Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கறுப்பர் கூட்டம் தோழர்கள் கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை விடுதலை!

கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது  கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று  சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்  பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும் மன்னிப்புக் கேட்கவில்லை.

கறுப்பர் கூட்டம் தோழர்களுக்கு எதிரான குண்டர் சட்டம் செல்லாததாகி இருப்பதில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் — முதலாவது, அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்போ அல்லது வருத்தமோ கூட கேட்கவில்லை என்பது. அடுத்தது அவர்கள் வைத்த வாதம் எந்த வகையிலும் விடுதலை பெறுவதற்காக தமது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதாக இல்லை. பேசியவற்றுக்கு பொறுப்பேற்று மக்களின் அறியாமையை அகற்றுதலும், மூடநம்பிக்கை ஒழிப்புமே தமது நோக்கம் என்பதைத் தான் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்துத்துவ கும்பல் வழங்க வாய்ப்புள்ள நீதிமன்ற அழுத்தம் பற்றி நாம் அறிய முடியாது என்றாலும் அவர்கள் வழங்கிய புறநிலை அழுத்தங்களை யாரும் மறுக்க முடியாது. இது நேரடி அழுத்தங்களும் வழங்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்குரிய சுட்டுதலாக இருக்கிறது. ஆனால் அதையும் மீறி நீதிமன்றத் தீர்ப்பு கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக வந்திருப்பது ஆச்சரியமானது. அது தமிழகத்தின் அன்றாட அரசியல் விவாதத்தில் நமது பொது அறிவுத்துறையினர் செலுத்தும் செல்வாக்குடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

மனநல மருத்துவர் ஷாலினி மற்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் ஆகியோர் முருகன் பிரச்சினையில் முழு ஈடுபாட்டை காட்டினர். இருவருமே கறுப்பர் கூட்டத்தின் நிலைப்பாட்டை முழுவதுமாக ஏற்றவர்களில்லை. ஆனால் அவர்கள் கருத்துக்கள் இந்த பிரச்சினையை சமநிலை குன்றாமல் ஒருவர் புரிந்து கொள்ள உதவிகரமாக இருப்பவை என்று கூற முடியும். அதே நேரம் அவர்கள் ஏன் ஓரடி தூர நின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பொதுப் பிரச்சினைகளில் கருத்துத் தெரிவிப்பதில் அறிவுத்துறை நாணயம் உறுதிப்படுவதை மேலும் உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகள் வேண்டும்.

பாசிசத்தை எதிர்த்து நிற்கும் அனுபவங்களை நாம் தொகுத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

Exit mobile version