Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஓரினச் சேர்க்கையைச் சரியாக அணுகுதல் : ரஃபேல்

நீங்கள் ஒரு ஓரினச் சேர்க்கையாளரா என்ற நேர்காணல் கேள்விக்காக ஒரு தமிழ்ப் படைப்பாளி கோபப்பட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஓரினச் சேர்க்கை (Homosexual) பற்றிய பதிவுகள் செய்தியாகவேகூட தமிழ் அறிவு சீவிகளின் ஏடுகளில் இடம் பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
இலங்கை போன்று இன்னும் பல நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர் குறித்த கனிவுப் பார்வையை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கமாட்டாது என்பது நிச்சயம்.
 
சில நாடுகள் அய்.நா (UN) அகதிகளுக்கான சாசனத்தில் எவ்வாறு கையெழுத்திடாமல் இருக்கின்றன அல்லது அகதிகளுக்கான சாசனத்தில் கையெழுத்திட்டும் அவற்றுக்கான உண்மை நடைமுறையைக் கைக்கொள்ளாமல் இருக்கின்றன. அதே போன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுக் கண்டும் காணாமல் இருக்கின்ற நிலையும் ஏற்படலாம். (இலங்கை தமிழ் அகதிகளை (Tamil Refugee) இந்தியா கையாழும் வகை மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு)
 
அதே போன்று ஓரினச் சேர்க்கை பற்றிய இந்த ஒப்பந்தத்திலும் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
 
ஓரினச் சேர்க்கை என்பதையும் சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதையும் (Pedophilia) பிரித்துப்பார்க்கவேண்டும். இரண்டையும் குழப்பிப் பார்ப்பதும் நடைமுறையில் பலவேளைகளில் உள்ளது.
 
ஓரினச் சேர்க்கையாளர் (Homosexuals) என்போர் தங்கள் பால்நடவடிக்கைக்கான தெரிவாக தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவரை நாடுவர். இது வன்முறையால் அமைவதல்ல. நட்பு வகையிலும் பின்னர ;உறவு வகையிலும் பரஸ்பர கூட்டுச் செயற்பாடாக மலர்கிறது. ஆண்களானால் ஆண்களையும் பெண்களானால் பெண்களையும் நாடுகையில் அது ஓரினச் சேரக்கை என அழைக்கப்படுகிறது.
 
கனடாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓரினச் சேர்க்கையாளரின் திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில், கடந்த கிழமையில் ஓர் இந்தியத் தாய்மூலம் குழந்தையைப் பெற்றுத் தத்தெடுத்துக்கொண்ட இஸ்ரேலிய ஆண் ஓரினச் சேர்க்கையாளரின் படம் செய்தி ஏடுகளில் வந்திருந்தது.
 
ஆனால் சிறுவர் மீதான பால்வன்முறையைச் செய்வோர் அவர்கள் தெரிவாக ஓரினச் சேர்க்கையை எடுத்ததாளுபவரல்லலர். அவர்கள் பால் வக்கிர மனநிலை (PERVERSION) உடையோர். சிறுவர்களுக்கு வளர்ந்த ஆண் அல்லது பெண்களுடன் பால் செயற்பாட்டில் ஈடுபட எந்தத் தேவையும் இல்லை. சிறுவர்களை கட்டாயப்படுத்தித் தங்கள் இச்சைகளுக்கு ஆட்பட வைக்கும் செயலே சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல் என்னும் வகையில் அடக்கப்படுகிறது.(ஆங்கிலத்தில் PEDOPHILIA )
 
அண்மையில் யாழ்ப் பகுதியில் இருந்து வந்த செய்திகள் இந்தக் குழந்தைகள் மீதான பால் வன்முறை குறித்த கவலையைத் தருவனவாக உள்ளன.
 
யாழில் உள்ள காப்பரண்களில் இருக்கும் ராணுவத்தினர் அவ்வழியாகத் தொடர்ந்து பள்ளி செல்லும் சிறார்களை அடையாளம் கண்டு வேறுபடுத்தி மிரட்டி தனிமைப்படுத்தி பால்சார் வன்முறைக்கு உள்ளாக்குவது தெரியவந்துள்ளது.
 
கைவிடப்பட்ட வீடுகளும் கண்காணிப்பற்ற வீதிகளும் துப்பாக்கி முனையும் இவ்வன்முறை தொடர்வதற்கும் ஏற்படுவதற்கும் வாய்ப்பாகவுள்ளது.
 
பசியிலும் பஞ்சத்திலும் இருக்கும்; குழுந்தைகளிடம் இனிப்புக்களும் உணவுகளும் விளையாட்டுப் பொருட்களும் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பால்வன்முறைபுரியும் ராணுவத்தினர் நடுவில் இந்தச் சிறுவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.
 
ஏற்கெனவே எம்மிடம் இருக்கும் குடும்ப நடைமுறையின்; கண்டிப்பான பெற்றோர் என்ற நிலைப்பாடு குழந்தைகளையும் சிறார்களையும் இந்தத் தங்கள் மீதான பால்வன்முறைபற்றிக் கதைக்கவிடாது தடுக்கிறது. அதே போல கொடுமையானவும் கண்டிப்பான ஆசிரியர்களைக் கொண்டதுமான எமது கல்வி முறை. ஆசிரியர்களுடனும் கதைக்க முடியாத நிலை எமது சிறுவர்களுக்கு.
 
இராணுவத்தின் கொடுமைகள் போரின் அவலம் தரும் மன உளைச்சல் அனைத்தும் பொருளாதார இழிவினால் வரும் பாதிப்புக்களுடன் இந்தச் சிறுவர்களைத் தாக்குகின்றன.
 
இது ஒரு புறமிருக்க சிங்களப்பகுதியில் குறிப்பாக கொழும்பையும் அதனை அண்டிய காலி வரைக்குமான கடற்கரைப் பகுதிகளும் உலகம் முழுவதும் உள்ள பிள்ளைபிடி காரர்களால் (சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவோரால்) சொர்க்க பூமியாகக் கருதப்படுகிறது. (SRI LANKA IS A HEAVEN OF PEDOPHILIA) இந்த நிலையைக் கண்டும் காணாமல் இலங்கை அரசு தனது உல்லாசப் பயண வருமானத்துக்காக மூடிமறைத்துச் செயற்படுகிறது.
 
இலங்கை அரசின் கையெழுத்திட மறுப்பு என்பது இந்தச் சிறார் பால் வன்முறையின் மீதான உலகக் கவனம் தங்கள் மீது திரும்பிவிடக்கூடாது என்பதனாலும் உருவாகியிருக்கும் வாய்ப்பிருக்கிறது.
 
ஆப்கானிஸ்தானிலிருக்கும் கனடாவின் அமைதிகாக்கும் படையினரிடம் தற்போது ஓர் சிக்கல் எழுந்துள்ளது. ஆப்கானில் இருக்கும் கனடாவின் படையணி அமைதி என்ற பெயரில் (வழக்கம் போல – இந்திய அமைதிப்படை செய்தது போல) அங்குள்ள தலிபான் குழுக்களுடன் சண்டையில் ஈடுபட்டுவருகிறது. அமெரிக்கா போன்ற நேட்டோ கூட்டாளிகளால் இந்தப் போரில் கனடா இழுத்துவிடப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் எழுந்திருப்பது இதுதான்.
 
ஆப்பகானில் அரசுசார் படைகளும் கனடியப் படையினருக்கான மொழி பெயர்ப்பாளர்களும் அங்குள்ள ஆப்கன் சிறுவர்களைக் கொண்டு வந்து (sodomize) கம்பிஅடிக்கையில் அதைக் கண்டும் காணாமல் இருக்கும்படிக்கு கனடாவின் கட்டளை அதிகாரிகள் தங்கள் கீழுள்ள இராணுவத்தினரை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
 
கனடாவில் சிறுவர்களைப் பால்வகைத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது தண்டனைக்குரிய அவமானத்துக்குரிய மிகப்பெரிய குற்றம்.
 
இந்நிலையில் கனடாவின் இராணுவ அதிகாரிகளின் இத்தகைய அறிவுறுத்தல் பெரிய கேள்வியாகியிருக்கிறது.
 
இதில் மற்றொன்றையும் பார்க்க வேண்டும். தலிபான்கள் கூடாதவர்கள் என்ற கோசம் வைத்தவர்கள் பலர் தலிபான்கள் பெண்கள் சிறுவர்கள் மீதான கடும் பண்பாட்டுத் தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற குற்றச் சாட்டுக்களையே வைத்தார்கள்.
 
தற்போது ஆப்கானில் ஆட்சியிலிருக்கும் கைப்பாவைகளும் அவர்களது கைப்பாவைகளும் செய்யும் இத்தகையை கொடிய வேலைகள் இந்த சனநாயகவாதிகளின் கண்களில் ஏன் படாமல் போனது ?
 
யாரோ ஒரு கனடாவின் இராணுவத்தினர் வந்து தங்கள் மேலதிகாரிகளின் முறையற்ற செயலைப்பற்றி சொன்னதன் விளைவாகத்தானே இந்தச் செய்தி வெளி வந்திருக்கிறது?
 
கனடா இது வரை சற்றேக்குறைய 100 வீரர்களைப் பலிகொடுத்திருக்கிறது. 2000 வீரர்கள் மட்டுமே அங்கு நிலை கொண்டுள்ளனர். ஆனால் லட்சக்கணக்கில் வீரர்களை கொண்டு அங்கு ‘அமைதிப் பணிபுரியும்” நாடுகளின் இராணுவத்தினருக்கு அங்குள்ளவர்கள் சிறுவர்களைக் கம்பியடிக்கும் இந்தப் பாதகம் தெரிவில்லையா? ஏன் அது வெளிப்படுத்தப்படவில்லை? என்பவற்றையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
 
இலங்கையில் தமிழர்களைக் கேட்கவே நாதியில்லை. பின்னர் அவர்களின் குழந்தைகளை சிறார்கள் பால் வன்புணர்வுக்கு உள்ளாக்கினால் யார் கேட்பது?
 
(எனக்கு நிச்சயமாகத் தெரியும் எனக்குத் தெரிந்த மக்களாட்சி நண்பர்களால் இது குறித்து வாய் திறக்கமுடியாது என்பது? இன்று அவர்களது ஒரே இலக்கு மக்களாட்சி தத்துவத்தினடிப்படையில் தேர்தலில் நின்று பாராளுமன்றத்திற்கு சென்று எமது குரலை ஒலிக்கவேண்டும் என்பதுதான்.)
 
ஓரினச் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு வரவேண்டிய அதேவேளை சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்தும் வகையில் அதுவும் குறிப்பாக இலங்கையில் நிறுத்தும் வகையில் கோரிக்கைகள் வைக்கப்படவேண்டும்.
 
மனித உரிமைகள் கண்காணிப்பகம் (human right watch)போன்றவை தங்கள் கவனத்தில் இதை எடுத்துக் கொள்ளவேண்டும். போரின் கொடுமை போதாது என்று இப்பாலியல் கொடுமையை ஏன் இந்தச் சிறுவர்கள் எதிர்கொள்ளவேண்டும்?
 
இலங்கை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்ததில் ஓரளவு சரியான தன்மையே தென்படுகிறது. இலங்கை கைச்சாத்திட்டபின் இரட்டைவேடம் போடாமல் நேரடியாகவே மறுத்திருக்கிறது. இதுதான் இலங்கை ! என்பது அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.
 
எவ்வாறு எயிட்ஸ் நோயையும் ஓரினச் சேர்க்கையையும் ஒன்றாக அடையாளப்படுத்தி குழப்பம் ஏற்படுத்தப்பட்டதோ அதே போல – அதன் மறுதலைபோல இலங்கையைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையையும் சிறவர்கள் மீதான பால்வன்முறையும் குழப்பிப் பார்க்கப்படுகிறது.
 
எவ்வாறு சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பாரிய குற்றமோ அதைவிடவும் பலமடங்கு குற்றச்செயலாக சிறுவர் மீதான பால்வன்முறை பார்க்கப்படவேண்டும்.
 
யுனெஸ்கோ-யுனிசெவ் (unesco – unicef)முதலான சிறவர்களுக்கான நல்வாழ்வு ஏற்படுத்தும் அமைப்புக்கள் கண்ணில் படவேண்டிய செய்தி இதுதான்.
 
இது இலங்கைக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் பொருத்தப்படவேண்டியது.
 
ஆப்கானில் தலிபான்கள் பண்பாட்டுக் குற்றவாளிகள் என்றால் பாரிய அளவில் நடாத்தப்படும் சிறுவர் மீதான வன்முறைக்காக தற்போதிருக்கும் ஆப்கான் அரசு அதைவிடவும் கொடிய குற்றவாளிகள்தான். தலிபான்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட உதவிகரமாக இருந்த பல பெண்கள் அமைப்புக்கள், மக்களாட்சி அமைப்புக்கள் இந்த சிறுவர்க்ள மீதான பால் சார் வன்முறைகளை கனடாவின் ஓர் ராணுவ வீரரின் மனச்சாட்சி பேசும் வரைக்கும் ஏன் குற்றமாக எடுத்து உலகுக்குச் சொல்லவில்லை.
 
அந்தக் குழந்தைகள் ஏழைக் குழைந்தகளாக இருந்ததனாலா?
 
ஆப்கானில் இருந்த இருக்கின்ற இந்த மற்றைய நாடுகள் (இங்கிலாந்து அமெரிக்கா அய்ரோப்பிய வட்டகை நாடுகள்…) எவ்வாறு சிறுவர்கள் மீதான பால் வன்முறையைப் பாரக்கின்றன? இதுவரை அந்த நாடுகளின் ஒரு இராணுவத்தினர்கூடவா கனடிய இராணுவத்தினர் கண்ட அந்தக் காட்சியைக் காணவில்லை? சிறுவர் பால் வன்முறைக்கு சாட்சியாகவில்லையா? அப்படியாயின் ஏன் அது வெளிவரவில்லை?
 
இலங்கை முதலாக எங்கு அரசுசார் வன்முறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லையோ அங்கு அனைத்து வன்முறைகளும் தலைவிரி;த்தாடும். அது அனைத்து அரசியல் சித்தாந்தங்களுக்கும் அனைத்து அமைப்புக்களுக்கும் புவிசார் இடங்களுக்கும் பொருந்தும்.
 
வரலாறு எத்தனை தடவைதான் எங்களுக்குப் பாடங் கற்றுத் தரவேண்டும் என எதிர்பார்ப்பது?

 

 

 

 

 

 

Exit mobile version