Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகத்தில் அரும்பும் மாற்று – வடம் – ஒரு நோக்கு : சை.கிங்ஸ்லி கோமஸ்

2005 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை எல்பிரட் ஜெலினிக் என்னும் ஆஸ்திரிய நாட்டு துணிச்சலான பெண்ணிய எழுத்தாளரும் பெண்ணியல் சிந்தனைகளை வெறுமனே அரசியலில் இருந்து வேறுபடுத்தி தனித்துத் திரியாமல் தனது அரசியல் கருத்துக்களோடு இணைத்து இலக்கியம் படைத்தவராவார். இவர் விருதுகளைத் தேடி போனவர் அல்ல விருது அவரைத் தேடி வந்தது.

அண்மைக்கால படைப்புகளை நோக்குமிடத்து எழுத்தாளர்கள் பலர் பிரதேச தமிழ் சாகித்திய விழாவிலே விருது பெறுவதற்காக மாத்திரமே நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.

மற்றும் சிலர் இலக்கியத்தினை வியாபாரமாக்கி அதனூடாக பல லட்ச ரூபாய்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் தமிழ் நாட்டு அரசியல் தலைமைகளை கவர்வதற்காகவும் அவர்களிடமிருந்து பணத்தையோ அல்லது கல்விக்கான புலமைப்பரிசில்களைப் பெற்று இலங்கையில் வாழும் சில பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்துடனும் இலக்கியம் படைத்து வருகின்றனர்.

மற்றும் சிலர் பேராசிரியர்களின் இதயங்களில் இடம் பிடித்து தங்களின் பட்டப் படிப்புக்களையும் பட்டப் பின் படிப்புக்களையும் இலகுவாக சித்திப் பெறுவதற்கான வழிவகையாகவும் இலக்கியத்தினை படைத்து வருகின்றனர்.இவற்றிலே மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில் ஆட்சியில்; இருக்கும் அரசாங்கத்தினை திருப்தி படுத்துவதற்கான இலக்கியங்களாகவும் ஒரு சில அரசியல் தலைமைகளை கவர்வதற்காகவும் இலக்கியம் படைத்து வருகின்றனர்.

இத்தகைய இலக்கிய படைப்பாக்கங்களுடன் ஒப்பிடும் போது மனிதன் முகங் கொடுக்கும் அன்றாட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக படைக்கப்படும் இலக்கியங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் போய்விடுகின்றது.சங்க இலக்கியங்களிலும் அரசரைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் மாத்திரமே பொன்னும் பொருளும் பெற்றனர் இன்றும் இலக்கியத்தினை தங்கள் பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் ஒரு சிலர்.  அவர்கள் சார்பானவர்களும் அந்த அந்த கால கட்டங்களிள் குறிப்பிட்ட இலக்கிய வியாபாரிகள் எந்த அரசியல் தலைமைக்கு சார்பாக இருக்கின்றாரோ அவர் சார்பானவர்ளை இலக்கிய வாதிகளாக அடையாளம் காட்டுவதுடன் விருதுகளுக்காகவும் பரிந்துரைசெய்கின்றனர்.

எந்த வித சுய லாபங்களையும் கருதாது, தங்களின் சொந்த உழைப்பிலும் சொந்த செலவிலும் மலையகத்தின் சப்ரகமுவ மாகாணத்தின் காவத்தை பிரதேசத்தின்சமூக விடுதலையினை நோக்காக கொண்ட இளைஞாகள் மலையகத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து காத்திரமான கவிதைகளை படைத்து வரும் கவிஞர்களை இணைத்துக் கொண்டு குயில் தோப்பு கலை இலக்கிய வட்டத்தினை உருவாக்கி அதனூடாக வடம் என்னும் சஞ்சிகையினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சஞ்சிகை கவிதைகளுக்காகவும் கவிஞர்கள் தொடர்பாகவும் கவிதை விமர்சனங்களையும் தாங்கி வெளி வருகின்றது. மலையகத்தை சேர்ந்த போராட்ட குணம்கொண்ட கவிதை படைக்கும் கவிஞர்களின் எழுத்துக்கள் இவ்வாறு படைக்கப்படுகின்றன.

2006 ஜீலை செப்டம்பர் வடம் சஞ்சிகையிலே இராகலை மோகன் எழுதிய சிலை என்னும் கவிதை ‘சிவராசண்ணனின் வெட்டுண்ட மேனிக்கு பின்னால்-சிலைகள் காரணமாயுள்ளதை –சிலர் தான் அறிவார்’; என்று கோவில் சிலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தினை சாடி எழுதியிருக்கும் கவிதை மனிதன் சமயங்களின் பெயரால் பிரிந்து வாழ கூடாது என்பதனை எடுத்தியம்புகிறது.

மூத்த கவிஞன் எலியாசன் கூடிக் களிப்பதற்கு – குறை நம்மில் இல்லையடா-நாடோ திருடருக்கு-நாம் நடுவில் என் செய்வோம்? ஏன்று 2007 ஜீலை செப்டம்பர் வடம் சஞ்சிகையிலே கேட்டிருக்கின்றார். மலையகத்தின் அடையாளப்படுத்தக் கூடிய கவிஞராக காணப்பட்ட கவிஞர் சு.முரளிதரனுடனான செவ்வியினை வடம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில்; ஒருவரான முற்போக்கு கவிஞர் பத்தனையுர் தினகரன் நேர்கண்டு பிரசுரித்திருந்தது. 2006 ஜீலை செப்டம்பர் வடம் சஞசிகையிலே; இளம் கவிஞர்களுக்கு அனுபவமாகவும் எடுத்துகாட்டாகவும் காணப்படுகின்றது.

மு.காசிம் எழுதிய வாழ்க்கை என்னும் கவிதை இது நதி பிறந்த நந்தவனம் எமக்கு அடி பணிந்த வாழ்க்கை என்று சிறுபான்மையினரின் வேதனையினை எடுத்தியம்புவதாக காணப்படுகின்றது.

வடம் சஞ்சிகைக்கான வாசகர் கடிதங்களிலே மூத்த எழுத்தாளர் மொழிவரதன் கவிதைகளுக்கு களம் அமைக்கும் வடம் தொடர்ந்தும் வெளி வரல் வேண்டும். தரமான புதிய கவிதைகள்தடம் பதிக்க வாழ்த்துகிறேன் என்றும் மலையகத்தில் வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. மாணவர் மத்தியில் மாத்திரம் அல்ல ஆசிரியர்களையும் வாசிக்க வைக்க வடம் தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று எழுத்தாளர் அந்தனி ஜீவாவும் மலையக இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது எங்கள் கடமையாகும் என்று அ.யேசுராசாவும் தங்களின் பதிவுகளை வடம் சஞ்சிகைக்குள் பதித்திருந்தனர்

வடம் அமிழ்த்தப்பட்டவர்க்காக உழைக்கும் என்னும் மனித நேய வாசகங்களுடன் ஆசிரியர் குழுவின் முகவுரையினை வாசிக்கும் போது இந்த சஞ்சிகையின் தேவையினை அனைவரும் உணரக்கூடியதாக இருக்கின்றது. 2006 ஜீலை செப்டம்பர் வடம் சஞ்சிகையிலே; உழைக்கும் மக்களிடையே வர்க்க உணர்வையுட்டுவதற்கும் சிந்திக்க தூண்டுவதற்கும், வெகு ஜனங்களுக்கான ஊடகங்கள் கடுமையாக உழைக்கவேண்டியுருக்கிறது.

இந்த நிலையில் தான் எதிரே விஸ்வரூபம் எடுக்கும் ஏகாதிபத்திய பல்தேசிய கம்பனிகளின் சக்தி மிக்க செய்தி சாதனங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்றும், இங்கு ஊடகம் என்பது அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமல்ல கலை கலாச்சார நிகழ்வுகள் நாடகங்கள் பட்டி மன்றங்கள் வீதி நாடகங்கள் போன்ற கள ஆற்றுகைகளும் மக்களிடம் கருத்து பகிர்வதற்கான ஊடகங்களே.

இவ்வாறான முயற்சிகளின் போது அறியாமையில் உழழும் உழைக்கும் மக்களுக்காக கறைபடியா கரங்களுடன் சேவையாற்றுபவர்களுக்கு சேற்றை அள்ளி வீசுவது சமூகவிரோத வேடதாரிகளின் பிரதான பணியாகிவிடுகிறது என்றும் 2007 ஜீலை செப்டம்பர் வடம் சஞசிகையிலே மலையக பாடசாலைகள் வெறும் தொழிற் களங்களா? ஏன்னும் தலைப்பிலும் எழுதப்பட்டிருக்கின்றது. பா.மகேந்திரன்,இரா.நெல்சன், வே.தினகரன் ஆகியோரை ஆசிரியர் குழுவாக கொண்டு இன்னும் பலரின் கூட்டு உழைப்பால் வெளிவரும் வடம் சஞ்சிகையில் கவிஞர் முருகையன்,கவிஞர் சிவசேகரம் போன்ற புகழ்மிக்க மக்கள் கவிஞர்களின் கவிதைகளுடன் பல மொழிபெயர்ப்பு கவிதைகளையும் கவிதை வரலாற்றில் சில தடயங்கள்,கவிஞனின் கேள்வி பதில்கள் என கவியுலகின் முழு ஆளுமையினையும் தாங்கி வரும் வடம் சஞ்சிகையினை வாழ வைக்க கவிதையை நேசிப்பவர்கள் தோள் கொடுக்க வேண்டும் என்பதுடன் கட்டாயம் வாசிக்க வேண்டிய சஞ்சிகையாக வடம் காணப்படுகின்றது.

சை.கிங்ஸ்லி கோமஸ் – மலையகம் – இலங்கை

Exit mobile version