Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தொழிலுக்குச் செல்லாத இராமேஸ்வர மீனவர்கள், ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் இருந்து 646 படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் சிலர் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தவேளை, இலங்கை கடற்படையினர் 7 படகுகளில் அங்கு வந்தனர்.

அவர்கள் இராமேஸ்வரம் மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று கூறி விரட்டியுள்ளதாகவும் பின்னர், மீனவர்கள் மீது கற்களையும் போத்தல்களையும் எடுத்து சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் உயிருக்கு பயந்து அங்கு இருந்து படகுகளில் கரை திரும்பினர். மேலும், இலங்கை கடற்படையினர் கற்கள் வீசியதில் சில மீனவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த மீனவர்கள் இது குறித்து அதிகாரிகள் யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதால் அச்சம் அடைந்துள்ளதாகவும் இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version