காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளரை, மத்திய குழு சந்தித்து பேசி வருகிறது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் டி.வி.சிங் உட்பட மூன்று பேர் கொண்ட குழு, தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், மேட்டூர் அணையை பார்வையிட மத்திய குழுவினர் முடிவு செய்துள்ளனர். அணையை நேரில் பார்வையிடும் மத்திய குழுவினர், அணையின் இருப்பு, திறந்துவிடப்படும் நீரின் அளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்திற்கு நாள்தோறும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஆணைய தலைவரான பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டு இருந்தார்.
இதனை மறுபரிசீலனை செய்யும்படி கர்நாடக அரசு விடுத்த வேண்டுகோளினை ஏற்க இயலாது என மத்திய மந்திரி பவன் குமார் பன்சால் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மத்திய நீர்வள துறை செயலாளர் டி.வி. சிங் தலைமையிலான குழு இன்று தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து நிலைமையை ஆய்வு செய்கிறது.
இந்த ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.