கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் இருப்பதாக காட்டுப்பகுதிக்கு சென்று மாவோயிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு நடத்திய தூதர்கள் தெரிவித்தனர். சட்டீஸ்கரில் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய தமிழரான அலெக்ஸ் பால் மேனன் கடந்த 21ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவோயிஸ்ட் தூதர்களுக்கும் சட்டீஸ்கர் அரசுக்கும் இடையே 2 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை விவரங்களை மாவோயிஸ்ட் தலைவர்களிடம் தெரிவிப்பதற்காக அவர்களது தூதர்களான சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்றுமுன்தினம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். ராய்பூரில் இருந்து சிந்தன்லார் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்ற அவர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் டெட்மெட்லா காட்டுப்பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு, மாவோயிஸ்ட் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தூதர்கள் நேற்று காலை சிந்தன்லாருக்கு திரும்பினர்.
ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் புறப்பட முடியாததால் அவர்கள் உடனடியாக ராய்பூர் திரும்ப முடியவில்லை. நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்கள்,”கலெக்டர் அலெக்சை நாங்கள் சந்திக்கவில்லை. ஆனால், அவர் பத்திரமாகவும், நலமுடனும் இருப்பதாக மாவோயிஸ்ட் தலைவர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று நம்புகிறோம். மாவோயிஸ்ட் தலைவர்கள் எங்களிடம் கூறியதை அரசிடம் தெரிவிப்போம்” என்றனர்.