எப்போதும் ஆசிரியர்கள் நாம் சரியாகக் கற்பிக்கின்றோம், மாணவர்கள்தான் புரிந்து கொள்கின்றனர் இல்லை, ஆர்வம் இல்லை, அவர்களுக்கு நேரமில்லை, அதற்குரிய சூழல் இங்கில்லை, பாடசாலைப் படிப்புகள் அதிகமாக இருக்கின்றன என்ற காரணங்களைத் தேடிக்கண்டுபிடித்து எம்மை நாமே சமாதானப்படுத்தி வைத்திருக்கின்றோமே தவிர, ஆசிரியராக எம்மை நாம்; சுயவிமர்சனம் செய்துகொண்டதில்லை. ஒரு ஆசிரியராக நான் செய்த தவறுகளை சுயவிமர்சனம் செய்வதுடன், இந்த கட்டுரை உங்களுக்கும் பயன் தரும் என்றே நம்புகின்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு இணையத்தளங்களிற் கண்ட சில மாணவியரின் கலை வெளிப்பாட்டினை, திறனை, அவர்களுடைய நேர்த்தியை கண்டபின்; எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
புலம் பெயர் தேசங்களில் பலர் கலைகளை கற்றுக் கொண்டாலும், பரீட்ச்சைகளில் சித்தி பெற்று தமக்கென பல பட்டங்களைப் பெற்றுக்கொண்டாலும் அவர்களில் ஒருவருடைய கலைவெளிப்பாடிற்கூட கலைநுணுக்கங்களையோ, ஆர்வத்தினையோ காணமுடிவதில்லை. பரீட்சை முடிந்து தேர்ச்சி பெற்றவுடன் அவர்களுடைய கலையார்வத்திற்கு என்னவாகிறது? ஓடி ஓடி மூச்சுமுட்டி படித்து சித்திபெற்று இவர்கள் கண்டது என்ன? பல நூறு மாணவர்களும் கலைஞராகிவிடுவர் என்ற எதிர்பார்ப்பில்லை என்றாலும் ஒருவர் கூடவா இல்லாமற் போகின்றனர்? கலையை கற்பித்தல் எனும் போது கலையை ஒரு பாடப் பொருளாக்கிக் கற்பிக்கின்றோம். கலையைக் கற்பித்தலென்பது வெறுமனே அதன் இலக்கண விதிகளையும், அமைப்புகளையும் கற்பித்தலன்று, சமூகத்திற்கும் கலைஞர்களுக்கும் மத்தியில் ஏற்படக்கூடய தொடர்பாடல் மொழியை கற்றுக்கொடுத்தலும், இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் கற்பித்தலுமாகும். நாம் கலை இலக்கண விதிகளாலான கலையின் அமைப்பைக் கற்றுக்கொண்டு, கலையின் உள்ளிருந்து இயங்கும் இனத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் மாறுபட்ட கலாச்சாரங்களுடன் இணைந்து எம்மை அடையாளப்படுத்தல் என்பதே வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும் கற்பித்தல் முறையெனலாம்.
சில வருடங்கள் முன்புவரை எனது மாணவர்களும் இப்படித்தான் தேர்வை நோக்கியே தமது கலைப் படிப்பினை மேற்கொண்டு வந்தனர். அனைவருமே மிகச்
சிறந்த மதிப்பெண்களுடன் சித்தியெய்தினர். சிலர் அரங்கேற்றங்களை ஆர்வத்துடன் செய்து முடித்தனர். அவை முடிந்த கையுடன் அவர்களுள் பெரும்பான்மையினர் காணமற் போயினர். அதுவரை ஆர்வத்துடன் தமது குழந்தைகளை இழுத்து வந்து கற்பித்தலை மேற்கொண்ட பெற்றோர்களும் தமது கடமை முடிந்தது என்றும் பிள்ளைகள் கலையிற் புலமை பெற்றுவிட்டனர் என்ற மனத்திருப்தியுடனும் சென்றுவிடுகின்றனர். இந்த நிலைக்கு எமது கலை வாழ்க்கை தள்ளப்படுவதன் காரணம் என்ன, யார், என்ற கேள்விக்குக் கற்பித்தலை மேற்க்கொள்ளும் குருவே முதற்காரணி என்பேன் நான்.
குழந்தைகள் ஒரு கலையை கற்க வரும்போது ஆர்வத்தின் பெயரில், ஒரு தேடுதலில் தான் தன் குருவை நோக்கிச் வருகின்றனர். தம் குழந்தைகைள் ஒரு காலத்திற் இக்கலையினால் பயன் பெறுவர் என்பதைத் தாண்டி தம் குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்கள் சிந்திப்பதில்லை. யாரும் ஒரு அரங்கேற்றத்தை மனதிற் கொண்டோ பரீட்சைகளை நினைத்துக்கொண்டோ வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்களைச் சரியான வழியிற் கொண்டு வழிநடத்திச் செல்வது என்பது கற்பித்தல் தொழிலைக் கொண்ட ஆசிரியர்களிடமே உள்ளது.
ஒரு கலைஞன் தன் துறையில் வெற்றி காண்பவனாயிருக்கிறான் என்றால் அவன் கற்ற கலையின் அத்திவாரம் சரியாக, நேர்த்தியாகப் போடப்பட்டிருக்கின்றது என்பதே முதல் படியாகும். திடமான அத்திவாரம் என்பதே மாணவர்களிடத்தில் தன்நம்பிக்கையையும் அதைத் தொடர்ந்த கலையின்பத்தையும் கொடுக்கும் என்பதை நாம் அறிதல் முக்கியம். அதை எத்தனை ஆசிரியர்கள் சரிவரக் கற்றுகொடுத்திருக்கின்றோம்? அரங்கேற்றம் கண்டு பரீட்சைகளில் சித்தி கண்டு பட்டங்களைக் காவிக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூட அவர்கள் கற்ற முதல் அடியைக் கேட்டால் சரிவரத் தெரியாத நிலையே புலம் பெயர் தேசங்களிற் காணக்கூடியதாக இருக்கிறது. அதற்கான காரணம் ஒவ்வொரு ஆண்டும் பரீட்சையில் சித்தியடைவதற்கான பாடங்களைக் கற்று முதல் வருடத்திற் கற்றவைகளை கைவிடுவதுதான் என்று சொன்னால் இங்கு வாழும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் முரண்பாடின்றி தலையசைப்பாரகள். சின்ன வட்டத்திற்குள் தாமே தம் கலைகளை இரசித்து இதுதான் கலையென்ற முடிவுடனும், தேடலின்மையுடனும், இதுவே உச்சம் என்று இருக்கும் புலம் பெயர்வாழ் கலைஞர்கள் ஒரு தேர்ந்த கலைஞராக வெற்றி பெற்று வெளிவரமுடியாதவர்களாகவே இருக்கின்றனர். பரீட்சைகளில் சித்தியெத்துவதற்காகவே ஓடிஓடி தம்கலைவாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இது இப்படியே தொடரும் பட்சத்தில் நாம் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைப் போல அல்ல சிறு கற்குவியல் அளவுகூட உயரமுடியாதென்ற எனது கருத்து தற்போது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.
இதில் இருந்து சிறு மாற்றமாவது வேண்டும் என எண்ணி சில வருடங்களுக்குமுன் வரை இருந்த பரீட்சைமுறைக் கலைக்கல்வியை நான் முதலில் உறுதியுடன் கைவிட்டபோது பல திசைகளில் இருந்து அதிருப்தியான பேச்சுகளையும், கேள்விகளையும்;, கேலிகளையும்;, புறக்கணிப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. எப்போதும் புதியமுயற்சியின் போதும் மாற்றங்களின் போதும் இத்தகைய பேச்சுக்கள், புறக்கணிப்புகளை சந்திக்க நாம் தயாராக இருத்தல் வேண்டும். கடந்த ஆண்டுகளாக பரீட்சையின் மோகத்தில் இருந்த என் வகுப்பறைக்கு அதற்குப் பதிலாக கற்பித்தல் முறையில் திறமைவாய்ந்த நடன ஆசிரியை மட்டுமல்ல தன்னிடமுள்ள அத்தனை மாணவர்களையும் மிகச்சிறந்த கலைஞராக உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியை ஒருவரை அழைத்து, அவர் மூலம் எனது மாணவர்களுக்குக் கற்பித்து பார்த்த பின்புதான் இத்தனை வருடங்களாக என் கற்ப்பித்தல் முறையில் இருந்த தவறுகள் பலவும் புரியத்தொடங்கியது.
இந்தப் பட்டறை மூலம் நான் முதலில் தெரிந்துகொண்ட விடயம், ஒரு கலையைக் கற்க மாணவர்களுக்கு இருக்கும் பொறுமையைவிட நூறு மடங்கு பொறுமை ஆசிரியருக்கு அமைந்திருக்க வேண்டும் என்பதுதான். தனது மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கும் முதற் பாடம் நேர்த்தியாகும் வரை இரண்டாவது படிக்கு நாம் தாவக்கூடாது. நூறு தரம் ஆயிரம் தரம் அல்ல அதற்கு மேலும் அவன் பழகும் முதற் பாடத்தை மீண்டும் மீண்டும் சகிப்புத்தன்மையோடு பார்க்கும், திருத்தும் பொறுமை எமக்கு வருமானால் அதுவே ஒரு ஆசிரியனுக்கு இருக்கக்கூடிய முதல் குரு லட்சணமாகும். இத்தனை நாளாக இதைத்தானா கற்றுக்கொண்டிருப்பது என்று பொறுமைவிட்டுப் போன பெற்றோர்க்கும், குழந்தையின் பொறுமை எல்லைகடந்து விடாத அளவில் சுவாரிசியத்துடனும் நாம் கலையில் போடப்பட வேண்டிய அத்திவாரத்தைப்பற்றிய விபரத்தை அவர்கள் அறிந்து கொள்ளும் படி பேசிப் புரியவைக்குமளவு பொறுமையும், சாமர்த்தியமும் நமக்கு வேண்டும். இந்த அத்திவாரமென்பது ஒரு வருடமோ, இரண்டு வருடமோ அல்லது மூன்று வருடங்களோ தன்னும் ஆகலாம் என்பதை நாம் ஆரம்பிக்கும் குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் அறிவிக்கலாம். இருந்தும் தான் கற்கும் கலையில் ஆர்வமில்லாத குழந்தைகளை இனம்கண்டு, அவர்களுடைய ஆர்வம் வேறு எங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அந்த குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தல் நல்ல வழிநடத்தல் ஆகும்.
இப்படியான கற்பித்தல் முறையைக் கடைபிடித்தால் யாரும் கலையைக்கற்க நம்மிடம் வரமாட்டார்கள், வேறு குருவைத் தேடிப்போய்விடுவர் என்ற பயம் இருக்கும்வரை நாம் சிறந்த கற்பித்தலை தரும் குருவாக திகழமுடியாது. புலம் பெயர் தேசங்களில் கலைகளைக் கற்கவரும் மாணவர்களின் தொகையைப் போலவே, கலையைக் கற்று, அதன் பின் ஆசிரியர்களாகி கற்றுக்கொடுப்பவர்களின் தொகையும் பெருகி வருகிறதே தவிர தரமான கலைஞர்களின் எண்ணிக்கை கூடிவிடவில்லை. ஏன்? ஒரு கலைஞனாக இருக்கும் மனத்திருப்தியை இந்த சமூகம் கொடுக்கவில்லைiயா? கலைஞனாக இருக்கக்கூடியவனுக்குக் கிடைக்கக்கூடிய யாவும் மறந்த இன்பஉணரவில் யாருக்கும் விருப்பில்லையா? அல்லது ஆசிரியர்களாகிய நாம் அந்த உணர்வை ஒரு பொழுது கூட ஒரு மாணவனிடம் ஏற்படுத்தவில்லையா?
கற்றபித்தல் என்பது ஒரு கலை. அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கையேடோ விதிமுறையோ இந்த உலகில் யாரிடமும் இல்லை. கற்பித்தல் தனிப்பட்ட ஒவ்வொருவருடைய செய்நேர்த்தி. ஆரம்பத்தில் ஏதோ ஒரு வகையில் தன் கற்பித்தல்முறையைக் கொண்டிருந்தாலும் அனுபவ முதிர்வால் ஆசிரியர்கள் தமக்கென தரமான அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.
ஒரு கலைஞனாக ஒருவன் அரங்கத்தில் மக்கள் முன் நிற்கிறான் என்றால் அது பெருமைக்குரிய விடயம். இப்போதெல்லாம் ஒரு மருத்துவனாகவோ, ஒரு வக்கீலாகவோ, பொறியியலானகவோ வருவதென்றால் பணம் கொடுத்துக்கூடப் படித்து முடித்துவிடலாம். ஆனால் எத்தனை பணம் கொடுத்தும் ஒரு நல்ல கலைஞனாக முடியாது. கலையை ஒருவன் இன்னொருவனிடம் இருந்து கற்றுக்கொள்ளும் போது அக்கலையின் மாணவனாக இருந்தாலும், தனது தேடுதல் மூலமும் படைப்பாற்றல் மூலமும்தான் ஒரு முழுமையான கலைஞனாகின்றான். அவன் தனக்குள்ளிருந்து தானே சுயம்புவாய் பிறப்பெடுக்கின்றான். தான் கற்பிக்கும் கலையில் ஆத்மார்த்தமான தேடுதலோ, படைப்பாற்றலோ அல்லாத குருவினால் தேடுதற்கலையை தன் மாணவனிடம் உருவாக்க முடியாது. ஒரு ஆசிரியரின் கடமை தான் கற்றதை அப்படியே கற்பிப்பதல்ல, மணவர்களுள் இருக்கும் திறமையை, சிந்தனையை வெளிக்கொணர்வதுதான். ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான கருத்தாடல் வெளி உருவாகின்ற போதுதான் உண்மையான கலைதிறனும் அதனூடு நம்பிக்கையும் வெளிப்படும். குருபக்தியைப் போதிக்குமளவு நாம் எமது கலைகளிற் தன்நம்பிக்கையை விதைப்பதில்லை. தன்நம்பிக்கையும் வெற்றியும் கண்ட ஒரு மாணவனிடத்தில் சுயேட்சையாக ஏற்படும் குருபக்தியை பெறும் ஒரு ஆசிரியராக இருப்பதே கற்பித்தற் தொழிலுக்குக் கிடைக்கும் பெரும் வெற்றி. தன்நம்பிக்கையையும், படைப்பாற்றலையும், தேடலையும் ஒரு மாணவனிடத்தில் உருவாக்குவதில் வெற்றி கண்டவர்களே முழமைபெற்ற குருவாகமுடியும்.
இன்றைய உலகமயச் சூழலில் பிரபஞ்பமெங்கும் பரந்து நாம் வாழ்வதும், மொழி, கலை, கலாச்சார நிகழ்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதும் காணக்கூடியாதாக இருக்கின்றது. ஒரு இனம் அழியாமற் காப்பதில் மொழி மற்றும் கலை முக்கிய பங்குவகிக்கின்றன. மொழியையும், கலையையும் வெறுமனே கற்றுக்கொள்ளல் மூலம் நாம் எம் அடையாளங்களை வெகுதொலைவிற்கு எடுத்து செல்ல முடியாது. நம் கலையையும் மொழியையும் தொடர்பாடல் கருவியாக்கி அதனூடு தன்நம்பிக்கையை ஏற்படுத்தி மாணவனை கலையில் ஈடுபாடு உள்ளவனாக்குவதே ஒரு ஆசிரியரின் வெற்றியாகும்.
சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.