கைவிரல்கள் சூப்பிய காலங்களில் இருந்து
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
வண்ணத்துப் பூச்சிகளை துரத்திய பருவங்களிலும்
உங்களால் கவனம் கலைந்துள்ளோம்.
நீங்கள் வந்துசெல்லும் போதல்லாம்
வைரங்களையும் மணிகளையும்
கொண்டுசெல்லுவதாய்- எங்கள்
தந்தையரும் அன்னையரும்
வாய்பிளந்து பேசிக் கொள்வர்.
ஏனையா வருகிறீர்கள்?
தட்டு நிறைந்த உணவை வேண்டாமென
உங்கள் குழந்தைகள்
தள்ளிவிட்டு செல்வது போல் போக
எங்கள் குழந்தைகளிடம்
தட்டுமில்லை உணவுமில்லை.
உங்கள் மாளிகைகள் -அதன்
பளிங்குத் தரைகள் குறித்து
எங்கள் பெண்கள் ஏதுமறியார்!
பறிபோய் விடுமோ என பயந்தோ
பெரிய பெரிய திட்டங்கள் போடுகிறீர்?
ஒருதடவை மட்டுமே அணியப்பட்டு
சுருக்கமும் அழுக்குமற்று எறியப்படும்
உங்கள் ஆடைகளுக்கு ஆபத்து ஏதுமில்லை.
ஆனாலும் எங்கள் கந்தல்களையும் பறிப்பதென்று
கங்கணம் கட்டுகிறீர்.
நூறாயிரம் பேர் இந்த மண்ணுள்
மக்கிப்போயுள்ளோம்.
நூறு இயந்திரங்களை வைத்து என்ன செய்ய?
ஒரு கவளம் சோறு – அதுதான்
நாம் தேடும் செல்வம் இப்போது.
பளபளக்கும் உங்கள் தோல்களின் கீழே
எங்கள் குருதியெல்லாம் உறைந்துளது.
தூதரகம் திறந்து
ஓப்பந்தங்கள் போட்டுக் கொண்டு
இன்னமும் என்னதான் தேடுகிறீர்கள்?
ஐயா கனவான்களே!!
அடுத்த முள்ளிவாய்க்கால் எப்போது?