Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கின் படுகொலைகள் : கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்-இரா. துரைரெத்தினம் .

02.09.2008.

கிழக்கில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கிழக்கு மாகாணசபை ஆளும் தரப்பினரது கைகளுக்கு சென்ற பின் இனப்படுகொலைகளும், சகோதரப் படுகொலைகளும் அதிகரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுக்கொண்டே வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களில் படுகொலைகள் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இரண்டு தசாப்தங்களாக அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றனர். சகல அதிகாரங்களும் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் முதலமைச்சர் ஆயுத வன்முறைகளை நிறுத்தி அப்பாவிப் பொது மக்கள் கொலை செய்யப்படுவதை தடுத்துநிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை தொடர்பாக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

அண்மைக் காலத்தில் கிழக்கில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது. தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பினரது கைகளுக்குச் சென்ற பின் அரச படைகளுக்கெதிரான கொலைகள் குறைந்துள்ளது. இனப்படுகொலையும், சகோதரப்படு கொலையும், பயங்கரவாதிகளுக்கெதிரான படுகொலைகளும் அதிகரித்துள்ளன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின் சகல அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் ஆயுத வன்முறையாளர்களால் இந்தப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனூடாக, வழிதவறிப் போனவர்களை திருத்துவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து சகோதரப்படுகொலைகளை நிறுத்துவதற்கு சகல இயக்கத் தலைமைகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து தமிழர்கள் பலவீனம் அடைவதை தடுத்துநிறுத்துவதோடு எதிர்காலத்தில் சகல ஜனநாயக சக்திகளும் செயற்படுவதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

இக் கோரக் கொலைகளுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதனூடாக எதிர்காலத்தில் இப்படுகொலைகள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version