தமிழ்நாட்டில் பாஜக காலூன்றாது என நம்பிக் கொண்டிருந்தோம். கடந்த காலங்களில் திமுக அதிமுக இரு கட்சிகளுமே பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிகள்தான். ஆனால், அப்போது பாஜக சில சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடிந்ததே தவிற தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. காரணம் பாஜக என்பது தனி அமைப்பு அல்ல மக்கள் ஆதரவு பெற்ற பெரிய அரசியல் அமைப்பும் அல்ல, ஆனால் ஆர்.எஸ்.எஸ் மக்கள் ஆதரவு பெற்ற சக்திவாய்ந்த இயக்கமாக இந்தியாவில் இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல அமைப்புகளில் ஒன்றுதான் பாஜக பாசிஸ்ட் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெகுசன அமைப்புதான் பாஜக.கடந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் சமூக ரீதியிலும்தமிழ்நாடு அரசு இயந்திரத்திற்குள்ளும் ஆழமாக ஊடுறுவி உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் ரெய்ட் ஒன்றின் மூலம் மாற்றப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் கொண்டு வரப்பட்டதுதான் முதல் ஆர்.எஸ்.எஸ் நடத்திய ஆபரேஷன் அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியை மிரட்டியே ஆர்.எஸ்.எஸ் அரசுத்துறை முழுக்க ஊடுறுதி விட்டது.
இது தொடர்பாக சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய ஆய்வாளர் ஜெயரஞ்சன் தன் வேதனையை பகிர்ந்துள்ளார்.
“சமூகநீதி பேசக்கூடியவர்கள் இன்னும் அதிகமாக வேலை செய்யவேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது. நான் கடந்த ஆறு மாதமாக நிர்வாகத்துக்குள் இருந்து வரும் நிலையில் அதை உணர்கிறேன். இதுபற்றி விரிவாக உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், உண்மை.அவர்களின் பிடியில் இருந்து மீள்வதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்களும் மீளலாம் என்று என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் குழிகளை வெட்டிக் கொண்டே இருக்கிறான். ஒரு ஸ்டெப் எடுத்து வச்சோம்னா அடுத்து எங்க குழிவெட்டிருக்கான்னு தெரியமாட்டேங்குது. இந்த பத்து வருடங்களில் அவர்களின் வலை அந்த அளவுக்கு நுட்பமாகவும், ஆழமாகவும் விரிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்க அது தெரிவதே இல்லை. அந்த வலையை அறுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அது சாமானியமல்ல. ஏன் அப்படினு கேட்டீங்கன்னா, நமக்குனு இருக்கும் அதிகாரம் ரொம்பக் குறைவு. இப்ப தமிழ்நாட்டுல மட்டும் நமக்கு அதிகாரம் ஓரளவுக்கு இருக்கு. ஆனா, இந்த அதிகாரத்தின் இன்னொரு பகுதி, பல அங்கங்கள் அவர்களிடம் இருக்கிறது, டெல்லியில் செகரட்டரியேட் என்று ஒன்று இருக்கிறது. அவர்களோடு சேர்ந்துதான் நாம் இத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. நாம் இங்கே வேலை செய்யும்போது அவர்கள் அங்கிருந்து போடக் கூடிய உத்தரவுகள், திட்டங்களை எல்லாம் எதிர்த்து இடைவிடாது போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டுவிட்டார்கள். அதுமட்டுமல்ல..! முன்பெல்லாம் அவர்களின் கொள்கைகளை மறைமுகமாக திணிப்பதாகக் கருதினோம். இப்போது மறைமுகமெல்லாம் கிடையாது, ஓப்பனா,நேரடியா இதை தான் செய்யணும்னு சொல்கிறார்கள். ரிவ்யூக்கு வர்ற அதிகாரிகளாக யாரை அனுப்புகிறார்கள்னு கேட்டீங்கன்னா சாஸ்திரிகளையும் மேஸ்திரிகளையும் அனுப்பறாங்க. அவர்கள் என்ன கேட்கிறாங்கன்னா, ‘பெரியார் பத்தியும் தமிழ் பத்தியும் எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க. இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? அர்த்த சாஸ்திரம் பத்தி ரிசர்ச் பண்ணுங்கனு நேரடியாக நம்ம ஊருக்கே வந்து சொல்றாங்க. அந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது. இப்படி பல்கலைக்கழகங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள், பாடத் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். நிதித் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். இப்படி பல தளங்களில் அவர்கள் வேர் விட முயற்சி செய்கிறார்கள். பேராசிரியர் ஜெயரஞ்சன், (பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் ‘சூடு’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் பேசியிருக்கிறார் அவர்.