Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ் – இன்று (26.06.11) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில்… : புதிய திசைகள்

சாட்சியின்றிச் சிதைக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் விளை பலன்களாக வன்முறைக் கலாச்சாரமும், மனோ வக்கிரமும் மட்டுமன்றி, பிழைப்பு வாதிகளும், அரசியல் வியாபாரிகளும் கூடத்தான் மனிதத்தை மிரட்டுகின்றனர். அறுபது நீண்ட வருடங்களின் ஒடுக்கு முறையும் முப்பது வருடம் தவறான வழிகளூடாக முடிவுற்ற போராட்டமும் சமூகத்தின் ஒரு பெரும் பகுதியை வக்கிரத்தனமான அறிவுசார் சிந்தனையற்றதாக மாற்றியிருக்கின்றது.

வெறும் உணர்ச்சி அரசியல் ஒரு புறத்திலும், அதனை மூலதனமாக்கும் தேசிய வியாபாரிகள் மறுபுறத்திலும் இவற்றையெல்லாம் தனது ஒடுக்குமுறைக்குச் சார்பாக மாற்றியமைக்கும் இலங்கை அரச பாசிசமும் ஒன்றை மற்றொன்று வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

இது வரைக்கும் புலிகள் முன்வைத்த அரசியல், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதமானது என்ற சிந்தனை நச்சு வேராகப் படர்ந்து சமூகத்தின் ஒரு பகுதியை இருளுக்குள் புதைத்து வைத்திருக்கிறது.

ஆணவத்தோடு நடத்தப்பட்ட போராட்டம் மனித அவலமாக முள்ளிவாய்க்கால் மூலையில் முடிவடைந்த பின்பும் கூட தவறுகளுக்கான காரணத்தைத் தேட வேண்டாம் என்று வன்முறைக் கலாச்சாரத்தின் அழிவு சக்திகள் தெரு முனையில் வைத்து ஒரு தேசியவாதியைத் தாக்கியிருக்கிறார்கள். புலிக் கொடி குறித்த விவாதம் ஒன்றி தீபம் தொலைக் காட்சியில் கருத்துக் கூறியதற்காக சஞ்சீவராஜ் என்ற தேசிய வாதி தாக்கப்பட்டதன் பின்னர் அதனை நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாகப் பெருமிதம் அடைந்தார்களோ இல்லையோ இலங்கை அரச பாசிசமும் அதன் கூறுகளும் உற்சாகமடைந்துவிட்டன.

இலங்கை அரசோடு அதாவது அப்பவி மக்களின் பிணங்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவிக்கொண்ட கொலைகாரர்களோடு, மக்களின் அழுகுரல்களை அரசியலாக்கிக் கொள்ளும் சமூக விரோதிகளோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று குறைந்தபட்சக் குற்ற உணர்வுமின்றித் தம்மை இனம்காட்டிக்கொள்ளும் பலர் சஞ்சீவராஜின் மீதான இத் தாக்குதலைப் பயன்படுத்தி தமது அரசியல் வியாபாரத்தை நடத்த முயல்கின்றனர்.

தேசம் நெட் என்ற இணைய வலைத் தளத்தில் கொன்ஸ்டன்டைன் என்ற இலங்கை அரச ஆதரவாளர் இப்படி எழுதுகிறார்: “விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், வி சிவலிங்கம், என் கங்காதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர்…”

இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் பாதிப்பிற்கு உள்ளான சஞ்ஜீவராஜ் தனக்கு இந்தக் கருத்தோடு கிஞ்சித்தும் உடன்பாடு கிடையாது என்றும், இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது எமது விடுதலைக்கான முன்நிபனதனை என்றும். இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாட்டிற்குச் செல்வது என்பது மக்கள் விரோத அரசியல் என்றும் எமக்குத் தெரிவித்தார்.

இங்கே சஞ்சீவ்ராஜின் மீது தாக்குதல் நடத்திய புலி அமைப்புக்களில் செயற்படும், அவற்றின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட ராம் சஞ்சீவராஜ் என்பவரை தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பிளவுபடுத்த அந்தப் பிரிவினையை இலங்கை அரச ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆக, இரு பகுதியினரும் தேசிய விடுதலைக்கு எதிராகவும் மகிந்த ராஜபச்க அரசிற்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர்.

இதன் உச்சபட்ச நிலையாக இன்று  26.06.2011 அன்று இலங்கை அரச ஆதரவுப் போக்குடையோர் சஞ்சீவராஜை ஆதரித்து வன்னியன் பூட் என்ற பலசரக்குக் கடையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதாகவும் தீர்மானித்துள்ளனர்.

இது குறித்துப் சஞ்சீவராஜிடம் கேட்ட போது, அந்தப் போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார். ஆக, நாளைய போராட்டத்தின் உள்நோக்கு சஞ்சீவராஜிற்கு நீதி கிடைப்பதோ அன்றி வன்முறைக் கலாச்சாரத்தை எதிர்பதோ என்பதற்கு அப்பால் இலங்கை அரசின் புலம் பெயர் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே கருதமுடியும்.

புலிகள் இதுவரை முன்வைத்த ஜனநாயக மறுப்புச் சிந்தனை முறைமையும் அரச பாசிசமும் மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கவும், ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் பயன்படுத்தப் படுகின்றன என்பது மட்டுமன்றி, அவை சமூகத்தின் முன்னோக்கிய நகர்வை தடை செய்கின்றன. இவை குறித்து தேசிய இன ஒடுக்குமுறையால் தொலைந்து போய் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களும் ஈழத்தின் பேரின வாத அவலங்கள் மத்தியில் வாழ்வோரும் விழிப்பாயிருக்க வேண்டுகிறோம்.

புலிகள் முன்வைத்த இன வாதமும், இலங்கை அரசின் பேரினவாதமும் ஒன்றை ஒன்று ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்து அழிவுகளை அறுவடை செய்து கொள்கின்றன என்ற இலகுவான உண்மையை புலம்பெயர் அமைப்புக்கள் புரிந்துகொள்வதும், வன்முறைக் கலாச்சரத்தை நிறுத்தும் அனைத்து நடவடிக்கைகளில் ஆரம்பித்து புதிய அரசியல் வழிமுறைகள் குறித்து ஆராய்வதும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியிலுள்ள உடனடிக் கடமையாகும்.

ஊடகங்களுக்கான அறிக்கை – புதிய திசைகள் – 26.06.11

Exit mobile version