Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கர்ணன் ஒரு பார்வை- ராஜசங்கீதன்

வாக்கு கேட்டதற்காக பட்டியல்சாதி இளைஞன் கொல்லப்படும் சூழலில்தான் வெளிவருகிறான் கர்ணன். கதைக்களமாக இருக்கும் 96-97 காலகட்டத்திலிருந்து இன்று வரை எதுவும் மாறிவிடவில்லை. பேருந்து செல்லாத ஊரும் அதிகாரம் பெற வாக்கு கேட்கமுடியாத ஊரும்தான் தமிழகத்தின் யதார்த்தமாக இருக்கிறது.கொடியங்குளத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக, வெளிப்படையாக பேசாமல் தொட்டுச் சென்ற பல முக்கியமான விஷயங்களும் பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன.நான் விரும்பும் ஓர் அரசியலை மாரி செல்வராஜ் படத்தில் முன் வைக்கிறார்.

சாதியம் என்பது சமூகப் பிரச்சினையாக இருக்கும் போதிலும் அதற்கான உயிர் வாயுவை கொடுத்துக் கொண்டிருப்பது அரசுதான். ஆதிக்க சாதியை முதல் படத்தில் உரையாட அழைத்த மாரி செல்வராஜ் இரண்டாம் படத்தில் சாதியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்திருக்கும் அரசு மீது பாய்ந்திருக்கிறார்.பேருந்து நிற்காத ஊரின் சிறுவன் கல்லெறியத் தொடங்கி, ஊரை சேர்ந்த கர்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அடித்து நொறுக்கும் அந்த பேருந்து, பேருந்து மட்டுமே அல்ல. அரசு இயந்திரம்!இன்னொரு விஷயமாக நான் ரசித்தது, இதே அரசுக்குள் கிடைக்கும் வேலையை கர்ணன் தூக்கி எறிவதுதான். ஊருக்குள்ளிருந்து ஒருவனாவது அரசு வேலை பெற்று முன்னேறி விட வேண்டும் என்கிற பார்வையை உடைக்கப்படுகிறது.

சமூகத்திலிருந்து அரசை கேள்வி கேட்டு உலுக்கும் உரிமையும் அரசு வேலைக்குள் சென்ற பிறகு பறிபோகும். அங்கிருந்து நியாயமான உரிமைகளை நாம் வென்றெடுப்பதற்கான கொஞ்ச நஞ்ச வாய்ப்புகள் இருப்பினும் அமைப்பு அதை செய்ய விடாது. கர்ணன் சரியாக அதை புரிந்து கொள்கிறான்.பேருந்தை நிறுத்த கேட்கிறான். நிறுத்த மறுக்கப்படுகையில் உயிரை பொருட்படுத்தாமல் வெளியே பாயும் கர்ணன், பிறகு அதே பேருந்தை கல்லெறிந்து உடைத்து எதிர்க்கத் துவங்கி பிறகு அது மீசை முறுக்கி அதிகாரமாக வருகையில் அதன் கழுத்தை அறுத்து எறிவதாக முடிகிறது படம். அற்புதம்!வெளிப்படையாக இக்கதையை பேசும் கர்ணன் உள்ளீடாக சில குறியீடுகளை வைக்கிறான். யானை, குதிரை முதலிய குறியீடுகளை களத்தில் இறக்கி விட்டு விளையாடி பார்க்கிறான். தளபதி பட விளம்பரம் பொறித்த டி ஷர்ட் அணிந்து தான் பேசவிருக்கும் கதை ட்ரீட்மெண்ட்டை அறிவிக்கிறான். ‘தளபதி’ நாம் அனைவரும் அறிந்தபடி துரியோதன – கர்ணன் நட்பின் மீட்டுருவாக்கம்தான். மணிரத்னம் அதை பல இடங்களில் சிலாகித்திருக்கிறார். மகாபாரதத்தை புனை கதையாக்கும் மகத்துவத்தை நிகழ்த்தி விட்டதற்கான கொண்டாட்ட கேவல் அது. மணிரத்னத்திடம் அதைதான் நாம் எதிர்பார்க்க முடியும். ராமாயண மகாபாரத கதையாடலை தன் வளர்ச்சிக்காக விரித்து நீட்டி போதித்து வந்த கூட்டத்தை சேர்ந்தவர் அவர். அதனால்தான் அங்கு தொடங்கி அவர் சரியாக பொன்னியின் செல்வனில் வந்து நிற்கிறார்.மணிரத்னம் முன் வைக்கும், பார்ப்பனியத்துக்குள்ளான அடையாளத் தேடலை புரிந்து கொள்ள முடிகிறது. நாமும் அதே வேலையை செய்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆதிக்க சாதி காவலனாக வருபவனின் பெயர் கண்ணபிரான். அவன் பொடியன்குள குடும்பனின் பெயரை கேட்கிறான். அவர் துரியோதனன் என்கிறார். அவனால் தாங்க முடியவில்லை. ‘நீயெல்லாம் துரியோதனனா ?’ என கேட்கிறான். படத்தின் இறுதியில் கர்ணன் கேட்கும் political statement-ம் அதுவாகவே இருக்கிறது.’கந்தையன் மகன் நீ கண்ணபிரானா இருக்கும்போது மாடசாமி மகன் நான் கர்ணனா இருக்கக் கூடாதா, துரியோதனனா இருக்கக் கூடாதா’ என நாயகன் காவலனிடம் கேட்கிறார்.அதிகாரத்தை துவம்சம் செய்வதற்கான தயாரிப்புகளோடு திருவிழா போல் இரவெல்லாம் சமைத்து உண்டு விழித்து காத்திருக்கும் மொத்த ஊரை, கர்ணன் அழைத்துச் செல்வது பார்ப்பனியம் வழங்கிய சட்டகத்துக்குள்ளான அடையாளத்தை தேடித்தானா என்பதே கேள்வி.காலாவில் ராமன் – ராவணன் கதையாடலின் பின்னணியில் உள்ள ராம எதிர்ப்பும் ராவண ஆதரவும் பார்ப்பன எதிர்ப்பு கொண்ட பூர்வகுடி அடையாள மீட்பே என்பதற்கான வரலாற்று போக்குகள் இந்தியாவில் பல இடங்களில் காண முடியும். மேலும் ராமனை அடையாளமாக கொண்டு நிகழ்த்தப்பட்ட நில அபகரிப்பே காலாவிலும் களமாக இருந்தது. போலவேதான் வெற்றிமாறனின் அசுரனும். அசுரன் என்கிற வார்த்தை பார்ப்பனன் நமக்கு சூட்டிய பெயர் என்ற போதும் கூட அப்பெயர் சூட்டப்பட்டவன் பார்ப்பனன் கட்டிய வருணாசிரமத்தை எதிர்த்து எப்படி களம் கண்டு அழிக்கிறான் என்பதே கதையானது.கர்ணன் படமோ, அதிகாரியாக முயன்ற ஒருவன் பார்ப்பனியத்தை அடிவருடி கண்ணபிரானாக மாறிய வழியை தனக்கான வழியாகவும் வரித்துக் கொள்ள முயன்றுவிட்டதோ என்பதே நம் கவலையாக இருக்கிறது. இந்தியாவின் பார்ப்பனியம் பல விதங்களில் தன்னை ஊடாட வைக்கிறது. இந்தியாவில் நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவம் கைகோர்த்து கொண்டதாக சொல்கிறோம். இரண்டின் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்தவனே பார்ப்பனன்தான். அப்போதுதான் வருணாசிரமத்தை காக்க முடியும்; காக்கவும் படுகிறது.வருணாசிரமத்தின் வருண நிலைகளில் ஏறுவது ஏற்றத்தை கொடுக்கலாம். தேவைக்குரிய சாத்தியமாக பார்க்கப்பட்டாலும் கூட அது முழு சாதி ஒழிப்பை எப்போதுமே நிபந்தனையாக வைக்க முடியாது. ஏனெனில் வருணத்தின் இருப்பே சாதிகளின் தழைவில்தான் இருக்கிறது. மநுவின் உயிர்ப்பில்தான் இருக்கிறது.

பார்ப்பனியத்தின் நீட்சியில்தான் இருக்கிறது.எனவேதான் தோழர் திருமாவளவன் விசிகவின் அடிப்படை நிபந்தனையாக பார்ப்பனிய எதிர்ப்பை கட்டமைத்தார். அதனால்தான் விசிக உருவாக்கப்பட்ட இத்தனை காலத்துக்கு பிறகும் அவரால் மநுவை விட்டு விளாச முடிகிறது. அதே நேரத்தில் அவருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டதா என கேட்டால் நிச்சயமாக அளிக்கப்படவில்லை என்பதே பதில். ஆனால் சாதி ஒழிப்பு என்பதற்கான நோக்கத்தில் இன்றைய பெருமளவு இளைஞர்களை அவரால் ஈர்க்க முடிந்திருக்கிறது. ஈர்த்து மாற்றவும் முடிந்திருக்கிறது.சனாதனத்தை எதிர்த்து சண்டை கட்டும் தோழர் திருமா அதிகாரம் பற்ற நாமும் அவருடன் கை கோர்க்க வேண்டுமே தவிர, விலகிச் சென்று அவருக்கு நேரெதிர் அரசியலில் தஞ்சமடைந்துவிடக் கூடாது. தஞ்சமடைதல் திருமாவுக்கு மட்டுமல்ல, சாதியொழிப்பை நிலைப்பாடாக கொண்டு இயங்கும் ஒரு பெரும் கூட்டத்துக்கு இழைக்கும் துரோகமும் கூட.கர்ணன் படம் அதிகாரத்தை எதிர்க்கையில் புல்லரிக்கிறது. பார்ப்பனியத்தை அமைதியாக ஏற்கையில் அதிர்ச்சி ஏற்படுகிறது. என்னுடைய கர்ணன், ஐராவதம் என்கிற பார்ப்பனிய யானையிலேறி வலம் வர விரும்புபவன் அல்ல. அந்த ஐராவதத்தை கொன்று வீழ்த்தி இந்திரனை தரையிறக்கி தனக்கு சமமாக நிற்க வைத்து சண்டை கட்டுபவன்!

Exit mobile version