Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீரில் அமைதிக்கு உள்ளூர் போலீசை வலுப்படுத்த வேண்டுமாம் -மன்மோகன் வேண்டுகோள்.

காஷ்மீரில் அமைதி திரும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த மாநில நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: ஜம்முகாஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அனைவருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது. கலவரத்தில் மகன், மகளை இழந்து வாடும் ஒவ்வொரு தாய், தந்தை மற்றும் குடும்பங்களின் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்குச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் இப்போது கல்வி கற்கவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், மாநிலத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பதை பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படை சிறப்புச் சட்ட விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சட்டம், ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்க மாநில போலீஸôருக்கு இப்போதைக்கு போதிய ஆள்பலம் இல்லை. முதலாவதாக மாநில போலீஸ் படையை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான், அவர்களால் தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்பட முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினரும், மாநில போலீஸôரும் மிகப் பெரிய சவால்களை சந்தித்துள்ளனர். அவர்களில் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது வேதனையானது. இனிமேலும் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காஷ்மீர் இளைஞர்களுக்கு தனியார், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்க பொருளாதார நிபுணர் சி. ரங்கராஜன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இளைஞர் அணிகள் மூலமாக மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக வரம்புகளுக்கு உள்பட்டு எல்லா பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. அதற்கு மாநிலத்தில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும். அதற்கான வாய்ப்பை காஷ்மீர் மக்கள் உருவாக்கித் தரவேண்டும் என்றார். பிரதமரின் பேச்சு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, . சிதம்பரம், .கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத் மற்றும் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகள் சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமி, சுயேச்சை எம்எல்ஏ குலாம் ஹசன் மிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதா பிரதிநிதிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன.

Exit mobile version