இந்து மதம் போலல்லாது கிறிஸ்தவம் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியிருப்பதற்கு காரணமாக, நாம் இந்து மதத்துடன் கிறிஸ்தவத்தை ஒப்பிட்டு இந்து மதம் மனிதர்களை வர்ண மற்றும் சாதி ரீதியாக பிரித்து வைத்துள்ளது; அதனால் இந்து மதத்தை பிற மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் கிறிஸ்தவம் அப்படியில்லை; அது மனிதர்களை பேதப்படுத்தி பார்க்கவில்லை; கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்கிறது. எனவே உலகு தழுவிய மதமாக உருவெடுத்துள்ளது என்று கூறுகிறோம். இந்து மதம் பற்றிய நமது அவதானிப்பு பிழையில்லை. ஆனால் கிறிஸ்தவம் பற்றிய நமது பார்வை முழுமையில்லை என சொல்லலாம். கிறிஸ்தவம் உலக மதமாக உருவெடுக்க மிக முக்கியமாக இருந்தது வழிபாட்டில் சடங்குகளை ஒழித்தது என்கிறார் ஏங்கல்ஸ். பண்டைய ஐரோப்பிய மதங்கள் மனிதன் செய்யும் பாவங்களுக்கு கடவுள் அடையும் கோபத்தை தணிக்க பலியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தன. விலங்குகள், குழந்தைகளை கொல்லும் வழக்கம் அதிகமாக இருந்தது. இயேசு தனது சிலுவையேற்றம் மூலமாக அழுத்தமாக வெளிப்படுத்திய செய்தி என்னவென்றால் தனது கொலையின் மூலம் மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களிலிருந்து மீட்கப்படுகின்றனர். எனவே இனி மேல் எந்த காரணத்துக்காகவும், எதிர் காலத்திலும் கூட பலியிடுவது தேவையற்றது என்பதே அது.அன்றைய ஜெர்மன் பகுத்தறிவாளர் குழுக்கள் பைபிளை ஒட்டுமொத்தமாக கட்டுக்கதை அல்லது முன்பு நடந்தவற்றின் சரியான ஆதாரமாக கொள்ள முடியாது என்று நிராகரித்த போது மார்க்சியத்தின் மூலவர்களில் ஒருவரான ஏங்கல்சின் பார்வைகள் மிக வித்தியாசமாக உள்ளன. ‘நீங்கள் பைபிளின் எந்த பகுதியை வேண்டுமானாலும் கட்டுக்கதை என்று கூறுங்கள்; ஆனால் வெளிப்படுத்துதல் முதலாம் யோவானை அவ்வாறு சொல்ல முடியாது’ என்கிறார். முதலாம் யோவான் மக்களை பலியிடுவதிலிருந்து விலகியிருக்க நினைவுபடுத்துகிறது. முதலாம் யோவான் கி.பி. 69-இல் இதனை எழுதியிருப்பதாக ஏங்கல்ஸ் கூறுகிறார். அதே போன்று கிறிஸ்தவத்தில் அதற்கு முன்பிருந்த குணப்படுத்துதல், ரகசிய வித்தைகள் போன்றவை வரலாற்றின் இந்த காலக்கட்ட கிறிஸ்தவத்தில் இருக்கவில்லை. ஏங்கல்ஸ் கூறும் இன்னொரு விசயம் மிக சுவாரஸ்யமானது. நவீன சமூகத்தில் ஒரு தொழிலாளர் வர்க்கக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சி) கட்டுவதை போன்ற சிரமத்தை ஆதி கிறிஸ்தவம் அனுபவித்தது என்கிறார். உலகப் பொது நிலைமைகள் இரண்டு இயக்கங்களுக்கும் எதிராக இருந்துள்ளன என்கிறார். அரசின் வேட்டையாடல், ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருப்பதால் நிந்திப்பது ஆகியவை. இரண்டாவது, போலி மற்றும் கற்பனாவாத கம்யூனிசப் பார்வையிலிருந்து எப்படி ஒரு கம்யூனிஸ்ட் கட்சி விடுபட வேண்டிய இருந்ததோ அதே போன்று கள்ள தீர்க்கதரிசிகள், போலி மறைஞானிகள் ஆகியவர்களின் பிடியிலிருந்து கிறிஸ்தவம் விடுபட வேண்டிய தேவையை அது சாதித்தது என்கிறார். தொழிலாளர் இயக்கத்தில் புருதோன், பகுனின் போன்றவர்கள் கிறிஸ்தவத்தில் பெரிக்கிரன்ஸ் மற்றும் பலாக் போன்றவர்கள் என்கிறார். இயேசு இறைதூதர் இல்லை. மோசசை விடவும் சிறப்பான இடம் முதலில் அவருக்கு இருக்கவில்லை. கம்யூனிசமும் இறைதூதரால் ஆரம்பிக்கப்பட்டதல்ல என்கிறார். ஆதி கிறிஸ்தவத்தில் கொள்கை கோட்பாடுகள் உருவாகி இருக்கவில்லை. உலகப் பிராகாரமான நடைமுறைக்கு எதிரான ஒரு தீவிரமான போராட்டம்; அதில் வெற்றி பெற வேண்டும் என்பதே இருந்தது. அது கம்யூனிஸ்ட்களின் போராட்ட வாழ்க்கைக்கு நிகரானது என்கிறார், ஏங்கல்ஸ்.