இந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்தது.அதன் பின்னர் மீண்டும் காஷ்மீரில் வன்முறைகள் தலைதூக்கத் துவங்கின.பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுப்பதோடு அப்பாவி இந்துக்கள் மீதும் சமீப காலமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
வட இந்திய தொழிலாளர்கள் பலரும் காஷ்மீரில் கொல்லப்படுகிறார்கள். பதிலுக்கு மத்திய அரசோ பயங்கரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் மனித உரிமைகளை மீறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காஷ்மீரின் ஹட்ரபோரா பகுதியில் நேற்று ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் இரண்டு திவீரவாதிகளும் காஷ்மீர் மருத்துவர் ஒருவரும் வீட்டு உரிமையாளரும் கொல்லப்பட்டனர். இதில் மருத்துவரும் வீட்டு உரிமையாளரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மெகபூபா முப்தி கூறுகையில்,
“ ஹைடர்போரா என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வீட்டு உரிமையாளர் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டதாகவும், இளம் மருத்துவரும் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது பொதுமக்களை நீங்கள் (பாதுகாப்பு படை) குறிவைப்பது வேதனை அளிப்பதாக உள்ளது” என்றார்.