கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 5ம் தேதி மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையிலும், இடிந்தகரையில் தனது தலைமையிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ .
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
பேரழிவை ஏற்படுத்தக் கூடியதான கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற தொலை நோக்கோடு நடத்தப்பட்டு வருகின்ற அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மிகவும் நியாயமான, தேவையான போராட்டம் ஆகும்.
1988-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தரும், சோவியத் அதிபர் மிகாயில் கோர்பச்சேவை வருகை குறித்து வரவேற்புத் தந்த அறிக்கையில் இந்தியாவும், கோவியத் ரஷ்யாவும் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை பற்றி பொதுவாகக் குறிப்பிட்டார். அதில் இந்தியாவில் அணு மின்நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்தம் போடப்படுகின்றது என்று பொத்தாம்பொதுவாக குறிப்பிட்டார்.
அதை எதிர்த்து நான் மாநிலங்களவையில் பிரதமரிடம் விளக்கம் கேட்டபோது, கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடாது என்று சுற்றுச்சூழல் வல்லுநர்களும், அப்பகுதி வாழ் மீனவ சமுதாய மக்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஒரு சதவீத விபத்துக்கு வாய்ப்பு இருந்தாலும், எங்கள் தென்தமிழகத்தின் தலைமுறைகளும் அழிந்து போகும் என்பதால் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடாது என்றேன். அதற்கு பதில் அளித்த பிரதமர் ராஜீவ்காந்தி, அணுமின் நிலையத்தை விட, அனல்மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் அதிகம் என்று, அதன் அடிப்படையைக் கூடத் தெரிந்து கொள்ளாத அறியாமையை வெளிப்படுத்தினார்.
முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் படுகொலை, சிங்களரால் தமிழக மீனவர்கள் நாளும் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை, மூன்று நிரபராதி தமிழர்களின் உயிர் முடிக்க திட்டமிடும் நடவடிக்கை என அனைத்து பிரச்சினைகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் மன்னிக்க முடியாத துரோகங்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறா விட்டால் அதனால் கேடு ஏற்படும் என்று அணுசக்தி கமிஷன் தலைவர், மக்களிடம் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்த மிரட்டிப் பார்க்கின்றார். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களும், தமிழக மக்கள் நலனைக் காக்க விரும்புவோரும், அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பான போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
பழ.நெடுமாறன் மதுரையில் மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து நவம்பர் 5-ந்தேதி தென் மாவட்டங்களின் தலைநகரங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்தார்.
பழ. நெடுமாறன் மதுரையில் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். அதே நாளில் (நவம்பர் 5-ந்தேதி) அன்று காலை 9 மணி முதல் இடிந்தகரையில் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து, என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்.
போராட்டக்குழு தலைவர் உதயகுமார் முன்னிலை ஏற்பார். நெல்லை புறநகர் மாவட்டம், நெல்லை மாநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. தோழர்கள், இந்த உண்ணாநிலை அறப்போரில் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
இப் போராட்டம் தமிழகத்தினதும் “தமினத்தினதும்” பிரச்சனை என்பதற்கும் அப்பால் மனித குலத்தினதும், ஒடுக்கப்படும் மக்களதும் பிரச்சனை என்பதை வை.கோ, நெடுமாறன் உணராவிடின் போராட்டம் இனவாத எல்லைக்குள் சீரழிந்துவிடும்.