிரியர் குறிப்பிட்ட மூளைகளில் மாணவரொருவன்; டாக்டரின் மூளை எடுப்பேன் எனவும்; வேறொரு மாணவன் மந்திரியின் மூளையை எடுப்பேன் எனவும் கூறி நிற்க ஏழ்மையின் காரணமாக வகுபபில் பின்தங்கிய நிலையில் நிலையிலிருக்கும் மாணவனொருவன் எவ்வித பதிலும் கூறாமல் இருக்க, பின் ஆசிரியர் தனியாக அழைத்து வினவும் போது தனக்கு நாய் மூளை வேண்டும் என அவன் கூறும் வரிகள் குருதி குழாய்களில் இரத்தத்தை உறையச் செய்துவிடுகின்றன. இக்கட்டத்தை படிக்கும் போது என் உள்ளம் உருகி கண்ணீரும் வந்து விட்டது.
இன்றைய கல்வி முறையை விமர்சனத்திற்குட்படுத்தம் டேவிட் சமூக அசைவியக்கத்தில் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறத் தவறவில்லை. ‘முழுமையான சமூகமாறறத்துகானதாய் அமையாத போதினும், அதற்கான தேடலை ஏற்படுத்துவதும், சமூக அசைவியக்கம் வாயிலாக சிறு முன்னேற்றத்தை அருட்டுணர்வாக்க வல்லதாகவும் கல்வி அமைகிறது. இந்தப் படைபாளியும் கூட சமூகப் புறக்கனிப்புகளையும் வறுமையையும் கல்வி வாயிலாகப் புறங்காணச் செய்தவர் தான். அவரை கட்டமைத்த மோகதாஸ் சனசமூக நிலையம் கல்வி குறித்த மயக்கங்களுக்கு இடமளிக்காமல், அதன் சமூக அசைவியக்கப் பாத்திரத்தைப் புரிந்துக் கொண்டு இயங்கியதன் வாயிலாக மட்டுவிலின் முன்னேற்றத்தை கல்வியூடாக ஏற்படுத்தியிருந்தது'(ந. இரவீந்திரன், மண்ணின் முனகல், தொகுப்பின் அணிந்துரையில்). இவ்விடத்தில் முக்கியமாக சுட்டிககாட்ட வேண்டியது யாதெனில் இன்று நிலவுகின்ற கல்வியினூடாகவே இந்த சமூஅமைப்பை மாற்றி விடலாம் என கனவு கண்டவர்கள் வெறும் கற்பனை லோகத்திலே சஞ்சரிப்பவர்களாக இருந்தார்கள். மறுப்புறத்தி;ல் தாங்களை புரட்சி;யின் புனிதர்கள் காட்ட முற்பட்ட அதிதீவீரவாதிகள் சிலர் முதலாளித்துவ சமூகவமைபில் நிலவக் கூடிய கல்வியை புறக்கணிப்போம் என்ற போர்வையில் (சில சமயங்களில் தங்களது கல்வித் தகுதியை உச்சமாக வளர்த்துக் கொள்வதில் கூடுதல் கவனமெடுத்த அதேசமயம், ஏனையோர் கல்விப் பெறுவதற்கு தடையாக இருந்த கோசம் எழுப்பியவர்கள் நம்மத்தியில் இல்லாமலில்லை) கல்வியை புறக்கணித்த அவலம் தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றது. டேவிட்டை பொறுத்த மட்டில் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டவராகவும் நேர்மையானவராகவும் இருந்தமையால் அவரால் கல்வியின் இரு பக்கங்களையும் பார்க்க முடிந்தது. இது இப்படைப்பாளியின் தனிச் சிறப்பு எனக் கூறலாம்.
இவ்விடத்தில் முக்கிய செய்தியொன்றினைக் கூற வேண்டியுள்ளது. ஒரு படைப்பாளி சமூகத்தில் அடித்தட்டில் உள்ள மாந்தர்களைப் படைப்பாக்கி விட்டார் என்பதற்காக அவர் முற்போக்கு வாதியாகிவிடமுடியாது. பல படைப்பாளிகள் தமது வர்க்க நலன் காரணமாக அறிந்தோ அறியாமலோ உழைக்கும் மக்களை கீழானவர்களாகவும் சில சமயங்களில் அவர்களை கிண்டலடிக்கும் பாணியிலும் பாத்திரங்களாக்கியுள்ளனர். அவ்வகையில் டேவிட் அடித்தள மக்களின் வாழ்வினை படைப்பாக்க முனைகின்ற போது இவர் அம்மக்களில் இருந்து தன்னை வேறுப்படுத்திக் கொண்டவராகவோ அல்லது உயர் குழாத்தினருக்குரிய மேட்டிமை மனோபாவத்துடனோ படைப்பாக்கவில்லை. மாறாக இதய உணர்ச்சி உள்ள மனிதனொருவனாக அவர் இப்பாத்திர படைப்புகளை உருவாக்கியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக ‘சிறைக்கதவுகள் திறந்து கிடக்கின்றன’ என்ற கதையில் வரும் கனகம் என்ற பெண் கஞ்சா விற்று சிறைக்கு செல்கின்றாள். அவள் திரும்பி வரும் போது அவளது தவறு தொடர்கின்றது. விபச்சாரங்கள் கதையில் பால் தெழிலாளியாக வரும் கமலா, தாய்மையின் விலை வாழ்வுக்காக பால் தொழிலாளியாக மாறிவிட்ட பொன்னமா இவ்வாறு இக்கதையாசிரியரில் வெளிப்படும் எண்ணற்ற பாத்திரங்கள் யாவரும் ஆடம்பர வாழ்க்கைக்காவோ அல்லது மாடமாளிகைக்காகவே இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டவர்கள் அல்லர். அந்தவகையில் மக்களின் அடிப்படை பிரச்சனையான பசி பிரச்சனையை- அதனால் உருவாகின்ற சமூகபொருனளாதார பிரச்சனையை- அதனையொட்டி மனித உறவுகளில் ஏற்படுகின்றற சமூகப்பிரச்சனைகளை வாழ்வியலுக்கூடாக அவர் படைப்பாக்கியிருப்பது சிறப்பானதாகும். இச்செயல்களுக்காக இம்மனிதர்களின் மீது கோபத்தைவிட அவர்களை உருவாக்கிய சமூகவமைப்பின் மீதான கோபத்தையே வாசகனின் தோற்றுவிக்கின்றது. வாழ்வாதாரத்தை உத்திரப்படுத்தாத சமூகத்தின் விளைவுகள் எத்தகையதாக உள்ளது என்பதை உணர்த்தி அவனது ஆன்மாவை உலுக்கிவிடக் கூடியதாக அப்பாத்திர படைப்புகள் உள்ளன.
படைப்பாளியொருவர் என்ன கருத்தை கூறுகின்றார், அவர் எப்படி சொல்கின்றார், அவர் கூறுவது வாழ்வாதாரத்துடன் எந்தளவு ஒத்துப் போகின்றது என்ற விடத்தில் தான் படைப்பாளியொருவரின் வெற்றி தங்கியிருக்கின்றது. அந்தவகையில் தனக்கு முன் யாரும் கண்டிராத அறிந்திராக ஒரு விடத்தினை படைப்பாளியொருவர் அறிந்தும் கண்டும் கூறுவாராயின் அதுவே உண்மையான படைப்பாகின்றது. வாழ்க்கையை நாம் புரிந்துக் கொள்வதற்கு மேலாக அவ்வாழ்க்கையின் இருண்ட பகுதியை நுண்ணயத்துடன் அறிந்துக் கொள்வதற்கு உணர்ந்துக் கொள்வதற்கு அப்படைப்பாளி நமக்கு துணைப்புரிகின்றார். இவ்வகையில் நாம் டேவிட்டின் கதைகளை நோக்குகின்ற போது பல படிநிலைகளின்றும் வரம்புகளின்றும் அல்லற்படுகின்ற மனித வாழ்வு பற்றி தரிசனத்தை நாம் அறிந்துக் கொள்வதற்கு துணைநிற்கின்றார்.அதனால் தான் அவரது படைப்புகளில் சமூகம் பற்றிய அறிவும் அதனடியாக தோன்றும் உணர்ச்சிகளும் உள்ளடக்கமாக இருக்கின்றது. மேலும் அதனை பொருத்தமான வடிவத்தில் வெளியிடுகின்றார். கருத்தை கதையாக சொல்லும் ஆற்றல் அவரித்தே சிறப்புற்றிருக்கின்றது என்பதற்கு அவரது சிறுகதைகள் தக்க ஆதாரமாக அமைந்துள்ளன.
பல எழுத்தாளர்கள் வாசகனை சிந்தனையற்றவவராக கருதி படைப்பில் இடையில் அல்லது பாத்திரங்களை தமது கருத்து பிரச்சாரர்களாக்கி தன் கலைப் படைப்பில் தானே செய்தியை வெளியிடுகின்றார்கள். டேவிட்டின் கதைகளில் வாழ்க்கை அனுபவங்கள் படைப்பாக்கப்பட்டுளள்ன. இவ்விரு தொகுப்பிலும் அடங்கியுள்ள கதைகளை வாசித்த போது கலைப்படைப்பு பற்றி ஃப்டையேவ் கூறிய கூற்று ஞாபகத்திற்கு வருகின்றது:
‘ஒரு கலைப்படைப்பின் இதயத்தில் ஆழ்ந்திருக்கும் கருத்து, சிந்தனை, உணர்ச்சிகளை எப்படி வெளியிடுவது என்று கலைஞன் எண்ணிப் பார்க்கும் போது, இந்நோக்கத்தை நிறைவு செய்ய எந்தச் சம்பவங்கள் பயன்படும், அச்சம்பவங்களின் செயற்பாடு எந்தப்போக்கில் போகும், சம்பவங்களின் வரிசைத் தொடர் எப்படியிருக்க வேண்டும் என்ற வினாக்களுக்கு விடை காண்பதற்காகச் சிந்தனை செய்கின்றான்.’
இவ்வகையில் புறவய யதார்த்தமும் அகவய உணர்வும் இணைந்தே டேவிட்டின் சிறுகதைகள் தோற்றம் பெற்றுள்ளமையால் இயல்பாகவே உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவம் பெற்று விளங்குகின்றது. படைப்பாளியின் உள்ளத்தில் தோன்றிய உணச்சியும் சிந்தனையும் அதேயளவு வாசகனிடத்தில் பதிவதாக அமைவது இப்படைப்பாளியின் தனித்துவமாகும்.
மேலும் டேவிட்டின் கதைகளில் காணப்படுகின்ற சிறப்புகளில் என்று தான் இலங்கை மண்ணின் பலவேறு களங்களும் அவரது கதைகளில் இடம்பெறுகின்றது. அவ்வாறு அவ்வாழ்வை படைப்பாக்கும் போது அவ்வவ் பிரதேசத்திற்குரிய வாழ்வியல் அம்சங்களுடன் வெளிக் கொணரப்படுகின்றது. அவர் அசிரியராக மலையகத்திலும் மூதூரிலும் கடமையாற்றிருக்கின்றார். பின் உதவிக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று, தமது சொந்த ஊரான யாழ்பாணத்தல் கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றார். இக்கால சூழலில் அவர் பெற்ற அனுபவங்கள் இங்கு படைபாக்கப்பட்டள்ளன. உதாரணமாக ‘சுடுகள’; என்ற கதையில் வருகின்ற வேலைகார சிறுவனின் பாத்தரத்தின் ஊடாக மலையகததின் வறுமை, வேலைக்காக செல்லும் சிறுவர்களின் உழைப்பு சுரண்டல், ஏஜமான வர்க்கத்தின் கர்ணக் கொடுரமான வதைகள் என்பனவற்றை அழகுற எடுத்துக் காட்டியிருக்கின்றார். அவ்வாறே ‘பாண்போறனை’, ‘மண்வாசைன’ ஆகிய கதைகளில் மூதூர் பிரதே வாழ்க்கை காட்டப்படுகின்றது. ஏனைய அனைத்துக் கதைகளிலும் யாழ்பாண பிரதேச வாழ்வு படைப்பாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வௌ;வேறு பிரதேச வாழ்வை படைப்பாக்க முற்படுகின்ற போது அம்மண்ணின் மனகமழும் பேச்சு வழக்கை சிறப்பாக கையாளுகின்றார். அவற்றில் யாழ்பாண பேச்சு வழக்கு அம்மக்களிடையே காணப்படுகின்ற பழமொழிகள் என்பனவற்றை கையாளுவதில் தான் அவர் முழுமையாக வெற்றிப்பெற்றிருக்கின்றார் என்பதை அவரது சிறுகதைகளை வாசிப்பதன் மூலமாக அறிய முடிகின்றது.
இவ்வகையில் அவரது படைப்புகளில் பலமான அம்சங்களை சுட்டிக்காட்டிய அதேசமயம் அதன் பலவீனமான அம்சங்களையும் குறித்துக்காட்ட வேண்டியதும் அவசியமானதாகும்.
இவ்விடத்தில் இவர் பொறுத்து பிறிதொரு மதிப்பீட்டை செய்வதற்கு இன்னொரு படைப்புடன் ஒப்புநொக்குவது பொருத்தமானதாக அமையும். நீர்வை பொன்னையன் தனது கதைகளில் புதிய சமூக எழுச்சியை காட்டுகின்றார். தனிதனியாக பிரிந்து நி;ற்கும் உழைப்பாளி சக உழைப்பாளியொருவருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக எவ்வாறு ஒன்று பட்டு போராடுகின்றார்கள் என்பதை சித்திரித்துக்காட்டுவதில் அவரது மேடும் பள்ளமும் என்ற கதை குறிப்பிடத்தக்கதொன்றாகும். பாலடைந்து போன மேட்டு நிலத்தில் விவசாயம் செய்வதற்காக உடையாரிடம் நிலத்தை பெற்ற கணபதி, தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தாரைவார்த்து இந்நிலத்தை பாலைவனமான அம்மண்ணை பசுமை நிறைச் சோலையாக மாற்றுகின்றார். அவ்விவசாயின் உழைப்பையும் அந்நிலத்தையும் அபகரிப்பதற்கு திட்டமிட்ட உடையார் தனக்கு வரவேண்டிய மொத்த கடனையும் ஒரே நேரத்தில் தருமாறு உத்தரவிடுகின்றார். கணபதியால் முடியாமல் போகவே அவரையும் மீறி அவரது தோட்டத்தில் உள்ள மரக்கறிகளை பிடுங்குகின்றார். நியாயம் கேட்க சென்ற கணபதியை உடையார் தாக்குகின்றார்.
இரத்த காயங்களுடன் கணபதி கீழே விழ அவர் மீது ஆனுதாபம் கொண்ட சக விவசாயிகள் ஒன்றிணைந்து போராட முற்படுகின்றாரகள்;. அவர்கள் படையெடுத்து மேட்டு நிலத்தை நோக்கி செல்கின்றனர். அக் கூட்டத்தில் யாரோ ஒருவருடைய தோலில் கணபதியும் தூக்கி செல்லப்படுகின்றார். இங்கு விவசாயிகள் தமது அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து உடையாரின் கட்டளையை மீறி போராடுகின்றார்கள். சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் உணர்ந்து அதனை எதிர்த்து உடையாருக்கு எதிராக விவசாயிகள் தாங்கள் ஒரு வர்க்கம் என்பதை உணர்ந்து போராடுவதை சிறப்பாக படைப்பாக்கிருக்கின்றார் நீர்வை பொன்னையன். இவ்வம்சம் கோட்hபடாக விபரிக்கப்படாமல் மனித உறவுகளின் அடிப்படையில் அவற்றை படைபாக்கியிருப்பது நீர்வையின் படைப்பாளுமைக்கு தக்க எடுத்துக் காட்டாக அமைகின்றது.
இவ்வகையில் டேவிட்டின் கதைகளை ஒப்பு நோக்குகின்ற போது அவை ஏற்றத்தாழ்வான சமூகமைப்பில் அது தோற்றுவிக்க கூடிய முரண்பாடுகள் துயரங்களை கண்டு கவலபை;படுவதாக தான் தோன்றுகின்றது. பசி மட்டுமே புரட்சியை கொண்டு வந்து விடாது. சில சமயங்களில் பசி பத்தையும் பறக்க செய்துவிடும் (இவ்வம்சம் டேவிட்டின் கதைகளிலும் படைப்பாக்கப்பட்டுள்ளது). சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் அது தோற்றுவிக்கும் வர்க்க முரண்பாடுகளும் மக்களின் ஒற்றுமைகளும் ஒரு தத்துவார்த்த பார்வைக்குள் ஒழுங்கமைக்கின்ற போது அது சமூமாற்றப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது என்ற உண்மையை உணர்ந்து தமது சிறுகதைகளை டேவிட் படைப்பாராயின் இன்னும் காத்திரமான படைப்புகளை அவரிடமிருந்து நாம் எதிர் பார்க்கலாம். இவ்வம்சம் ஒருப்புறமிருக்க அவரது படைப்புகளில் வெளிப்பட்டு நிற்கும் சோக உணர்வு கூட வாசகனை விரக்கியில் மூழ்கடிக்க செய்யாமல் சமூக அரைவியக்கத்தை முன்னெடுப்பதாக அமைந்துள்ளமை டேவிட்டின் பலமான அம்சமாகும் இவ்விடத்தில் குறித்துக்காட்ட வேண்டியதொன்றாகும்.
இந்நாட்டின் அதிகார வர்க்கமும் பேரினவாதிகளும் ஆரம்ப கால முதலாகவே தமிழர்களின் இனத்தனித்துவத்தை சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர். ஆரம்ப காலப்பகுதியில் வட-கிழக்கு சார்ந்த அரசியல் தலைவர்களும் புத்திஐPகளும் இலங்கைத் தேசியம் குறித்து கவனம் செலுத்திருந்தாமையினால் பேரினவாதம் பற்றி சிந்திக்க தவறிவிட்டனர். சேர்.பொன். அருணாசலம் போன்றோர் பேரினவாத்தை அடையாளம் கண்டிருந்த போதும் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அவர் இறந்துவிடுகின்றார். பின் வந்த தலைவர்கள் அதனை கவனத்திலே எடுக்கவில்லை. உயர் மத்திய தர வர்க்க வாழ்க்கை முறைகள், அரசியல் சிந்தனைகள், அரச சலுகைகள் காரணமாக பேரினவாதம் குறித்து அவர்கள் சிந்திக்க தவறிவிட்டனர். தமிழ் தேசியம் குறித்து முற்போக்கான சிந்தனையை கொண்டிருந்த தமிழரசுக் கட்சி அதில் அங்கம் வகித்திருந்தவர்களின் வர்க்க நலன் காரணமாக தமிழர் சமூகவமைப்பில் புரையோடி போயிருந்த சாதிய ஒடுக்க முறையை கவனத்திலெடுக்க தவறினர். அக்கட்சி பின்வந்த காலங்களின் தமிழ் தேசியத்தை வலதுசாரி சந்தர்பபவாதத்திற்குள் இட்டு சென்றமை இன்னொரு துரதிஸ்டமான வரலாற்று நிகழ்வாகும். மறுப்புறத்தில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன போராட்டத்தை முன்னெடுத்த கம்யூனிஸ்டுகள் தமிழ் இனவொடுக்கு முறைக்கு எதிரான தெளிவான தீர்க்கமான போராட்டத்தை முன்வைக்க தவறிவிட்டனர். இந்த சூழலில் தமிழ் முதலாளித்துவ சக்திகள் தமிழ் தேசிவாத போராட்டத்தை இனவாத போராட்டமாக முன்னெடுத்தனர். இந்த அரசியல் அடிப்படையுடன் தோன்றிய ஆயதம் தாங்கிய தமிழ் தேசிய போராட்டமானது இராணவாதத்திற்குள் மட்டுமே முடங்கி போனது. அது தன்னலவில் ஓர் பாசிச இயக்கமாக உருப்பெற்ற போது மக்களின் நலனிலிருந்து அந்நியமாகியதுடன் ஆண்டபரம்பரை பெருமைக்குள் மூழ்கி வெகுசன விரோத செயற்பாடுகளில் தன்னை கட்டமைத்துக் கொண்டது.
யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இஞைர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கதைகளை எழுதியவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்தாளர்களின் நெருக்கடியான சூழலை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. இன்று இந்த நெருக்கடியான சூழல்; கலையப்பட்டுள்ளது என்பதற்கு யோ. கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக அவரது அதிர்வு கதையில் வரும் விறகு சுமர்ந்து விற்கும் தொழிலாளி ஜெயராமன் கல்வியின் முக்கியத்துவம் பற்றி மகேசன் என்பருக்கு கூறுவதாக அமைந்த பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்:
‘அதுக்கு இரண்டு காரணங்கள்… ஒன்று தமிழன்ரை கல்வி… அடுத்தது தமிழன்ரை வீரம்…! வறுமைக்கு கல்வி தீனியானால்…. ஏங்கட அடுத்த தலைமுறை அடிமைப்படும்..’
இவ்வாறு தமிழரின் கல்விப்பெருமை வீரம் என்பன இக்கதையாசிரியரால் எடுத்துக் கூறப்படுகின்றது. டேவிட்டின் எழுத்துக்களில் பேரினவாதம் அம்பலப்படுத்தபடுகின்ற அளவுக்கு தமிழ் தேசியத்தின் அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் அம்பலப்படுத்தாத தவறுவது காலத்தின் நிரப்;பந்;தமாக இருந்திருக்கலாம் என அமைதி கொண்டாலும் சில சமயங்களில் தமிழ் தேசிய போராட்டத்தைத்தின் பிழையான பக்கங்களை அழகுப்படுத்திக் காட்ட முனைகின்ற பண்பினையும்; அவரது கதைகளில் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் இனமுரண்பாட்டினடியாக தோன்றிய குறுந் தமிழ் தேசியமும் பேரினவாதமும் சமூக முரண்பாடுகளையும் மோதல்களையும் அதிகரிக்க செய்துள்ளன. இந்த சூழலில் வாழ்வின் பன்முகத் தன்மையை முழுமையாக காரண காரிய தன்னையுடன் எடுத்துக் கூற கூடிய இலக்கிய வடிவமாக நாவல் இருந்த போதினும் இலங்கையில் சிறுகதைக்கான அந்தஸ்து அதிகரித்திருப்பதற்கான பின்னணி என்ன என்பதும் சுவாரசியமான வினா தான்.
நடந்து முடிந்த தமிழ்தேசிய போராட்டத்தில் தமிழ் பாசிசத்தின் பரிமாணத்தை பொது மக்கள் அனுபவித்து உணர்ந்திருந்த போதினும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்கள் நேர்மையாக முன்னெடுக்கபடாத நிலையில் பொது மக்கள் மீண்டும் குறுந் தமிழ் தேசிய அரசியலுக்குள் முடங்குவதாக அமைந்திருக்கின்றது. இந்த சூழலில் தமிழ் தேசியத்தின் குறுகிய அரசியல் போக்குகளை விமர்சித்தால் தாங்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டு போவோம் என்ற அச்சம் நாவல் தோன்றாததற்கு பிரதான காரணமாக அமைந்திருப்தாக எண்ணத் தோன்றுகின்றது. இந்த அச்சம் களையப்பட வேண்டும். தமிழ் தேசியவாத போராட்டத்தின் இருவழி பாதை பற்றி அதன் பன்முகத் தன்மையை வெனிக் கொணரும் வகையிலான நாவல் வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இவ்விடத்தில் இத் தொகுப்புகளில் காணப்படுகின்ற மிக முக்கியமான குறைப்பாடுதான,; இடையிடையே காணப்படுகின்ற எழுத்துப் பிழைகள் கருத்துப்பழைகளாக வாசகனை குழப்ப கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. பக்க வடிவமைப்பிலும் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. மண்ணின் முனகல் என்ற தொகுப்பில் ந. இரவீந்திரனின் அணிந்துரையின் பக்க வடிவமைப்பின் போது அத்தவறு ஏற்பட்டுள்ளது( iiiஇ iஎஇஎஇஎi எiiஇ எiii என பக்கங்கள் சரியாக இடப்பட்டிருந்தாலும் அதன் ஒழுங்கு முறை மாறியுள்ளது). எனவே அணிந்துரையை வாசிக்கின்ற போது தொடர்ச்சியின்மை காரணமாக குழப்பங்களை விளைவிக்க கூடிய அபாயம் இருக்கின்றது.
முடிவாக நோக்குகின்ற போது டேவிட் அவர்களின் சிறுகதைகள் காலத்தின் பதிவாக அமைந்திருக்கின்றது. அது பேரினவாதம் ஏற்படுத்திய வாழ்க்கை போக்குகளை சிறப்பாக கேள்விக்குள்ளாக்குகின்றது. அவ்வாறே தமிழ் தேசியப் போராட்டம் இழைத்த தவறையும் விமர்சன அணுகு முறையோடு கற்று வளர்திசையின் படிக்கற்களாக மேலும் அவரது படைப்புகள் வெளிவரவேண்டும் என்பதே காலத்தின் தேவையாகவுள்ளது.