Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேள்விக்கிடமின்றி 21 மசோதாக்களை நிறைவேற்றிய மோடி அரசு!

மழைக்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே பெகாசஸ் உளவு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது, பல ஐய்ரோப்பிய நாடுகள் இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ள போதிலும் இந்தியாவில் 40 பேர் வரை உளவு பார்க்கப்பட்டும் அது பற்றி வாயே திறக்காமல் அமைதி காக்கிறது மோடி அரசு. எதிர்க்கட்சிகளோ பாராளுமன்றத்தை முடக்கி போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒரு பொருட்டாக கருதாத மத்திய அரசு சகட்டு மேனிக்கு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.

மூன்று வாரங்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் முடக்கி வரும் நிலையிலும், மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை 21 மசோதாக்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. விவாதம் இன்றி, மக்களவையில் 12 மசோதாக்கள் மற்றும் மாநிலங்களவையில் 9 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற்றுள்ளது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதில் பல மசோதாக்கள் இந்திய தொழிலாளர், விவசாய வர்க்கங்களை கடுமையாக பாதிக்கக்கூடியவை.தங்களுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதாக்களை விவாதத்திற்கு வைக்காமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி வருகிறது.

இன்னும் ஒரு மசோதாவை திங்கட்கிழமை அறிமுகம் செய்ய இருக்கிறது மோடி அரசு அது இன்ஷூரன்ஸ் தொடர்பான மசோதா. இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கான மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இந்த மசோதா நிறைவேற இருக்கிறது.

Exit mobile version