ஆண்டு தோறும் ஜனவரி 26-ஆம் நாளை குடியரசு தினவிழாவாக கொண்டாடுகிறது இந்திய ஒன்றிய அரசு. இந்த விழாவில் அனைத்து மாநிலங்கள் சார்பிலும் அலங்கார வாகனங்கள் பங்குபெறும். அந்தந்த மாநிலங்களில் கலாச்சார, பண்பாட்டு, தியாகிகளை நினைவுகூறும் விதமாக இந்த வாகங்கள் அலங்கறிக்கப்பட்டிருக்கும்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் அலங்கார வாகனங்களில் இந்துக் கோவில்கள், ராமர்கோவில், ராமர், சீதை, அனுமார் போன்ற இந்துக்கள் வழிபடும் தெய்வங்களின் சிற்பங்கள் இடம்பெறும். பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து மதச்சார்பற்ற கலாச்சார பண்பாட்டு பெருமிதங்களை பறைசாற்றும் வகையிலேயே இருக்கும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிடர், தமிழர் கலாச்சார நினைவுகளையே தமிழ்நாடு அரசு அலங்கார வாகனத்தில் வைக்கும். இந்த முறை தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்தது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்ட வீரர்களின் உருவகங்கள் அடங்கிய தமிழ்நாட்டின் ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதே போன்று கேரள மாநில அலங்கார ஊர்திகளையும் மோடி அரசு நிராகரித்திருந்தது. தமிழ்நாடு, கேரளம் என்றாலே வட இந்தியர்களுக்கு குறிப்பாக பாஜகவினருக்கு வெறுப்பு இருப்பதன் வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு என கண்டனம் தெரிவித்து பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள்.