திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இருவரின் சந்திப்பு குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: நாராயணசாமி, பிரதமர் அலுவலக அமைச்சராக உள்ளார். நவம்பர், 21ம் தேதி கூடுகிற பார்லிமென்ட் கூட்டத்தொடர், சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, ஐ.மு.கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவது, நாராயணசாமியின் பணிகளில் ஒன்று. அந்த அடிப்படையில், ஐ.மு.கூட்டணியில் இடம் பெற்றுள்ள கருணாநிதியை, நாராயணசாமி சந்தித்து பேசினார். கடந்த மாதம், கருணாநிதியை நாராயணசாமி சந்தித்து பேசியபோது, மத்திய அமைச்சரவையில் தி.மு.க., இடம் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, வழக்கமான சந்திப்புதான் இது என்றும் அரசியலே பேசவில்லை என்றும் அடித்து சொல்லியிருக்கிறார்.