Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கட்டுடைத்து விடுதலை செய்திருப்பது சொற்களை மட்டுமல்ல – பகிர்வு 6 : கவிதா (நோர்வே)

எழுதத் தொடங்கி எத்தனையோ வருடங்களாகிவிட்டன பெண்கள். இருட்டையும் சுமையையும் கிழித்து தம் எழுத்துக்களை தொகுப்பதற்குள் சிலருக்கு ஆயுட்காலம் கேட்கிறது. பல வருடக் இலக்கியப் பயணத்தின் பின் தான் பானுபாரதியின் கவிதைகள் கோர்கப்பட்டிருக்கின்றன. நோர்வே நாட்டின் அனுபவங்களைவிட தான் அனுபவித்த தன் தேசச் சுவடுகளை நோக்கியே இவரது பல கவிதைகள் விரிகிறது.

எழுத்துபவர்கள் எல்லாம் சமூகத்தை திருத்தும் நோக்குடன் தான் எழுதுகிறார்கள் என்ற எண்ணம் வாசகர்கள் பலருக்கும் இருக்கலாம். கவிதை இலக்கிய வெளிப்பாடுகள் எல்லாம் எதையும் எவரையும் திருத்தும் நோக்கோடு வெளிவருது இல்லை. அதன் நோக்கமும் அதுவாக இருக்கத்தேவையில்லை. அவரவர் தமக்குத் தோன்றியவற்றை எடுத்துவருகிறார்கள். வெளிவந்த கவிதைகளின் அதிர்வுகளும் விளைவுகளும் திட்டமிட்டு வருபவையுமல்ல. காலப்போக்கில் இடமுணர்ந்து தேவைக்கேற்ப அவை தன் அதிர்வுகளை மெலிதாகவோ கனமாகவோ எங்கோ ஒரு மூலையில் உருவாக்கிப்போகிறது என்பதே உண்மை. அதுவே ஒரு படைப்பின் வெற்றி.

அந்த வகையில் தன் பயணம் தொடரும் கவிஞர் பானுபாரதியின் ஒரு கவிதை ஒரு பாலின மேலாதிக்கத்தை இப்படி அடித்து நொருக்கிறது.

வொட்கா நிரப்பப்பட்ட

உனது கண்ணாடிக் குவளையில்

எலுமிச்சை சீவல்களாய்

எனது கனவுகளோடு வாழ்வும்

கரைந்து போனதேன்

அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்

சிதறு தேங்காய்போல்

உனதாண்மை நொறுக்கப்படும்போது

வொட்காவிலும் பியரிலும்

கரைந்துபோன கணங்களிலிருந்து

எனக்கான பதில் கிடைக்கக் கூடும்

தன் வாழ்வைத் தொலைத்து விட்ட ஒரு பெண்ணின் கவலை காரமான சொற்கள் கொய்து இங்கு ஒவ்வொரு வரிகளிலும் பரவியுள்ளதை உணரலாம். இதைப்போலவே தான் கடந்து வந்த சமூக அமைப்பை அதன் குறைபாடுகளை இனிவரும் எம் சந்ததிக்கும் சேர்த்து தனது சுதந்திர விரல்களை நீட்டுகிறாள்.

ஈரும் பேனுமாய் பிடுங்கி

வாயில் போடும் குரங்கைப்போல

எனது

கண்கண்ட கடவுளந்த

நட்சத்திரங்களை பிடுங்கி

வாயில் போட்டுக்கொண்டான்

எனக்கென்றொரு

கண்கண்ட கடவுளை தேடித்தந்த

என் தந்தைக்கும்

தாயின் சமாதிக்கும்

நான் சொல்லிக் கொள்வது…

எனது மகளுக்கு

நிச்சயமாய்

நானோர்

கண்கண்ட கடவுளை

தேடித் தரப்போவதில்லை

அவள்

ஒரு மனிதனை

தானே தேடிக் கண்டடைவாள்

நெஞ்சில் பெருங்கடலாய் மோதி எழும் விடைகாணா கேள்விகளின் ஆதங்கத்தின் வெளிப்பாடாய் இந்த வரிகள் தன்கோபம் தின்று செறிக்கிறது.

மூன்றாந் தரப்பிலிருந்து

கருவாடு தின்று சுவைதயறிந்த

ஆதிபராசக்தியின் தூமைத்துணி

புதுக்கதை பேசியது

வாளெடுத்த பெண்தெய்வங்களெல்லாம்

நிலத்தடியிலும், அருவியிலும்

கடலிலும் சங்கமமாகி

சாதிக்கொரு

பிள்ளை பெற்றுக்கொண்டன

‘உங்கள் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் உங்கள் கருத்துச் சுதந்திரத்திற்காக நானும் போராடுவேன்’ என்று இங்கு எத்தனை பேர் எழுந்து வருகிறார்கள். அப்படி இதோ நான் இருக்கிறேன் என்று முழக்கமிடுபவர்களும் எத்தனை பேர் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்? சமயம், கடவுள் எல்லாம் விமர்சனத்திற்கு அப்பாட்பட்டவர்கள் என்ற ஆணித்தரமான கருத்தோடும், சிலர் வீசுதற்க்கு தயாராக கையில் கற்களோடும் கூட அலையும் இந்த வனாந்திரத்தில் முடக்கிவைக்கப்படும் கேள்விகளை முன் வாசலுக்கு இழுத்து வரும் கவிதை இது. சிலரால் மட்டுமே ஜீரணிக்கக்கூடியவை. அடுத்து வரும் வரிகளில் தனக்கிருக்கும் துணிவை தீர்க்கமாகச் சொல்லிவிடுகிறாள்.

நெருப்புக் குஞ்சொன்று

எனது கைகளில்

அமர்ந்து கொண்டது

கண்களிலதனை

ஏந்தி நிமிர்ந்தேன்

பூமியை

துகிலுரிந்துகொண்டிருந்த

சூரிய துச்சாதனன்

சமரசம் பேச

என் வாசற்படியிலமர்ந்திருந்தான்

இவருடைய ‘பிறத்தியாள்’ கவிதைத் தெகுப்பில் 20 வருடங்களுக்கும் அப்பால் எழுதிக் குவித்த கடிதங்களும் கவிதையாக கரைந்திரு;கின்றன. அன்றைய காலத்தை உணரமுடியாத உயிர்களுக்கான ஒரு வார்படமாக, அனுபவங்களினதும் தேசத்தினதும் அன்றைய இயல்பை பாடியபடியே மனதை கொத்தி ரணம் செய்கின்றன பானுபாரதியின் கவிதைகள். ‘போர்ப் பிரகடனம் ‘ என்று கவிதையாகிப் போன ஒரு கடித்தில்…

கவிதைகள் அனுப்பும்படி

குறிப்பிட்டிருந்தீர்கள்

தோழரே!

அப்படியொரு

தற்கொலை முயற்சியை

இதுவரை நான்

செய்ததில்லை

போர் வாழ்வு தரும் நெருக்கடிகளை, ரணத்தை மேவி கவிதை புனைவதன் கடினத்தையும் மனப்போரட்டத்தையும் எடுத்தியம்புகிறது கவிஞரின் இந்தக் கடிதக் கவிதை

யார் வேண்டுமானாலும்

தெருவுக்கொரு சகாப்புக்கடை

கட்டும்படியாகிவிட்டது பூமி

ஆண்மையை நிரூபிக்க

அனுப்பி வைக்கப்பட்டவர்கள்போல்

சீதை கண்ணகியின் கற்புருகி

கடைவாயால் வீணியாய் கொட்ட

பெண்குறிதேடி அலைகிறார்கள்

வீட்டுக்கு வீடாய்…

கவிதை என்பது சொற்களின் சுருக்கம். இந்த சுருக்க மடிப்புகளில் குட்டி குட்டியாய் உலகம் ஊர்செய்திகளும் விரிந்து வருகிறது.

வெடிக்கத் தெரிந்த

துவக்குகளின் மத்தியில்

சிரிக்க வந்த துவக்கல்லவா உனது.

அப்படித்தான் நம்பினோம்

எழுபத்தியிரண்டு நாட்களில்

துவக்குகளின் மொழியென்பது

பொதுவென்ற பாடத்தை

நீயும் கற்றுத் தந்தாய்

எமது போர்க் கால நீட்சியில் எத்தனையோ அனுபவங்களையும், அக்கிரமங்களையும் அனுபவித்தபின்னும் கலை இலக்கிய வெளிகளில் கருத்துப் பரிமாற்றங்கள், நிகழவில்லை. முன் வைக்கப்பட்ட (படும்) கருத்துக்களும் அனுபவங்களும் கூட கட்சி, குழு, மதம், சாதி போன்ற காரணிகளால் நிராகரிக்கப்படுகின்றன, சிலரது அலட்சியப்படுத்தப்பட்டு இப்படியான படைப்புகள் வெளிவராதது போல மௌனப்பாசாங்கு செய்து விடுகிறார்கள். சில கவிதைகள் சொல்லாமலே மரணித்தும் போகின்றன. இப்படியான காலங்களையும் காரணங்களையும் பிராய்ந்தெறியும் காலத்துள் பெண் கவிஞர்கள் புறப்பட்டுள்ளனர். கவிஞர் பானுபாரதியின் கவிதைகள் பல இதற்குச்சான்று சொல்கிறது.

கைக்குண்டு தேடுவதாய்

முலைகளைத் தடவும்

மானங்கெட்ட பிழைப்பு

ஏ! பாரதமே

எல்லைகள் தாண்டி

வெண்கொடி நாட்டுவதிருக்கட்டும்

முதலில்

உன் புத்திரனின் வேகம் தணியுமட்டும்

பிசைந்து உருட்டி விளையாட

திரண்ட உன் முலைகளை

அவர்களுக்குக் கொடு

எவ்வித மறைப்பும் இல்லாமல் எடுத்துக்கொண்ட பொருளை நேரடியாகவே நிகழ்வுக்கு கொண்டு வந்திருக்கிறது கவிதை. கட்டுடைத்து விடுதலை செய்திருப்பது சொற்களை மட்டுமல்ல. புதைத்து வைக்கபட வேண்டிய ரகசியங்களென சீழ்பிடித்து போகவிட்ட சமூகத்தின் ரணங்களையும்தான். இவைகளைக் கிண்டி ஆறப்போடும் இப்படியான மருத்துவச்சிகளின் மூலிகைக் கவிதைகள் இன்று முளைத்திருக்கின்றன.

எதிரியென்றீர் துரோகியென்றீர்

எட்டப்பர் கூட்டமென்றீர்

தெருவிலே இழுத்துவந்து

உயிரோடு கொள்ளியிட்டீர்

சோனியென்றீர்…..

……..

எங்கள் வேரிலும் விழுதிலும்

நீங்களிட்ட தீ

நின்றெரிவதைப் பாருங்கள்

ஒரு இனத்தையே சவப்பெட்டியிலிட்டு

இறுதி ஆணியையும் அறைந்துவிட்டு

பாசாங்கு என்ன வேண்டிக் கிடக்கிறது.

இறுதியாக இந்தக் கவிதையைப் பற்றி எனக்குச் சொல்ல ஏதுமில்லை. இதற்குக் குறிப்பெழுதினால் எனக்கும் ஒரு பெயர் வைப்பீர் என்ற பயமல்ல, ஒதுக்கிவிடுவீர் என்ற ஏக்கமுமல்ல. ஏனென்றால் இப்படியான ரணம்கொட்டும் பட்டங்களை கவிஞர்கள் கலைஞர்கள் அல்ல சகமனிதர் கூட கடந்து வந்து பல நாட்கள் ஆயிற்று.

இது உயிரில் வலி. உணரத்தான் முடியும்.

தொடரும்….

Exit mobile version