ஜூன் மாதம் காவிரிப்பாசனத்திற்காக திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடாத காரணத்தால் காவிரி கடமடை எங்கும் விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் நஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் விவாசாயிகள். தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை பெறாததாலும், மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு உரிய நேரத்தில் நீர் திறக்கப்படாததாலும் காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் ஏக்கரிலிருந்து குறைந்தபட்சம் 5 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு உறுதியாகிவிட்டது. இந்த ஆண்டு இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பீடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் திறந்து விடப்பட வேண்டிய நீர் திறந்துவிடப்படாததை அடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. நீர் பற்றாக்குறையினால் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறுவைச் சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு இடைக்கால நிவாரணம் போல் பணப்புழக்கத்தை தொன்று தொட்டு தந்து வந்தது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடுவதற்கும் அவ்வப்போது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களை சரிகட்டுவதற்கும் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி கைகொடுத்து வந்துள்ளது. இப்போது இந்த சாகுபடிகளும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரை தர வேண்டும் என 1991-ம் ஆண்டு காவிரி நீர் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பின்னர் 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் ஆண்டுதோறும் கர்நாடக அரசு 205 டிஎம்சி நீரை தர வேண்டும் என இறுதித் தீர்ப்பை வழங்கியது. 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரை மேற்கண்ட நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 அரசுகளுமே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து அது இன்று வரை நிலுவையில் உள்ளது. தமிழகத்துக்கு தேவையான, நியாயமான பங்கான நீரை பெறுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டாமல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நடப்பு ஆண்டில் மின் வெட்டு, வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம், நீர் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை ஆகியவற்றால் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தின் நலன் கருதி முதல்வர் கருணாநிதி காவிரி நீரை பெற்று மேட்டூர் அணையை பாசனத்துக்கு திறந்துவிட வேண்டும் என்கிறார் தமிழக உழவர் முன்னணியைச் சேர்ந்த மா.கோ.தேவராசன்.