தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வழங்க அரசாங்கம் இந்தியாவிற்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் ஏற்கனவே உறுதிமொழி அளித்துவிட்டது. ஆனால் அதனை நிறைவேற்றாது ஒட்டுமொத்த உலகத்தையும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக டில்வின் சில்வா தொடர்ந்தும் உரையாற்றுகையில்: யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணபப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கடந்த தேர்தல்களிலும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி வந்தது. அது மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடமும் உறுதி மொழிகளை அளித்தது.
ஆனால் தற்போது கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு விடயத்தில் இழுபறி நிலையை ஏற்படுத்தி அனைவரையும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தினால் சிங்கள மக்களுக்கே ஒன்றும் கிடைக்காத போது தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டமோ ஜனநாயகமோ கிடைக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது.ஏனென்றால் தற்போதைய அரசு ஒரு போதும் நல்லாட்சியை விரும்புவதில்லை. உறுதி மொழிகளையும் நிறைவேற்றப்போவதில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் ஸ்தீரத் தன்மைக்காக அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கே சென்று தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வு போன்றவற்றை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை மீண்டும் அடிமைகளாக்கவே கூட்டமைப்பினரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுக் காலமாக உள்நாட்டு பயங்கரவாத யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருந்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் என்று நம்பிய போதிலும் அதிலும் ஏமாற்ற மடைந்துள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வாழ வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் தமது உரிமைகளுக்காக போரட வேண்டும் என்றார்.