இந்திய பொருளாதார அரசியல் ஆக்கிரமிப்பும், பொருளாதார நெருக்கடியும் இலங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தணிந்து வரும் தேசிய முரண்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கு எதிரான தீவிர போராட்டங்களாக உருவெடுக்கின்றன. இந்த நிலையில் தேசிய இன முரண்பாட்டை கூர்மைபடுத்தும் மக்கள் விரோத செயற்பாடுகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், உரிமைப்பறிப்பின் சட்டவாக்கங்கள், பண்பாட்டு அடையாளங்களை அழித்தல், இனச் சுத்திகரிப்பு போன்ற பேரினவாதச் செயற்பாடுகளை இலங்கை அரசு அதன் தமிழ்த் துணைக் குழுக்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் இன்னொரு பகுதியாக திருகோணமலையில் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
கன்னியா வெந்நீர் ஊற்றில் இராவனணுடைய வரலாற்றுக் குறிப்புகளும், கன்னியா வரலாற்று அம்சங்களும் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை அங்கு விஜயம் செய்த திருகோணமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவின் உத்தரவிற்கமைய நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெந்நீர் கிணறுகளிற்கு அண்மையில் அமைந்திருந்த இந்துக் கோயில் தொடர்பான பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிகழ்வுகள் திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்றுப் பாராம்பரியங்கள் திட்டமிட்டு அழிக்க முனையும் செயலாக அமைகின்றன.
தொடர்புடைய பதிவுகள்:
https://inioru.com/?p=14730