மேலும் அந்த சித்தரிப்புகள்அந்தப் பிரச்சினைகளை மேலோட்டமாக கையாளுகின்றன. மக்களிடம் நாம் செய்ய வேண்டியபணிகளுக்கு இந்தகையை அரைவேக்காட்டுதனமான அரசிய சவடால்கள் எந்த விதத்திலும்உதவப்போவதில்லை என்பதை விஜய் பேசும் வசங்களைப் பார்த்து ஆறுதல் அடைபவர்கள் உணரவேண்டும். ஆம் அரசியல் சார்ந்த நம் கைலாகாத தன்ங்களுக்கு இவை ஒரு அரைவேகாடுதனமானஆசுவாசத்தை அளிக்கின்றன. அதனால்தான் ராமநாராயணின் ஆடு மாடுகளை வைத்துஎடுக்கப்படும் படங்களால் எந்த அபயாமும் இல்லை;ஆனால் ஒரு சூப்பர்ஹீரோ முன்னால் மக்கள் ஆடுமாடுகள் போல பயன்படுத்தப்படும் இத்த்கைய போலி அரசியல்படங்கள் ஆபத்தானவை, அவை எப்போதும் போகாத ஊருக்கு வழிகாட்டுபவை என்று சொன்னேன்
விஜய் இந்தப் படத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக பேசும் சில வசனங்களைக் கேட்டு பலரும் புளகாங்கிதம் அடைகின்றனர். நமது அரசியல் சிந்தனைகள் எப்படி ’கத்தி’என்ற துருப்பிடித்த பிளேடால் மழிக்கப்படுகின்றனஎன்பதன் அடையாளம்தான் கத்தி.
தன்னூத்து என்ற கிராமத்தில் விளைநிலங்களை ஒரு பன்னாட்டு நிறுவனம் ரவுடிகளை பயன்படுத்தி அபகரிக்கிறது. ஜீவானந்தம்(விஜய்) என்ற இளைஞர் விவசாயிகளை திரட்டிப் போராடுகிறார். விவசாயிகளை கொலை செய்து அவர்கள் கட்டைவிரல் பதிவின் மூலம் போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.ஊடகங்கள் இதைக் காட்ட மறுக்கின்றன. அந்த கிராம விவசாயிகள் சிலர் கூட்டாக தற்கொலை செய்து ஊடக கவனத்தை ஈர்க்கிறார்கள்.
கல்கத்தா சிறையில் இருந்து ஜீவானந்தத்தைப் போலவே உருவ அமைப்பு உள்ள கதிரேசன் என்ற கைதி( இன்னொரு விஜய்) தப்புகிறான். தப்பி வரும்போது பன்னாட்டு நிறுவனத்தின் அடியாட்களால் சுடப்படும் ஜீவானந்தத்தை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஜீவானந்தமாக நடித்து கதிரேசன் மக்கள் தலைவனாக மாறுகிறான். இன்டெர்நெட்டில் படித்து பிரச்சினைகளையெல்லாம் தெரிந்துகொள்கிறான். ஊடகங்களில் இந்தப் பிரச்சினையை தெரிய வைப்பதற்காக ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடி தண்ணீர் வரும் குழாய்களுக்குள் மக்களை இறக்கி தண்ணீர் வரவிடாமல் செய்து தன்னை நோக்கி ஊடகங்களை வரவழைக்கிறான். ஊடகங்களின் முன் விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதிலிருந்து தொடங்கி 2ஜி அலைக்கற்றை வரை 6 நிமிடம் பொரிந்து தள்ளுகிறார்.இதற்கிடையில் பல்வேறு அடிதடிகள் மூலம் கார்ப்பரேட் குண்டர்களை தனி ஒருவனாக துவம்சம் செய்கிறான். கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாக கூடிப் பேசி(!) ஒரு கிராமத்திற்கு எதிராக சதி செய்கிறார்களாம். கதிரேசன் என்கிற விஜய் அதையெல்லாம் முறியடிக்கிறார்.
ஒரு முக்கியமான பிரச்சினையை எவ்வளவு மலினப்படுத்தமுடியுமோ அவ்வளவு மலினப்படுத்துகிறது இந்தப் படம். மக்கள் தலைவராக இருக்கும் ஜீவானந்தம் மிகவும் மங்கலான பலவீனமான கதாபத்திரமாக, எந்த நிலையிலும் அழுதுவிடுபவர்போலவே படம் முழுக்கக் காட்டப்படுகிறார். ஆனால் அடிதடிகளில் ஈடுபடுபவரும் குற்றப் பின்னணி கொண்டவருமான கதிரேசனாக வரும் விஜய்யோ எல்லையற்ற ஆற்றல் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.ஒரு மக்கள் போராட்டத்தில் மக்களிடமிருந்து வரும் தலைவர்களை பலவீனமானர்களாகவும் வெளியே இருந்து வருபவர்களை ஆற்றல் மிக்கவர்களகாவும் காட்டுவதன் மூலம் போராட்டங்கள் அல்ல,தனிமனித சாகசங்களே வெற்றியைத் தேடித்தரும் என்ற மனநிலையை கட்ட விரும்புகிறது. மேலும் இது விஜய்யின் அரசில் கனவுகளை நேரடியாகப் பிரதிபலிக்கிறது. ‘நான் வந்து உங்களை மீட்பேன்’ என்று அவர் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கிறார்.
மக்களின் போராட்டத்தை இந்த அளவு கொச்சைப்படுத்துகிற இந்த படம், ஒரு நல்ல ‘மெசேஜ்’ஜை சொல்வதாக நம்புகிறவர்களுக்கு ஒரு கேள்வி. தமிழில் எந்தப் படம்தான் நல்ல ‘மெசேஜ்’ சொல்லவில்லை?ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் எதிராக நமது ஹீரோக்கள் எவ்வளவு வசனங்களை உதிர்த்திருக்கிறார்கள். அதெல்லாம் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான மனநிலை எதையேனும் உருவாக்கியிருக்கிறதா?ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு கைது செய்யப்பட்டபோது பெரும்பாலான தமிழர்கள் ஜெயலலிதாவிற்காக இரக்கப்பட்டார்களே தவிர அவர் செய்தது தவறு என்று சொல்ல முன்வரவில்லை.அப்படியென்றால் ஊழலை எதிர்த்து எடுக்கப்பட்ட படங்களின் நிலை என்ன? வர்த்தக சினிமா எப்படி காதலையும் காமத்தையும் கேளிக்கையாக்குகிறதோ அதேபோலத்தான் சமூகப்பிரச்சினைகளையும் கேளிக்கையாக்குகிறது.இந்தக் கேளிக்கைகாக பிரச்சினைகள் வெட்டி சுருக்கப்படுகின்றன. உருமாற்றப்படுகின்றன.உண்மையான எதிரிகள் மறைக்கப்பட்டு போலி எதிரிகள் காட்டப்படுகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உண்மையான மக்கள் மறைக்கப்பட்டு போலிப் போராளிகள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
இந்தப் படம் எழுப்பும் விவசாயிகள் பிரச்சினையைப் பார்ப்போம்.விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு கூலித்தொழிலாளிகளாக மாறி நகரங்களிலும் வெளிநாடுகளிலும் குப்பை கூட்டுபவர்களாக வாழ்வதாகவும் அவர்கள் தங்கள் ஊருக்கு வந்து விவசாயம் செய்து வாழ ஆசைப்படுவதாகவும் இந்தப் படத்தில் காட்டப்படுகிறது. மேலும் விவசாயத்தின் அழிவிற்கான ஒட்டுமொத்த பழியும் பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் போடப்படுகிறது.
நமது கிராமங்களில் விவசாயத்தின் அழிவு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வருவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. உள்ளூர் ஆக்ரமிப்பு சக்திகளாலும் மணல் கொள்ளையர்களாலும் நமது நீர்நிலைகள் அழிக்கப்பட்டன. பூச்சிக்கொல்லி மருந்துகளால் நமது விளைநிலங்கள் பாழ்படுத்தப்பட்டன. விவசாயம் செய்வதற்கான செலவு பல மடங்கு அதிகரித்தது. ஆனால் விளைவித்த பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. கடன்பட்ட விவசாயிகள் இலட்சக்கணக்கில் நாடு முழுக்க தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள். இதெல்லாம் நமது அரசாங்கங்கள் பின்பற்றிய மோசமான வேளாண் கொள்கைகள் காரணமாக நடந்தவை.
கார்ப்பரேட்டுகள் நமது அரசுகள் உருவாக்கிய புதிய பொருளாதார கொள்கைகள் வழியாக உள்ளே வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக்கொடுக்கிறது. நாடு முழுக்க கார்ப்பரேட்டுகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையை அரசுகள் செய்கின்றன. இதை மக்கள் எதிர்க்கும்போது காவல்துறையை விட்டு ஒடுக்குகிறது. கார்ப்பரேட்டுகள் நேரடியாக அடியாட்களை வைத்து நிலங்களை அபகரிப்பதுபோல ஒரு சித்திரம் உருவாக்கப்படுகிறது. உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாட்களாகச் செயல்படுவது அரசும் அதிகார வர்க்கமும் காவல்துறையும்தான். ஆனால் இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் சுட்டுவிரல்கூட அவர்களை நோக்கி நீள்வதில்லை. இதைக் கேள்வி கேட்க வேண்டிய இடதுசாரிகள் பலர் ‘விஜய் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் பேசிவிட்டார்.இனி மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிடும்’ எனமனக்கிளர்ச்சி அடைவதுதான் ஏன் என்று புரியவில்லை.
மக்களுக்கு உண்மையில் விஜய் இந்தப் படத்தில் பேசும் பிரச்சினைகள் எல்லாம் தெரியாதா?இன்று ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் அலசி ஆராயப்படுகின்றன.இதில் நூறில் ஒரு பங்கு கூட கத்தி படத்தில் ஆராயப்படவில்லை. மக்களுடைய துயரம் எல்லாம் இவற்றிற்கு எதிராக உண்மையிலேயே என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். அவர்கள் எதிர்ப்பை வழிநடத்தும் வலுவான அரசியல் இயக்கங்கள் இல்லை.விஜய் காட்டிய வழியில் வீராணம் குழாயில் போய் உட்காருவதுதான் தீர்வு என இந்தப் படத்தை ஆதரிப்பவர்கள் நம்புகிறார்களா?
இன்னொன்று விவசாய கிராமம் என்ற புனிதக் கனவு ஒன்று இந்தப் படத்தில் காட்டப்படுகிறது. நமது கிராமங்கள் அவ்வளவு புனிதமானவையல்ல.இந்தப் படத்தில் சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளிகளுக்கு எந்த இடமும் இல்லை. கிராமத்தில் இருக்கும் மனிதர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறுவதை பல சமயங்களில் ஒரு விடுதலையாகத்தான் நினைக்கிறார்கள்.அப்படி வெளியேறுபவர்கள் எல்லாம் கிராமத்தில் தங்களுக்கு கிடைத்த சாதிய இழிவைவிட நகரங்களில் குப்பை அள்ளினாலும் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். சாதியத்தின் பெண் அடிமைத்தனத்தின் கூடாரங்கள் நமது விவசாய கிராமங்கள்.
தனிமனித சாகசத்தை முன்வைக்கும் படத்திற்கு புரட்சிகர முலாம் பூசுவதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் இல்லை.விஜய் ஒரு இடத்தில் வில்லனை பார்த்து ‘உன்னை 17 வயசுப் பையனை வைத்து கொல்வேன். அவன் மூணு வருஷத்துல வெளிய வந்துடுவான்’ என்று மிரட்டுகிறார். இளம் குற்றவாளிகள் பிரச்சினையை எவ்வளவு மோசமகா அணுகுகிறார் என்று பாருங்கள். இன்னொரு இடத்தில் கம்யூனிஸம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ‘உன் பசிக்கு மேல் நீ சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் அடுத்தவனுடையது’ என்கிறார். 4ஜி லைசன்ஸ் வாங்குவதற்காக இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கே இலஞ்சம் கொடுத்த லைக்காவின் தயாரிப்பில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இந்தப் படத்தில் 2ஜி ஊழலைப் பற்றியெல்லாம் பேசுகிறார்.தில் இருந்தால் 1 ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் எப்படி இத்தனை கோடி ரூபாய் சொத்துச் சேர்த்தார் என்று படத்தில் டயலாக் வைத்திருக்க வேண்டும். ஊடகங்களைப் பற்றி இந்தப் படம் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் அபத்தத்தின் உச்சம். நமது ஊடகங்களில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஊடகங்கள் முன்வைத்த சமூகப் பிரச்சினைகளின் ஒரு நுனியைக்கூட தமிழ் சினிமா தொட்டதில்லை.
ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் இந்த மசாலா சகதியில் தங்களுக்கான புரட்சிகர பருக்கைகளைத் தேடுகிறவர்களை நினைத்தால் உண்மையிலேயே கண்ணீர் வருகிறது.