Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கனக தூர்கா ஆலயத்தில் போர்க்குற்ற விசாரணை : சோளன்

ampalலண்டன் ஓம் கனக தூர்கா ஆலயத்தில் கோர்ட் கேஸ் எல்லாம் துரிதமாகத் தீர்த்துவைக்கப்படும் என தீபம் தொலைக்காட்சி விளம்பரம் போடுகிறது. அதே போக்கில் போர்க்குற்ற விசாரணையும் ஓம் கனகதுர்க்கா ஆலயத்தில் நடைபெறும் என்று அதிரடியாக அறிவிப்பு வந்தாலும் வியப்படையக்கூடாது.

அம்மாளின் அருள் பெற்ற தமிழ்த் தேசிய ஊடகங்கள் ஈழத்தில் கலாச்சாரம் சீரழிவதாகக் கண்ணீர் வடிக்கும் செய்திகளின் கீழ் பதிவு செய்யும் முக்கால் நிர்வாண சினிமா நடிகைகளுக்கு அருகில் ஒரு பக்கத்தை ஒதுக்கி அம்பாளின் அருளைப்பற்றியும் போர்க்குற்றங்கள் பற்றியும் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.

அதன் பிறகு எல்லாமே மாறிவிடும். அம்பாளின் கீழ் உலகத் தமிழர்களை ஒன்றிணையக் கோரியும் அடுத்த மாவீரர் தினத்தை அம்பாளின் சன்னிதியில் நடத்துவோம் என்றும் புலம்பெயர் அமைப்பு அறிக்கை விடும். அதிலும் அம்பாளின் வாகனத்தின் சின்னம் போட்டு கொடிவிசுக்கியே மாவீரர் தினம் கொண்டாட வேணும் என்றும் அப்படிக் கொடிவிசுக்காதவர்கள் துரோகிகள் என்றும் அறிக்கை வரும்.

அம்பாளைக் கும்பிடுகிறவர்கள் வைரவரின் நாய்க்கு சொறிபிடித்ததைப் போன்றவர்கள் என்றும் முருகனைக் கும்பிடாதவர்கள் துரோகிகள் என்றும் கழுத்து நரம்பு புடைக்கப் பேசி உணர்வாளர்களை செந் டமிலன் சீமான் உசுப்பேத்துவார்.

அம்மனின் வாகனம் சிங்கம், அது தான் சம்பந்தன் விசுக்கிய கொடி என்பதால் வைரவரின் வாகனம் போட்ட கொடி விசுக்கியே முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கொண்டாடுவோம் என இன்னொரு அமைப்பு அறிக்கை விடும். வைரவரின் வாகனமான நாய்க் கொடியை ஏற்றுகொண்டால் தேசத் துரோகமா இல்லைய என்று அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும்.

சிங்கக்கடியா நாய்க் கடியா உரமான கடியென்று இரண்டு குழுக்களாகப் பிரிந்து சண்டை பிடித்துக்கொள்வர்கள்.

பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்தின் முன்னால் நின்று எங்கள் தலைவி அம்பாள் எங்கள் கொடி நாய் அல்லது சிங்கம் என கூச்சல் போட்டுவிட்டு போராட்டம் நடத்தியதாகக் கூறிக்கொள்வார்கள். பிரதமர் அலுவலகத்தின் காவல்காரர் தனது தொப்பிகளர சிரித்துக்கொள்வார்.

அம்பாளின் அருளுக்குப் பின்னால் உள்ள மகிமை பற்றி புலம்பெயர் அமைப்புக்களின் தத்துவார்த்த ஆசிரியர்கள் தொலைக்காட்சிகளில் அரசியல் ஆய்வு செய்ய எல்லாம் ஒரே அருள் மயமாகக் காட்சியளிக்கும்.

அம்பாளின் சன்னிதியில் போர்க்குற்ற விசாரணையை இறுக்கிச் செய்யுங்கோ என்று ஒரு அமைப்பு பூசை போடும்! பனை மரத்தில் வவ்வாலா அம்பாளுக்கே சவ்வாலா என்று இன்னொரு அமைப்புப் போராட்டம் நடத்தும்!!

அம்பாளுக்கு இரகசியப் பூசை செய்கிறோம் என்று மற்றொரு அமைப்பு அறிக்கை விடும். இவை எல்லாத்துக்கும் காசு தேவை என்பதால் அம்பாள் சன்னிதியில் உண்டியல் குலுக்கப்படும்.

நீங்கள் குலுக்குறதைக் குலுக்குங்கோ நாங்கள் தானே கடைசியில் கிலுக்கப் போகிறம் என்று காத்துக்கொண்டிருந்த சுமந்திரன் ஐயா சிலாவி ஒரு பூசை நடத்தி அம்பாளின் தலைமைப் பக்தனாகிவிடுவார்.
புலம்பெயர் குழுக்கள் தமது புக்கைக்காகக் காத்திருப்பார்கள்.

நடப்பது என்ன என்று விளங்கிக்கொள்ளாத அப்பாவித் தமிழ் மக்கள் அம்பாள் சன்னிதியில் விழுந்து வணங்கிவிட்டு சுப்பர் சிங்கரையும், ரீவீ சீரியலையைம் தங்கள் குழந்தைகளுக்கு காட்டி இதுதான் தமிழ்க் கலாச்சாரம் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

Exit mobile version