தொழிலாளர்கள் போராட்டத்தின் போது நடந்த குண்டுவீச்சுக்களாலும் ஏனைய நடவடிக்கைகளாலும் மத்திய ஏதென்ஸ் நகரம் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. மார்பின் வங்கியின் உள்ளேயிருந்து இருவரின் எரிந்த உடல் கைப்பற்றப்பட்டது.
யூரோ நாணயத்தில் இணைந்து கொள்வதற்காகவும், வங்கிகளுக்குப் பணம் வழங்குவதற்காகவும், உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக பெரும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கிய பணத்தொகை காரணமாகவும் கிரேக்கம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது.
இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளும் முகமாக அரச சேவை ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கவும், ஓய்வூதியத்தைக் குறைக்கவும், பாவனையாளர் வரியை அதிகரிக்கவும் கிரேக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. கிரேக்கத்தில் பெரும் பணம் படைத்தோர் செலுத்தும் வரி மிகக் குறைவானதாக உள்ள நிலையில் தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்கும் அரச திட்டத்திற்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவருகின்றன.
சில ஐரோப்பிய ஊடகங்கள் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு எதிரான கிரேக்கத் தொழிலாளர்களின் எதிர்ப்பு இது என வர்ணித்தன. பொருளாதாரம் ஆசியாவை நோக்கி நகர்ந்து செல்ல உருவான புதிய உலக ஒழுங்கை நிலை நாட்ட அமரிக்க ஐரோப்பிய நாடுகள் முனைந்து வருகின்றன.
கிரேக்கப் பிரதம ஜோர்ஜ் பப்பன்ரூ தனது அரச திட்டங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கைவிட முடியாது என தெரிவிக்கிறார். இதே வேளை தொழிற்சங்கங்களும் இடது சாரிக் கட்சிகளும் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டதாகக் கருதுகின்றனர்.
கிரேக்கத்தின் பின்னனதாக போத்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இதே நிலை தோன்றலாம் எனவும், யூரோவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நெக்ஸ்ட் நிறுவனத்தின் பிரதம நிர்வாகி சைமன் வூல்வ்சன் கருத்துத் தெரிவிக்கையில் கடன் தொகை அளவை முன்வைத்து அடுத்ததாகச் சரிந்து விழும் அபாயம் பிரித்தானியாவிற்கே உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
கிரேக்கத்தில் சந்தைப் பொருளாதாரமும் மூலதனமும் அரசைவிடப் பலம் வாய்ந்திருப்பதாக பிரித்தானிய சனல் 4 செய்தி ஆய்வாளர் தெரிவித்தார். மலிவான கூலியை நோக்கி ஆசிய நாடுகளை நோக்கி நகரும் பெரும் கோப்ரேட் நிறுவனங்கள் ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் செலவினங்களுக்கு ஒப்ப எந்த சமூக உதவிகளையும் வழங்குவதில்லை. அந்த நாடுகளைல் இதே போன்ற போராட்டங்கள் உருவாகுமானால் அவற்றை மூர்க்கத்தனமாக அடக்கும் வகையில் இந்தியா சீன போன்ற நாடுகளின் அரசுகளை உருவாக்கி வருகின்றன. இலங்கை இனப்படுகொலை போன்ற மேலும் பல படுகொலைகள் இவ்வாறான போராட்டங்களுக்கு எதிராக ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்படலாம் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறை நிலைக்க முடியாத சூழல் உருவாகிவிட்டதாகவும் கார்ல் மார்க்ஸின் மூலதனம் குறித்த ஆய்வு சரியானது என்றும் மிக முக்கியமான பொருளியலாளர்கள் அமரிக்க ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி உருவான காலப்பகுதியில் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய பதிவுகள் :
பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்
புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து