இந்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக வரைவு மசோதா 2021-க்கு எதிராக கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா முழுக்க உள்ள கடலோரங்களை தனியர்களுக்கு தாரை வார்க்கவும், கடலோரங்களில் வசிக்கும் மக்களை எவ்வித முன் அனுமதியின்றி வெளியேற்றவும், துறைமுகத் திட்டங்களுக்கு கருத்துக் கேட்புக் கூட்டமின்றி கடல் வளங்களை தாரை வார்க்கவும் என இந்த மசோதா வழி செய்கிறது. இந்தியாவில் அதானியின் துறைமுகத் திட்டங்கள் அதிக அளவு செயல்படுத்தப்படுகிறது. சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானியின் துறைமுகத் திட்டம் தென்னிந்தியாவின் பெரிய தனியார் துறைமுகத் திட்டமாக உள்ளது. இத்திட்டத்திற்காக கடலோரம் வழியாக பிரமாண்டமான சாலைகள் அமைக்கும் திட்டமும் உள்ளது.
இத்திட்டத்தால் சுமார் 40 கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் வரவிருக்கும் பல திட்டங்கள் தமிழக கடலோரங்களில் தனியார்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாக உள்ள நிலையில், மத்திய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதா, சிறு துறைமுகங்களில் மாநில அரசுகளின் நீண்டகால உரிமைகளை பறிக்கிறது எனக்குறிப்பிட்டு இந்த மசோதாவுக்கு எதிராக ஒன்றுத்திரள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உழவர்களின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுவதால் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என கூறினார்.