கூடங்குளம்: போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் 20 பேர் நேற்று முதல் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக கடற்கரை கிராம மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது, அணு மின் நிலையத்தை சுற்றி 30 கிலோ மீட்டருக்குள் உள்ள கிராம மக்களுக்கு பேரிடர் பயிற்சி அளிப்பது, அணு கழிவு குறித்து மக்களுக்கு விளக்குவது, அணு மின் நிலையத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்தோ தாமிரபரணி ஆற்றிலிருந்தோ தண்ணீர் எடுக்கக் கூடாது, கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையேயான ஒப்பந்தத்தை விளக்குவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி போராட்டத்தை தொடங்க நேற்று காலை கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்கரை கிராம மக்களிடம் போராட்டக்குழுவினர் கருத்து கேட்டனர். பின்னர் போராட்டக்குழுவைச் சேர்ந்த 20 பேர் மதியம் 1 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக இடிந்தகரை, கூட்டப்புளி, கூத்தக்குளி, தோமையார்புரம், பெருமணல், உவரி உள்ளிட்ட 10 கடலோர கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இதனால் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில்,
6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் தினத்திலிருந்து கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 20 பேர் காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை விரிவுபடுத்த உள்ளோம். வரும் 4ம் தேதி முதல் 500 பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றார்.