விடுதலைப் புலிகளின் போராட்டத்தைப் பற்றிய விரிவான விமர்சனங்கள் தேவையானவை. ஆனால் அவை எந்த நிலைப்பாட்டிலிருந்தும் என்ன கண்ணோட்டத்திலிருந்தும் முன் வைக்கப்படுகின்றன என்பது கவனத்திற்குரியது. அடிப்படையான தவறுகள் சுட்டிக் காட்டப்பட்ட போது அவற்றைப் புறக்கணித்தும் நிராகரித்தும் பேசியவர்கள் இப்போது புதிய வேடங்கள் பூண்டு நாடகமாடுகிறார்கள். அவற்றைப் போலவே தங்களது தனிப்பட்ட அல்லது இயக்கங்கள் சார்ந்த பகைமையை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளைத் திட்டித் தீர்த்தவர்கள் இன்றைய சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள். இத்தனைக்கும் நடுவே, மூன்று லட்சம் தமிழர் முள்ளுக் கம்பி வேலிகளாற் சூழப்பட்டுள்ளனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரிற் சிறைகட்குக் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக் கணக்கானோர் போகப், பெருந் தொகையான இளைஞர்கள் பற்றிய தகவல்கள் இல்லை என்று சொல்லப் படுகிறது.
இடம் பெயர்க்கப்பட்ட இம் மக்களின் அவலத்தைப் போக்கும் நடவடிக்கைகள் பற்றி இங்கே நல்ல அரசியற் சக்திகளும் உண்மையான மனிதாபிமானிகளும் சமூக அக்கறையுடையோரும் சிந்தித்துச் செயற்பட முயற்சிகளை எடுக்கும் அதே வேளை, அதே அவலத்தைக் காட்டி இலங்கைத் தமிழர்களையும் முடிந்தால் முழு நாட்டையும் அந்நிய ஆதிக்கவாதிகளிடம் விற்கிற முயற்சிகள் மும்முரமாகியுள்ளன.
தமிழ்த் தலைவர்களாகப் பலவேறு கட்சிகளதும் இயக்கங்களதும் பேரிற் தங்களை முக்கியப்படுத்திக் கொண்டவர்கள் எவருமே தமிழ் மக்களை நம்பியவர்களல்ல. மக்கள் அரசியல் என்பதும் மக்கள் போராட்டம் என்பதும் அவர்களுக்கு விளங்காதவை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்றைய அவல நிலையை எட்டியதற்கான காரணங்களுள், ஆயுதங்களை முதன்மைப் படுத்தியமையை விட முக்கியமானது, மக்களைப் போராட்டத்தின் அதி முக்கிய பகுதியாகக் கருதத் தவறியதாகும். அதிலிருந்தே பலவேறு தவறுகள் உருவாயின. மக்களுடைய பங்குபற்றலும், கருத்துக்களும் உரிய இடத்தைப் பெற்றிருந்தால் இன்றைய கையறு நிலைக்கும் இத்தனை உயிரிழப்புக்களுக்கும் இடமிருந்திராது.
தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக விருத்தி கண்ட நிலையிலிருந்தே அந்நிய அரசுகளின் செல்வாக்கிற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டது. இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் பல வகைகளிலும் போராட்டத்தின் நெறிப்படுத்தலுடன் தொடர்புபட்டிருந்துள்ளன. இஸ்ரேல் ஒரே வேளையில் விடுதலைப் புலிகட்கும் இலங்கை அரசாங்கப் படைகட்கும் இராணுவப் பயிற்சி வழங்கியது பற்றிப் பல ஆண்டுகள் முன்னரே உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
மேற் குறிப்பிட்ட விதமான போக்கிற்குப் புலம்பெயர்ந்த தமிழரிடையே படித்து உயர்பதவி வகிக்கிறவர்களிடையிலும் செல்வந்தவர்களிடையிலும் உள்ள முக்கியஸ்தர்கள் சிலர் முக்கியமான பங்களித்துள்ளனர். வடக்கிற்கான போரின் இறுதி மாதங்களில் அமெரிக்காவினதும் மேலை நாடுகளதும் குறுக்கீட்டின் மூலம் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் இறுதி நேரத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை உறுப்பினர்கள் சிலரையேனுங் காப்பாற்றலாம் என்றும் நம்பிக்கை ஊட்டியவர்கள் அவர்களிடையே தான் இருந்தனர்.
அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் இன்னமும் மேற்குலகின் குறுக்கீட்டின் மூலம் தமிழீழத்தைப் பெறலாம் என்ற கனவை மீளுற்பத்தி செய்வதில் அவர்கள் மிகவுந் தீவிரமாகச் செயற்படுகிறார்கள். வேல்ஸிலிருந்து வீரகேசரியில் தொடர்ந்து எழுதுகிறவரான அருஷ் என்பவர் யூன் மாதத்தில் எழுதிய கட்டுரை புலம்பெயர்ந்த தமிழரிடையே உள்ள விடுதலைப் புலி ஆதரவுப் பிரமுகர்கள் மத்தியில் மேற்குலகு பற்றிய எத்தகைய மூர்க்கத்தனமான எதிர்பார்ப்பு உள்ளது என்று காட்டுகிறது. பிற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நடுவே மேற்குலகு பற்றியும் ஐ.நா.சபை பற்றியும் இந்திய தமிழக அரசியற் கட்சிகள் பற்றியுமான மயக்கங்கள் வேகமாகக் கலைந்து வருகிற வேளையில் உலகத் தமிழர்கள் அனைவரையும் அமெரிக்காவுக்குப் பின்னால் அணி திரளுமாறு மேற்குறிப்பிட்ட விதமான பிரமுகர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
வசதிபடைத்த புலம்பெயர்ந்த தமிழரிடையே விடுதலைப் புலிகள் பற்றிய நிலைப்பாட்டில் எப்போதுமே வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. எனினும் அவர்களிற் பெரும்பாலானோர் மேலை நாட்டு அரசாங்கங்கள் பற்றி நம்பிக்கை உடையோராகவே இருந்தனர். விடுதலைப் புலிகளை அந்த நாட்டு அரசாங்கங்கள் தடை செய்ததை விரும்பாதோரும் தமிழ் மக்களை அழிவினின்று காப்பாற்ற மேலை அரசாங்கங்கள் முன்வரும் என்றே நம்பினார்கள். விடுதலைப் புலிகளை நிராகரித்தவர்களிடமும் அவ்வாறான நம்பிக்கையே இருந்து வந்தது.
விடுதலைப் புலிகள் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் என்ற நிலைப்பாடு இலங்கையிலே தமிழரிடையே இருந்ததை விட அதிகமாகப் புலம்பெயர்ந்த சூழலில் வலுவாக இருந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தரகர்களாகத் தம்மை அடையாளங்காட்டிக் கொண்டு சிலரால் மேலைநாட்டு அரசியல்வாதிகளுடன் உறவுகளைப் பேணியும் பேரம் பேசியும் தம்மை விருத்தி செய்து கொள்ள முடிந்தது. இத்தகைய பிரமுகர்களிடையே இடதுசாரி எதிர்ப்பு வலுவாக இருந்ததுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனங்களை நியாயப்படுத்துகிற போக்கும் மிகுதியாக இருந்து வந்தது. விடுதலைப் புலிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் அறவே தயக்கங் காட்டியதற்குப் புலம்பெயர்ந்த மேட்டுக்குடி ஆதரவாளர்களது செல்வாக்கு ஒரு முக்கியமான காரணமெனலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளையே முற்று முழுதாக உள்ளடக்கிய போராளிப் படையைக் கொண்ட ஒரு அமைப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பில் தயக்கங் காட்டவும் நேர்மையான தமிழ் இடதுசாரிகளை நிராகரிக்கவும் காரணம் என்ன என்பது மேலும் விசாரிக்க வேண்டிய விடயமாகும். இவ் வேளை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு விடுதலைப் புலி இயக்கப் பிரமுகர் சில ஆண்டுகள் முன்பு ஐரோப்பாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது திருகோணமலையை அமெரிக்கர்கட்குக் குத்தகைக்குக் கொடுக்கலாம் என்று வெளிவெளியாகச் சொல்லியிருந்தமையை இங்கு குறிப்பிடுவது தகும்.
எனினும், இவர்களது எந்த விதமான செல்வாக்கும் விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்க, ஐரோப்பியத் தடைகளை நீக்க உதவவில்லை என்பது எல்லாரும் அறிந்த விடயமே. இப்போது இலங்கை அரசாங்கம் மேற்குலகின் நெருக்குவாரங்களைக் கையாள்வதிற் காட்டிவரும் மூர்க்கத்தனமான போக்கு மேற்கில் ஓரளவு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில் இவர்கள் மேற்குலகின் உதவியுடன் இலங்கையிற் தமிழர் தனிநாடு பெறலாம் அல்லது சுயாட்சி பெறலாம் என்று கனவுக் கோட்டைகளைக் கட்டத் தொடங்கியுள்ளனர். இது இலங்கையிலுள்ள தமிழரிடம் எடுபடாது. எனினும் மனம் நொந்துள்ள நிலையில் எதுவுஞ் செய்ய வழியறியாது தவிக்கும் புலம்பெயர்ந்த தமிழரின் பெரும்பாலானோரிடையே நிதி திரட்டவும் அவர்களது ஆதரவுடன் தம்மை முக்கியப்படுத்திக் கொள்ளவும் இந்த மேட்டுக்குடி அரசியற் தரகர்கள் கடுமையாக முயல்வார்கள். எனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இன்னொரு புறம் பலவேறு காரணங்கட்காக இந்திய மேலாதிக்கவாதிகளுடன் தம்மை நெருக்கமாக்கிக் கொண்டவர்களும் இந்தியாவை பகைத்ததாலேயே விடுதலைப் போராட்டம் பின்னிடைவுகளைச் சந்தித்தது என்று நினைப்பவர்களும் புலம்பெயர்ந்தோரிடையே உள்ளனர். இவர்கள் மத்தியிலிருந்து இந்தியாவைத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லாவிடினும் ஒரு குறைந்தபட்சத் தீர்விற்கு ஆதரவாகவேனுந் திருப்பலாம் என்கிற நப்பாசை உள்ளது.
இந்தியாவின் அண்மைக்கால நடத்தையும் தமிழக அரசியற் தலைமைகளின் நம்பகமின்மையும் அவர்களது முயற்சிக்கு உதவப் போவதில்லை. எனினும் தமிழ் மக்களின் தேசிய இன உரிமைக்கான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஒரு பங்கை உருவாக்குவதற்கான முயற்சிகளை நாம் எதிர்பார்க்கலாம். இவ்வாறான முயற்சிகள் சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் இங்கும் ஏற்கெனவே தொடங்கி விட்டன.
இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் நாளேடுகளின் நடத்தை மிகவும் பொறுப்பற்றதாகவும் ஏமாற்றமளிப்பதாகவுமே உள்ளது. குறிப்பாக, முன்பக்கச் செய்தித் தலைப்புக்களும் செய்திகளின் தெரிவும் தலையங்கங்களும் பிற ஊடகங்களிலிருந்து பெறப்பட்டுப் பிரசுரமாகுங் கட்டுரைகளும் எவையெல்லாம் வெகுவிரைவிலேயே நிராசையாகக் கூடிய எதிர்பார்ப்புக்களோ அவற்றை மேலும் ஊக்குவிப்பனவாகவே உள்ளன.
கொலனிய எசமானர்களின் நீதி தவறாத நடத்தை பற்றிய நம்பிக்கைகளிலும் மேலை முதலாளியத்தின் சனநாயக நீதியின் மீதான நம்பிக்கையிலும் இந்தியாவின் அறஞ்சார்ந்த அயற்கொள்கை மீதான நம்பிக்கையிலும் ஒரு நூற்றாண்டுக் காலம் பயனின்றிக் கழிந்து விட்டது. பொய்த்துப் போன நம்பிக்கைகளை நிராகரிப்பதற்குரிய காலங் கடந்த பின்பும் அதே நம்பிக்கைகளை வெவ்வேறு வடிவங்களில் வளர்த்து வருகிற தலைமைகளும் பிரமுகர்களும் பிரபலங்களும் ஊடக எசமானர்களும் தெரியாமற் தவறு செய்யவில்லை. தெரிந்து கொண்டே தமிழ் மக்களை அவர்களது நீண்ட கால நட்புச் சக்திகளிடமிருந்து பிரித்து ஒரு அந்நிய வல்லரசிற்கோ இன்னொரு அந்நிய வல்லரசிற்கோ நிரந்தர அடிமைகளாக்க முயலுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள், பிரச்சினைக்குரிய மக்கள் இங்குள்ளனர். அவர்கள் மீது மேட்டுக் குடிகள் தங்களது சுயநலத்தின் அடிப்படையிலான தீர்வுகளைத் திணிக்காமற் தடுப்பதற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உதவ வேண்டும். அவர்களின் பேரால் ஒரு சிறு கும்பல் மேலைநாடுகளில் தமிழ் மக்களின் விடுதலைக்கும் உரிமைக்குமான போராட்டங்களை இதுவரை காட்டிக் கொடுத்தது போதும். இனியும் அது தொடரவிடப்படக் கூடாது.