எப்படி கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை நூல்களை நாங்கள் எல்லாம் ஒரு வரி விடாமல் கற்றோம்? கற்கும் வெறி எப்படி ஏற்பட்டது? இப்படித்தான் இவர்கள் பின்பற்றும் மார்க்சியத் தத்துவத்தைக் கற்றோம். இதன் ஒரு பகுதியாகவே இவர்களின் கருத்துகளைச் செரித்துக் ண்டோம். அதனாலேயே அக்கருத்துகளைத் தாண்டிச் சென்றோம். இது இவர்களுக்கு அவமானம் அல்ல. பெருமை. இனி மார்க்சியக் கவர்ச்சி, அக்காலத்திலிருந்தது போல் தொடருமா எனத் தெரியவில்லை. சோவியத் யூனியன் மறைந்த பிறகு தத்துவத்தின் மீதான பொதுக் கவர்ச்சி மறைந்துவிட்டது. எனவே எங்கள் தலைமுறையைப் போல் மீண்டும் ஒரு தலைமுறை கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலையை வெறியோடு படிக்குமா? படிக்காதென்றே தோன்றுகிறது. தமிழவன்
உயிரோசை : 09.03.2009
இன்றைய சிங்கள சமூகம் பற்றி சிவத்தம்பி
1
மார்க்சியத்தின் மீதான கவர்ச்சி மறைந்துவிட்டது எனும் தமிழவன், கைலாசபதி சிவத்தம்பி நா. வானமாமலை முன்வைத்து மார்க்சிய வகைமாதிரியைத் தாம் தாண்டிச் சென்றோம் என்றும் மீண்டும் ஒரு தலைமுறை கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலையை வெறியோடு படிக்குமா? படிக்காதென்றே தோன்றுகிறது என்றும் பிரகடனப்படுத்துகிறார். துரதிருஸ்டவசமாக நா.வானமாமலை கைலாசபதி சிவத்தம்பி போன்றோரின் நூல்கள் தற்போது மீள் பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தலைமுறை எஸ்.வி.ராஜதுரை, தமிழவன், போன்றவர்களின் நூற்களுடன் சேர்த்து முன்னவர்கள் மூவரதும் நூல்களையும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. வரலாறு எழுதுதல், பௌத்தம், வர்க்கம், தேசியம் போன்றவை குறித்த விவாதங்களில் இவர்களது எழுத்துக்களுக்கு இன்றும் பொருத்தப்பாடுகள் இருக்கவே செய்கிறது.
அல்தூஸருக்கும் ழான் பவுல் ஸார்த்தருக்குமான பொதுக் கவர்ச்சியை இன்றைய பிரெஞ்சு சமூகத்தில் போய் விசாரித்தால், தமிழவன் சொல்கிற மாதிரி அவர்களை இப்போது யாரும் படிக்கப் போவதில்லை என்றுதான் தோன்றும். மட்டுமன்று, மார்க்சியத்தைக் கடந்துவிட்டதாக தமிழவன் கருதும் அமைப்பியலுக்கும் பின்நவீனத்துவத்திற்கும் இதுதான் கதி. கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்திலிருந்து பல ஆண்டுகள் தமிழ் கற்பித்த காரணத்தினாலும், அங்கு நிலவிய சோசலிச சமூகத்தில் வாழந்துபட்ட அனுபவம் கொண்டதாலும், சோவியத் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியின் பின் மார்க்சியத்தின் மீதான பொதுக்கவர்ச்சி மறைந்துவிட்டதாகத் தமிழவனுக்குத் தோன்றலாம். ஆனால் அது வெறுமனே தோற்றம். நிஜமில்லை என தமிழவனுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
முன்னைய மூவருக்கும், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கும் தமிழவனுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. தமிழவன் தவிர பிற ஐவரும் வெளிப்படையாகத் தமிழ் அரசியல் நிலைபாடுகளை முன்வைத்து எழுதியும் பேசியும் நடைமுறைகளில் பங்கெடுத்துக் கொண்டும் இருந்தவர்கள. இன்றைய தமிழ் அறிவுஜீவிகளைப் பீடித்திருக்கும் ‘இலக்கிய முதன்மைவாதத்துக்கு’ ஆட்பட்டவர் தமிழவன். இலக்கிய விமர்சனத்தின் வழிதான் அவர் அமைப்பியலை வந்தடைகிறார். வெளிப்படையான அரசியல் சார்ந்த எழுத்துக்கள் அவரிடமிருந்து வந்தது இல்லை.
தமிழவனின் இரு முக்கியமான நூல்கள் என நான் கருதுவது அவருடைய ‘ஸ்டிரக்சுரலிசம்’ மற்றும் ‘படைப்பும் படைப்பாளியும்’ எனும் இரு நூல்கள்தான். தன்னிலை – அமைப்பு – மனித பிரதிநிதித்துவம் போன்றவை குறித்த தமிழவனின் பார்வைகளை முன்வைத்தவையாக இந்த இரு நூல்களும் இருந்தன. அமைப்பும் மனித உயிர்களும் குறித்து தமிழவன் இப்போது எழுந்தமேனியாக எழுதிக் கொண்டு போகிற உயிரோசை இணைய இதழ் கட்டுரைகளுக்கான தடங்கள் தமிழவனின் இந்த இரு நூல்களிலும் இருக்கிறது. நடந்திருக்கும் ஒரே மாற்றம் தமிழவன் இப்போது இவைகளை அரசியலுக்குப் பொறுத்திப் பார்த்து எழுதுகிறார் என்பதுதான்.
2
மார்க்சியத்தைக்; கடந்து செல்தல் என்பதனை தமிழ்ச்சூழலில் மூன்று கோட்பாட்டாளர்கள் முன்வைத்தனர். அமைப்பியலை ஆரத் தழுவிக் கொண்டதன் வழி தமிழவன் அதனை முன்வைத்தார். நவீனத்துவ யுகத்தின் பிற இஸங்கள் போலவே மார்க்சியமும் ஒரு பெருங்கதையாடல் என லியோதார்த்தை ஆரத் தழுவியதன் வழி தலித்தியரான ரவிக்குமாரும் பன்மைத்துவக் கோட்பாட்டாளரான அ.மார்க்சும் அதனை முன்வைத்தனர். கட்சி சார்ந்த வகையில் இயங்கிய கைலாசபதி சிவத்தம்பி நா.வானமாமலை போன்றவர்களின் கருத்துக்களை இவ்வாறு தான் அமைப்பியலின் வழியிலும் பின்நவீனத்துவக் குறுங்கதையாடல்களை முன்னிறுத்திய வழியிலும் இவர்கள் கடந்தார்கள்.
மூலவர்கள் மூவர் முன்வைத்த வகை மார்க்சியத்தைக் கடந்த, பின்னவர்களிலிருந்தும் விலகிய நிலையிலும், விமர்சன மார்க்சியத்தை முன்னெடுத்த பிற மூவரும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர். ஓருவர் எஸ்.வி.ராஜதுரை. பிறிதொருவர் கோவை ஞானி. இன்னொருவர் எஸ்.என்.நாகராஜன். இவர்கள் அமைப்பியலையும் பின்நவீனத்துவத்தையும் அறிந்தவர்களே ஆயினும் மார்க்சியம் கடந்தவர்கள் என இவர்கள் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை. இவர்கள் மூவரையும் பரந்த பட்ட அர்த்தத்தில் தமிழகச் சூழலினான விமர்சன மார்க்சியர்கள் என நாம் அடையாளப் படுத்த்திக் கொள்ள முடியும்.
தமிழவன் குறிப்பிடுகிற ‘தாண்டிச் செல்வது’ எனும் சொற்பிரயோகம் மிகுந்த பிரச்சினைக்குரிய ஒரு சொற்பிரயோகம். கடந்து செல்வது எனும் சொற்பிரயோகம் ரவிக்குமாரினால் தமிழில் மார்க்சியம் கடந்த சிந்தனைப் போக்காக பின்நவீனத்துவம் – குறிப்பாக போத்ரிலார் வகை சிந்தனையமைப்பு – தமிழ்ச்சூழலில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
மார்க்சியத்தைக் கடந்துசெல்வது, மார்க்சீயத்துக்குப் பிந்திய போன்ற சொற்றடர்களே இன்றைய சூழலில் அபத்தமான சொற்றொடர்கள். மார்க்சிய மரபினுள் நடந்து வந்திருக்கும் விவாதங்கள், வேறுபட்ட பார்வைகளை முன்வைத்த மார்க்சியர்களை அறிந்தவர்கள் மார்க்சியம் கவர்ச்சியிழந்துவிட்டது என சினிமா நடிக நடிகையிரைப் பாரத்துச்சொல்கிற மாதிரிச் சொல்ல மாட்டார்கள். மறுபடி மறுபடி மார்க்ஸ் சிலரால் கல்லறைக்கு அனுப்பப்பட்டாலும் அவர்களே மறுபடி மார்க்ஸின் மறுவருகை என்றும் எழுதுகிறார்கள். அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியையொட்டி அமெரிக்க ஐரோப்பியப் பத்திரிக்கைகள் அப்படித்தான் எழுதின.
சென்ற நூற்றாண்டில் இறுதியில், இரண்டாயிரம் ஆண்டுகளில் தோன்றிய தனித்ததொரு சிந்தனையாளர் என கார்ல் மார்க்ஸை பிரித்தானிய ஒலிபர்ப்புக் கூட்டத்தாபனம்தான் அறிவித்தது. இன்றும் ஐரோப்பிய அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் செல்வாக்குள்ள சிந்தனை முறையாக மார்க்சீயம்தான் திகழ்கிறது. இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான சோசலிசம் பேசுகிற நோபாளத்தின் பிரசன்டாவுக்கும் வெனிசுலாவின் சாவேசுக்கும் மார்க்சியம்தான் இன்றும் உந்துதலாக இருக்கிறது.
3
மார்க்சியத்துனுள் நடந்து வந்திருக்கிற பல்வேறு விவாதங்களைக் கற்றுத் துறைபோகியவர் மாதிரி மார்க்சியம் கவர்ச்சியிழந்து போய்விட்டது என்கிறார் தமிழவன். தமிழவன் இதுவரை எழுதியிருப்பவை அனைத்தும் ‘காண்டினென்டல் தியரி’ என ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறியப்படுகிற பிரெஞ்சுக் கோட்பாட்டைச் சார்ந்த எழுத்துக்கள்தான். இலக்கியம் – கோட்பாடு – படைப்பாளி என்கிற சர்ச்சைகளுக்கு அப்பால் உலகப் புரட்சிகர அனுபவங்கள் குறித்தோ, விடுதலை அரசியல் அனுபவங்கள் குறித்தோ தமிழவனிடமிருந்து எந்தவிதமான எழுத்துக்களும் வந்ததில்லை.
சோவியத் மார்க்சியம், சீன மார்க்சியம், குவேரா வகையிலான மூன்றாம் உலகுக்கான மார்க்சியம், மேற்று ஐரோப்பிய மார்க்சியம், கிழக்கு ஐரோப்பிய மார்க்சியம், அதனது நெருக்கடிகளைப் பேசிய அல்தூஸரின் மார்க்சிய அமைப்பியல், ஸார்த்தரின் இருத்தலியல் மார்க்சியம் என பன்முகப் போக்குகளையும் விவாதப் பிரச்சினைகளையும் கொண்டது மார்க்சிய மரபு. இதுவன்றி பல்கலைக் கழக வட்டாரங்களில் கலாச்சாரப் படிப்பத்துறையில் மிகப்பெரும் ஆய்வுகளைத் தூண்டிக் கொண்டிருப்பவர் அந்தோனியோ கிராம்ஸி. இது கோட்பாட்டு தளத்திலான மரபு. பிரெஞ்சுக் கோட்பாட்டுக்கு அப்பால் எதனைப் பற்றியும் எப்போதும் எழுதாத தமிழவன், திடுமென மார்க்சியம் பொதுவாகக் கவர்ச்சியிழந்துவிட்டது எனச் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.
கலாச்சாரம் தவிர, அதிலும் குறிப்பாக இலக்கியம் அல்லாது பிறவெளிகளில் கால்வைத்தவர் இல்லை தமிழவன். ஈழப்பிரச்சினையை முன்வைத்து தீடிரென்று அரசியல் களத்தில் பிரவேசித்திருக்கம் தமிழவன், எல்லா அமைப்பியல்வாதிகளும் எதிர்கொள்ளும் அதே இடியாப்பச் சிக்கலில்தான் இருக்கிறார். மொழிக்கு அப்பால் அல்லது மொழி முதன்மைவாதத்துக்கு அப்பால் அவர்கள் நகர்வதில்லை. குறிப்பாகத் தமிழவன் பேசும் தேசிய இனப்பிரச்சினை என எடுத்துக் கொள்வோம், மொழி பண்பாடு நிலம் கூட்டுமனநிலை என்கிற அடையாளங்களை வைத்து மட்டும் தேசிய இனப்பிரச்சினை சாரந்த நெருக்கடிகளைப் புரிந்து கொள்ள முடியாது. இன்று ஈழப்பிரச்சினையின் நெருக்கடிகளையும் இந்த நோக்கிலிருந்துதான் அணுகமுடியும்.
புரட்சிகர இயக்கங்களின் பின்னடைவுக்கான காரணத்தை ஸ்டாலினியத் தலைமை, இலக்கும் வழிமுறையும், ஜனநாய நெறிமுறைகள் குறித்து ஏற்பட்டிருக்கும் படிப்பினைகள், மனித உரிமைகள் குறித்த அக்கறைகள், முரண்பாடுகளைக் கையாளுவதில் பாவிக்கப்படும் அரசியல் தந்திரோபாயங்கள் என பின்புரட்சிகர சமூகங்களின் அனுபவங்கள், பின்சோவியத் அனுபவங்கள் நமக்கு முன் இருக்கிறது. கிழக்கு திமோரும் நேபாளமும் வெனிசுலாவும் அதைப் புரிந்து கொண்டிருக்கின்றன. ஈழவிடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளுக்கு இத்தகைய புரிதல் இல்லை. பொலிவியாவிலும் வெனிசுலாவிலும் அவர்களுக்கு தற்போது குவெராவின் ‘போக்கோ தியரி’ தேவைப்படவில்லை.
4
ஈழப் பிரச்சினை குறித்து அணுகும்போது தமிழக மார்க்சியர்களும் பின்நவீனத்துவவாதிகளும் அமைப்பியலாளர்களும் இவைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டே தீர வேண்டும். தமிழகச் சுழலில் இன்றைய ‘நவீன’ உலகக் கோட்பாடுகளை உரசிப் பாரத்துக் கொள்ள ஒரு தருணம் வாய்த்திருக்கிறது. விடுதலைப் போராட்டங்களின் தலைமை குறித்தும் பல்வேறு குழுக்களின் நடத்தை குறித்தும் பேசுகிற பின்நவீனத்துவரான அ.மார்க்ஸ, ஈழப் பிரச்சினையில் சிங்கள-இந்திய அரசுகளின் தன்மை பற்றிப் பேசுவதில்லை. மறுதிசையில் கொலைகள் போலவே தற்கொலைகளையும் அமைப்பியலாக்கம் செய்வதன் மூலம் அரசியல் செய்வது குறித்துப் பேசுகிறார் தமிழவன். விடுதலைப் புலிகள் குறித்துக் கருத்துச் சொல்வதை விடவும் ‘நமது நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நமக்கு நிறைய உள்ளன’ என்கிறார் எஸ்.வி.ஆர். அமைப்பியலாளர்கள் பின்நவீனத்துவவாதிகள் விமர்சன மார்க்சியர்கள் என அனைவருமே ஈழப் பிரச்சினையிலிருந்து வெகுதூரத்திலான நிலைபாட்டையே ஈழவிடுதலை குறித்து மேற்கொள்ள வேண்டிய துரதிருஸ்டமான நிலைமையை ஈழவிடுதலைப் போராட்டம் சென்று அடைந்திருக்கிறது.
தமிழவன் இன்று எழுதுகிற கட்டுரைகளில் பெரும்பாலுமானவற்றில் ஈழவிடுதலையின் பாலான தமிழக மார்க்சியர்களின் அணுகுமுறைகள் குறித்த விமர்சனமாகவே இருக்கிறது. பொதுவாக தேசிய இனப்பிரச்சினை குறித்த விவாதங்களை உலக அளவிலான கோட்பாட்டு விவாதங்களைச் சுவீகரித்தபடியிலான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டிய தமிழகச் சூழலிலான தேவைகள் இருக்கிறது. இதற்கு மிக நீண்ட மார்க்சிய மரபும் இருக்கிறது.
மனித விமோசனத்தைப் பேசும் மார்க்சியர்களுக்கு தேசியம் என்பது ஒரு இடைநிலையிலான ஜனநாயக்துக்கான கோர்க்கைதானேயொழிய அதுவே இலக்காக இருப்பதில்லை. இந்த இடைநிலையைக் கூட ‘கற்பனாவாதம்’ எனும் அளவிலான கநற்பிதமாகக் காண்கிறார்கள் தமிழகப் பின்நவீனத்துவவாதிகள். விமர்சன மார்க்சியர்கள் ‘மெய்மைநிலைகளின் அடிப்படையிலான கற்பிதம்’ எனக் காண்கிறார்கள்.
தேசிய இனப் பிரச்சினை குறித்த தீவிரமான விவாதங்களில் வெகுமக்கள் அளவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை. ஆனால், இந்தப் போக்குகளை முன்வைத்து பொதுவாக மார்க்சியம் கவர்ச்சியை இழந்துவிட்டது எனத் தமிழவன் பிரகடனப்படுத்துவது அவசரகோலத்திலான சொற்பிரயோகங்களாகவே இருக்கும். தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான தமிழக வெகுமக்களின் ஆதரவு இருப்பது தெளிவு. பதினேழுபேரின் தற்கொலைகளே சான்றாக இருக்கிறது.
ஆனால், இந்திய அரசியல் கலாச்சாரத்தில் அந்தர்பல்டி அடித்துக் கொண்டிருக்கிற தொல்.திருமாவளவன் வை.கோபால்சாமி அல்லது மருத்துவர் ராமதாஸ் போன்ற வாய்வீரர்கள் எவரும் இந்த அரசியலுக்கான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான திராணியற்றவர்கள். இவர்களுக்கு தேசிய இனப்பிரச்சினையும் ஏகாதிபத்தியமும் குறித்த எந்தப் பார்வைம் இல்லை.
இந்திய இந்துத்துவ அரசியலும் ஈழப்பிரச்சினையும் குறித்த தெளிவுகளும் இவர்களுக்கு இல்லை. பிற்காலத்திய நடவடிக்கைகளில் இவர்களிடமிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் தூரம் பாவிக்க வேண்டிய நிலைமை வந்திருப்பதை எவரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தொடர்பான இந்திய அறிவுஜீவிகள் அல்லது இந்திய அரசியலாளர்களின் அணுகுமுறை, விடுதலைப் புலிகள் தோற்றுவித்திருக்கிற அரசியல் நெருக்கடிகளையும் தாண்டி அவர்களுக்கான தமிழக ஆதரவாகத் திரள்வதற்கான வாய்ப்பு சாத்தியத்தில் இல்லை.
இந்த அரசியல் நெருக்கடிகளை வெறுமனே மொழி, இலக்கியம், அமைப்பு, கூட்டுமனநிலை என்கிற சட்டகங்களை வைத்துமட்டும் புரிந்து கொள்ள முடியாது. வெகுமக்கள் உணர்வுகளை அரசியல் பிரதிநித்துவ மொழியாக மாற்றுவது என்பதுதான் மிகப்பெரிய சவால். இந்தச் சவாலை இன்றளவிலும் நடைமுறையில் கடந்து போய்க் கொண்டிருப்பவர்கள் மார்க்சியர்கள்தான். உலக அளவில் இன்றளவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமை வாய்ந்த தத்துவ நிலைபாடாக, ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரம் பற்றிய பகுப்பாய்வுக் கருவியாக, எதிர்ப்பு அரசியலின் கூர்முனையாக இருப்பது மார்க்சியம்தான்.
இந்த மெய்ம்மையை அடைவதற்கு ஒருவர் இலக்கிய முதன்மை தாண்டிய வெளிகளில் சஞ்சரிக்க வேண்டும். இவர்கள் ஒரு போதும் மார்க்சியம் கவர்ச்சியிழந்துவிட்டது என்று சொல்லமாட்டார்கள். ஆப்ரிக்கக் கலாச்சாரக் கோட்பாட்டாளரான ஸ்டூவரட் ஹால் போன்றவர்கள் இவ்வகைகயில்தான் மார்க்சியத்தைக் கடந்துசொல்ல முடியாது, அதனோடு எவரும் சதா அதனோடு உரையாடல் மேற்கொள்வதும் தவிர்க்கவியலாது என்று சொல்கிறார்கள். கட்டுடைப்பாளரான தெரிதா அத்தகைய உரையாடலைத்தான் தனது ‘மார்க்ஸின் ஆவிகள்’ நூலில் மேற்கெண்டிருந்தார். தெரிதாவின் ஆவியருவில், மதிப்பிற்குரிய தமிழவன் அவர்களே, நடைமுறையில் உங்களை இப்படித்தான் மார்க்சியம் கடந்துசென்று கொண்டிருக்கிறது.