Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கர்ணன்: சிறந்த படம், தவறான அரசியல்- கனகராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜின் Mari Selvaraj கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நல்ல கதை, நல்ல களம், தேர்ந்த நடிப்பு, அழகியல், குறியீடுகள், இசை, சிறப்பான ஒலிக்கோர்ப்பு என பாராட்டத்தக்க பல அம்சங்கள் இந்தப் படத்தில் நிரம்பியுள்ளன. பொருளாதார அடிப்படையிலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒடுக்கப்பட்ட சமூக நிலையில் இருந்து, திமிறி எழுகிற படைப்பாளிகள், பொருளாதார அடிப்படையிலும் வெற்றி பெற வேண்டியது மிக அவசியம். எனவே, இப்படத்தின் வெற்றி மகிழ்ச்சி தருகிறது.


கர்ணன் திரைப்படம் ‘பொடியன்குளம்’ என்ற கிராமத்தில் நடக்கிற கதையாக அமைந்திருக்கிறது. உண்மையாகவே தமிழகத்தில் கொடியன்குளம் என்ற கிராமத்தில் 1995ம் ஆண்டில் நடைபெற்ற கொடூர வன்முறையோடு சில சம்பவங்கள் ஒத்துப் போனாலும், இந்தக் கதை அந்த ஒரு சம்பவத்தை மட்டும் விவரிக்கக் கூடியது அல்ல. தலித் மக்களுக்கு எதிராக காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒடுக்குமுறைகளை இந்தக் கதை காட்டுகிறது.


ஏற்கனவே இப்படத்தை மையமாக வைத்து இரண்டு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முதலாவது, கதை நடைபெற்றதாக சொல்லும் காலம் பற்றியது. இரண்டாவது விவாதம், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தைப் போல் அல்லாமல், இந்த படம் நேர்மாறாக இக்கதை வன்முறையாக திருப்பி அடிப்பது பற்றியது.
தலித் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் பல்வேறு வன்முறைகளின் ஒத்த தன்மையை உள்வாங்கி எடுக்கப்பட்டிருக்கும் ஒரு கதையை வரலாற்றுடன் ஒப்பிட்டு ‘அது யாருடைய ஆட்சிக் காலம்?’ என்று பார்ப்பது அவசியமற்ற சர்ச்சை. பல சமயங்களில் அரசாங்கங்களுடைய கொள்கை வேறாக இருந்தாலும், அரசின் கருவிகளான காவல்துறை, சிறை போன்றவை தமது தன்மையை மாற்றிக் கொண்டதில்லை என்பதே அனுபவம்.


காவல்துறையின் அராஜகங்கள் சாதி எல்லையோடு நின்றுவிடுவதும் இல்லை. சமீபத்தில் நடைபெற்ற, ஸ்டெர்லைட் படுகொலைகள், ஜெயராஜ் பெனிக்ஸ் இரட்டைக் கொலை வரையிலும் இக்கொடூரங்களின் வரலாறு நீண்டுள்ளது.
அவ்வாறே, இரண்டாவது விவாதமும் மேம்போக்கான ஒன்றுதான்.
கர்ணன் திரைப்படம் பேசக்கூடிய அரசியல் யாருக்கானது? பார்வையாளர்களிடம் என்ன விளைவை ஏற்படுத்தும்? அது சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த உதவுமா? என்பவதான் முக்கியமான கேள்விகள்.
பொடியன் குளம் என்ற கிராமம் ஒரே சாதியைச் சேர்ந்த மக்கள் வாழக் கூடிய ஒன்றாகும். அதன் அருகே மேலூர் அமைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொதுப் போக்குவரத்திற்கான தேவை இருக்கிறது. இவற்றை விளக்கும்போது இக்கதையில் சாதிய ஒடுக்குமுறையுடைய சில அம்சங்கள் இடம் பெறுகின்றன. ஆனால் கதையின் அடுத்த பகுதி முழுக்க முழுக்க காவல்துறை அதிகாரிக்கும் கிராம மக்களுக்கும் இடையிலான மோதலை விவரிப்பதாக மாறுகிறது. பின் அந்த மோதல் கர்ணனால் ‘வெற்றிகரமாக’ முடித்து வைக்கப்படுகிறது.


தேர்ந்த முறையில் வடிவமைத்து, அழகியலுடன், பொருளாதார வெற்றிக்கு ஏற்ற விதத்தில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதையில், விடுபட்டிருக்கும் சில அம்சங்கள்தான் அதன் அரசியல் குறித்த கேள்வியை எழுப்புகின்றன.
கர்ணன் திரைப்படம் முன்வைக்கும் அரசியல், ஒடுக்கப்படும் ஒரு அடையாளமாக வாழக்கூடிய மக்கள், தங்கள் விடுதலையை தாங்கள் மட்டுமே வென்றெடுத்துவிட முடியும் என்ற தவறான கருத்திற்கே உதவுகிறது.
அதாவது, சாதி அமைப்பிற்கும் அதன் மனிதத்தன்மையற்ற கொடூர சுரண்டலுக்கும் எதிரான வெகுமக்கள் ஒற்றுமையை பின் தள்ளிவிட்டு, ஒற்றை அடையாளத் திரட்டலை திணிக்கும் நவதாராளமய காலத்து, வியாபார நியாயத்தை மட்டுமே பேசுகிறது. இது அரசியல் வியாபார நோக்கத்திற்கு உதவலாம். விடுதலைக்கு உதவாது.


கர்ணன் திரைப்படம், உண்மை யதார்த்தங்களில் இருந்து தடம் புரண்டிருக்கும் சில இடங்கள்:
1) பொடியன் குளம் என்ற கிராமத்தை ஒரு தனித்த பகுதியாக காட்டியிருப்பதுடன், அந்த கிராம மக்களின் ஒற்றுமைக்கும் மேலான ஒன்றாக நாயக பிம்பத்தை கட்டமைத்திருப்பது.
2) சாதி அநீதிகளுக்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும் கேள்வி எழுப்பக் கூடிய பிற பகுதி மக்களின் பிரதிநிதிகளே இல்லாததாக சித்தரித்திருப்பது. (ஒடுக்கப்படும் சாதியில் பிறந்தவர்களை, சாதிக்கு எதிரான களத்தில் முன்னணிக்கு கொண்டுவந்த அனுபவங்கள் தமிழகத்தில் உண்டு. குறிப்பாக, கம்யூனிஸ்ட் இயக்கம் ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிரான மக்கள் ஒற்றுமையை கட்டமைத்துக் காட்டியுள்ளது. பல களப் பலிகளையும் கொடுத்துள்ளது)
3)சாதியை ஒரு பிரச்சனையாக சுட்டிக்காட்டிவிட்டு, அதன் அடித்தளமாக அமைந்திருக்கும் பொருளாதாரச் சுரண்டலை காட்டாமலே விட்டிருப்பது.

மேற்சொன்ன பிரதானமான தவறுகளின் காரணமாகவே இந்தப் படம் அடையாள அரசியலுக்கு வலுச்சேர்க்கும் ஒரு படமாக மாறிப்போயிருக்கிறது.
இளம் தோழர் அசோக், தோழர் இடுவாய் ரத்தினசாமி, தோழர் பள்ளிப்பாளையம் வேலுச்சாமி போன்றவர்களை சாதி ஆதிக்கத் திமிருக்கு எதிராக களப்பலி கொடுத்திருக்கிற, வாச்சாத்தி வன்கொடுமை உள்ளிட்டு காவல்துறையின் அராஜகங்களுக்கு எதிராக களத்தில் முன்நின்று தொடர்ந்து போராடுகிற இடதுசாரிகள் என்ற முறையில், இவ்வனுபவங்களில் பெற்ற பாடங்கள் எதுவும் இப்படத்தில் வெளிப்படவில்லையே என்ற கேள்வியை அக்கறையுடன் முன்வைக்கிறேன்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், சமூகம் அதன் இயல்பில் பதிவாகியிருந்தது. கர்ணன் திரைப்படத்தின் கதையிலும், அப்படியே சமூகம் அதன் இயல்பில் பதிவாகவில்லை.


நாயகனை கடைசியாக வெற்றி பெற வைக்கக் கூடிய பல படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். இன்னும் பல நாயகர்கள் நடித்திருக்கிறார்கள். அப்படியான படங்கள் கொண்டாடப்பட்டு இருக்கின்றன. ஆனால், அதுபோன்ற படங்கள் நடைமுறை உண்மைகளை மாற்றி அமைத்துவிடவில்லை. கர்ணன் திரைப்படமும் அதேபோல ‘நாயக பிம்பத்தில்’ கவனம் செலுத்தியிருக்கிறது. தீர்வை நோக்கிய தேடலில் அல்ல.

கடந்த காலங்களில் சாதிப் பெருமிதங்களை அப்பட்டமாக தூக்கிப்பிடிக்கிற படங்கள் வெளியாகி வசூலிலும் சக்கைப்போடு போட்டிருக்கின்றன. அதுபோன்ற படங்களுக்கு மத்தியில், கர்ணன் ஒரு எதிர் செயல்பாடு என்று சிலர் பார்க்கலாம். கர்ணன் திரைப்படத்திற்கும், அதன் படைப்பாளிக்கும் அது மட்டுமே நோக்கம் என்றால் நாம் இதற்கு மேல் உரையாட முயற்சிக்க வேண்டியதில்லை.
ஆனால், மாரி செல்வராஜ் போன்ற படைப்பாளர்கள் சினிமாவை, சமூக ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தின் ஒரு சிறு கருவியாக பயன்படுத்த முடியுமா என்று பார்க்கிறவர்கள். எனவே, கர்ணன் உருவாக்கியுள்ள விவாதத்தின் தொடர்ச்சியாக இந்த விமர்சனங்களை எடுத்து, எதிர்கால படைப்புகளை சரியான அரசியலுக்கு பங்களிக்கும் விதத்தில் தருவார் என நம்புகிறேன்.

Exit mobile version