Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கதவை மூடுங்கள் காற்று நிற்கட்டும் : ச.நித்தியானந்தன்

art

வயலெல்லாம் வறண்டு போச்சு

விரிசல் விழுந்தது நிலங்கள்

காற்;றில் கூட ஈரம் இல்லை

துளி நீருக்காய் வானம் பார்த்து

பிளந்து கிடக்கிறது துரவு

ஆனாலும் நூலிழையில் தொங்கிக் கிடக்கிறது

நம்பிக்கை

கண்ட இடமெங்கும் கட்டாக்காலி மேய்ச்சல்

தடுப்புவேலிகளும் இல்லை

தடியெடுத்து கலைக்கவும் வீரியம் இல்லை

சுதந்திரம் வேண்டி விலை கொடுத்த இனம்

வாடிக்கிடக்கிறது

தோல் சுற்றிய எலும்பாய்

வதங்கிக் கிடக்கிறது

கொடுத்த விலைக்கு ஆதாரமாய்

உறுதிகள் நகல்கள் ஏதும் இல்லை

எல்லாம் முடிந்ததென்று உழுது மறைத்துவிட்டனர்

புயலும் மழையும் அடித்த காட்டில்

இன்று புலராத வைகறை

எந்த திக்கிலும் ஒளியைக் காணவில்லை

இருளே மண்டிக்கிடக்கிறது.

புடையனும் தேளும் முதலையும் கீரியும்

நீக்கமற நிறைந்து கிடக்கிறது

கழனிகரையெல்லாம் களைகளே நிறைந்து கிடக்கு

நாளேடுகளை எடுத்தாலே

நாடி நரம்பெல்லாம் நடுங்குகின்றது.

பாட்டியைக் கற்பழித்த பேரன்

என்ன இழிவடா இது

இதற்காகவா இத்தனை உயிர்களைத் தீய்த்தோம்

இதற்கா ஊழித்தாண்டவமாடினோம்.

எல்லாம் முடிந்ததென்று அவர்களுக்கு முசுப்பாத்தி

சுதந்திரத்திற்கான யாகங்கள்

அழிவின் சிதலங்கள்

இழந்துபோன வலிகள்

அப்படியே கிடக்க

மீண்டுமொருமுறை மேடைகள் போடப்படுகின்றன.

கலர் கலராய் போஸ்டர்கள் கொடிகள்

வெள்ளையடித்த சுவரெல்லாம்

கொள்ளையர் படங்கள்

அழுத கண் காயவில்லை

இழந்த வலி மறையவில்லை

முறிந்த கால் நிமிரவில்லை

அதற்குள் மீண்டுமொரு திருவிழா

எமது விடுதலைக்காய் எத்தனை வியாபாரிகள்

தலைமறைவாய் திரிந்ததுகள்

தாடிவைத்து உருமறைத்ததுகள் எல்லாம் வந்து

வாசல் கதவை தட்டுகின்றன.

தேசியம் பேசுகின்றன.

கையெடுத்துக்கும்பிடு போடுகின்றன.

துயிலுமில்லங்களை உழுதுதொலைத்தவனைக்

கொண்டாடி ஒரு கூட்டம்

காட்டிக் கொடுத்தவனையும்

கூட்டிக் கொடுத்தவனையம் கும்பிட்டு ஒரு கூட்டம்

இறுதியில் இதுதானென்று தெரிந்திருந்தும்

இவ்வளவு விரைவிலா என்று

ஏற்காத மனம்.

என்ன செய்யப்போகிறோம்…….!

இது முள்வழி

மெல்லத்தான் நகர வேண்டும்

கொஞ்சம் வழிமாறினாலோ முட்கள் கிழித்துவிடும்

பழியை எம்மீது போட

உலகை ஏமாற்ற நாடகம் நடக்கிறது

மாகாணசபையென்னும் மகோன்னத வாழ்வு

தருகிறோமென

நல்லதோர் ஒப்பனையில்

கனகச்சிதமாய் கதைவசனம் எழுதி நாடகம் மேடையேறுகிறது.

கவர்ச்சி நடிகைகளும் அதிகம்

வயிறு காட்டியே எம் வாழ்வை முடிக்க

கங்கணம் கட்டியாடுகிறார்கள்

மெய்மறந்திருந்தால் நமக்குத்தானே அழிவு

இத்தனைபேரை இழந்தோமேயெனக்

கத்தவேண்டும் போலிருக்கும் மனம்

நித்தம் பூசித்தவரைக் காணாமல்

செத்துவிடலாமோவெனக் கதறியழும் நிதம்

சித்தப்பிரமை பிடித்து அலறும் உள்ளிருந்துகுரல்

மொத்தமும் தொலைத்தவருக்கு மோகமென்ன பாசமென்ன

மணிமுடியைக் காணவில்லை

மண்டைக்கு ஏனிந்த ஒப்பனை

முகமிழந்தவர்களுக்கு ஏன் இந்த முகப்பூச்சு

வாழ்வைப் பறித்தவரே வரங்கள் தருகிறார்கள் அதை

வாங்கித்தரவென்று வந்திருக்கிறார் இவர்கள்

தேசியம்

தன்னாட்சி

சுயநிர்ணயம்

பதின்மூன்று பிளஸ்

இணைப்பதும் பிரிப்பதும் அவர்களென்றால்

ஈழைக்கிழவி இழுத்துச் சாகவேண்டியதுதானே

பின்னென்ன சுயநிர்ணயம்

உழுதுவிட்டு அடுத்த மழைக்காய் காத்திருக்கையில்

அவர்கள் இருந்த நெல்லையும் பிடுங்கிக் கொண்டபோது

என்ன தன்னாட்சி புண்ணாக்கு

……………….. பதின்மூன்று பிளஸ்

(புள்ளியிட்ட வெளியில்; விரும்பிய தூஷண வார்தையை இணைக்க)

அன்று

வேலியிட்ட சிறு புலவுவொன்றை கண்டோம்

நல்லவர்க்காய் கதவு திறக்கப்பட்டது

தவறிழைத்தும் திருந்தியோரும் புடம்போடப்பட்டு ஈர்க்கப்பட்டனர்

நல்ல காற்றுமட்டும் உள்ளே வந்தது

தமிழன் வாக்குப்பலத்தை உலகம் உணர்ந்தது

ராஜயசபாவும் வெள்ளைமாளிகையும் உள்ளதுணர்ந்தன.

மேய்ப்பன் இல்லா வேளையிலும்

புலவு திறந்து கிடந்தது

காடை கடைப்புளி எல்லாம் உள்ளே வந்தன

கட்டாக்காலிகளின் மேய்ச்சல் தரையானது புலவு

திறந்திருந்த வாயிலூடாக இன்றும்

காற்று வந்தது கூடவே காவாலிகளும் வந்தனர்

ஊத்தைகளும் குப்பைகளும்

குந்தியிருந்து கும்மியடிக்குமிடமானது புலவு

ஏய் யாராவது கதவை மூடுங்கள்

காற்றுவருவது நிற்கட்டும்.

~ச.நித்தியானந்தன்-யாழ் பல்கலைக்கழகம்~

Exit mobile version