19.10.2014 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற மீரா எஸ். ஹரிஷின் ‘இலங்கையின் இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள்’ என்ற நூல் அறிமுக நிகழ்வில் எம்.எம்.ஜெயசீலன் (விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆற்றிய விமர்சன உரையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.
நவீன தொடர்பு சாதனங்களின் பெருக்கமும் அதன் உடன்விளைவான உலகமயமாதலும் மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. எல்லாச் சமூகங்களும் சொகுசான வாழ்வைத்தேடி அவசரகால நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தாரளமயமாதல் எனும் மேற்குலகின் வலைவீச்சில் சிக்கிப் பாரம்பரிய வளம்கொண்ட சமூகங்கள்கூட இன்று நுகர்பொருள் சமூகங்களாகச் சிதைந்து வருகின்றன. மேற்குலகம் நிகழ்த்திவரும் இப்பண்பாட்டுப் போரினால் மூன்றாம் உலகிலுள்ள ஒவ்வொரு சமூகக் குழுமமும் தம் சுய பண்பாட்டடையாளங்களை இழந்துவருவதோடு பெரும் வணிக ஊடகங்கள் பிரபல்யப்படுத்தும் ஆதிக்கப் பண்பாட்டை தமக்கானவையாக வரித்துக்கொண்டுவருகின்றன.
தமிழ்ச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பாதுகாத்தலும் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கையளித்தலும் காலத்தின் தேவையாகும்.
அவ்வகையில் மீரா ஹரீஷின் இலங்கையின் இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள் என்ற நூலின் வருகை வரவேற்கத்தக்கது. அத்தோடு ஒரு சாஸ்திரியக் கலைஞரான ஹரிஸ், சாஸ்திரியம் நிராகரிக்கிற – மறுக்கிற கிராமியக் கலைகள் தொடர்பான தேடலினை மேற்கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
என ஹரிஷுக்குள் எழுந்த தார்மீக வினாவே இந்நூலாக்கத்திற்கான முதல் தூண்டுதலாக அமைந்துள்ளது.
சமூகத்தின் மேட்டுமைக் குழுக்கள் தம் பண்பாட்டு மேலாண்மையை நிலைநிறுத்த வழக்கிலிருக்கும் பண்பாட்டை இழிவுபடுத்தலை அல்லது மாற்றியமைத்தலை வரலாறு நெடுகிலும் மேற்கொண்டுவருகின்றன. அத்தகையதொரு செயற்பாடாகவே சாஸ்திரியம் கட்டமைக்கும் கிராமியக் கலைகளுக்கு எதிரான புனைவுகள் அமைகின்றன. மேட்டுமைக் குழு கட்டமைக்கும் இத்தகைய பண்பாட்டு ஏமாற்றத்திற்குப் பெரும்பாலானோர் பலியாகியுள்ளதோடு ஆங்காங்கேயே அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகள் மேற்கிளம்பியுள்ளன. அவ்வகையில் இந்நூலினூடாக எழுப்பப்படும் ஆதிக்கப் பண்பாட்டுக்கெதிரான எதிர்ப்பு மிகமுக்கியமானதாக அமைகிறது. அதுவும் முறையாக சாஸ்திரியக் கலையைப் பயின்று, பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியரிடமிருந்தே அம்மேலாண்மைப் பண்பாட்டை எதிர்க்கும் எதிர்ப்புக்குரல், செயற்பாட்டு வடிவம் பெற்றிருக்கின்றமை வரலாற்றின் முக்கிய நிகழ்வெனலாம்.
உலகளாவிய ரீதியில் நாட்டார் வழக்காற்றியல் அம்சங்களைத் தொகுத்தலும் வகுத்தலும் அவற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்தலும் எனப் பல தளங்களில் ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன. தமிழ்ச் சூழலில் இந்நாட்டாரியல் ஆய்வுப்புலத்தைத் தொடக்கிவைத்த பெருமை மேலைநாட்டாரையே சாரும். 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மேலைநாட்டவர் பலர் தென்னிந்திய நாட்டுப்புறப் பாடல்களையும், பழமொழிகளையும், கதைகளையும் தொகுப்பதில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்தே இந்தியவியல் ஆய்வாளர்கள் இந்தியாவின் பழைமைகுறித்த ஆய்விற்கு நாட்டுப்புறவியலை அடிப்படையாகக் கொண்டனர்.
இதன் அடுத்த கட்டமாகவே இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் கல்வியலாளர்கள் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வினை முன்னெடுக்கத் தொடங்கினர். இதனால், இந்திய நாட்டுப்புறவியல் வளர்ச்சியினை ஆய்வு செய்வோர் கிறிஸ்தவ மிஷனரிக்காலம், தேசிய உணர்வுக்காலம், கல்வியியல் காலம் என வகைப்படுத்தி நோக்குவது பொது மரபாகிவிட்டது. அதேவேளை இந்நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு வளர்ச்சியினை உற்று நோக்கினால் சேகரித்தலும் தொகுத்தலும், தொடக்கநிலை ஆய்வுகள், ஆய்வின் வளர்ச்சி என்ற படிமுறை வளர்ச்சியினைக் காணலாம்.
தொடக்கநிலை ஆய்வுகளில் வெறும் விவரணைகளாகவும் அறிமுகங்களாகவும் இருந்தவை ஆய்வின் வளர்ச்சிக் காலத்தில் சமூக வரலாறு மற்றும் வாழ்வியல் வெளிப்பாடுகளாகக் நோக்கப்பட்டதோடு மொழியியல், உளவியல், மானிடவியல், தத்துவவியல், அமைப்பியல், சூழலியல் எனப் பல கோட்பாட்டுத்தளங்களில் அதன் ஆய்வெல்லை விரிவடைந்துள்ளது. அத்தோடு நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு இன்று வரலாற்று மீட்டுருவாக்கச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை இன்றும் நாட்டார் வழக்காற்றியலை தொகுத்தல் வகுத்தல் மற்றும் விவரணைப் பாங்கிலான தொடக்கநிலைசார் ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருந்தாலும் 1960களிலிருந்தே புலமைத்துவ மட்டத்திலான ஆய்வுச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. பேராசிரியர் க.கணபதிபிள்ளையே இதனைத் தொடக்கிவைத்த முன்னோடி எனலாம். அவரைத்தொடர்து பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, பாலசுந்தரம், சண்முகதாஸ், தில்லைநாதன், இரா.வை. கனகரத்தினம், மௌனகுரு, நுஃமான் போன்ற பலரும் நாட்டாரியல்சார் புலமைத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு இலங்கை நாட்டாரியல் ஆய்விப்புலத்திற்குப் புத்தொளியைப் பாய்ச்சினர். அத்தோடு நாட்டில் பிராந்திய ரீதியாகவும் இனரீதியாகவும் நாட்டார் வழக்காற்றியலை தொகுத்தலும் ஆய்தலும் பெருகத்தொடங்கின இருப்பினும் தமிழ்நாட்டு நாட்டாரியல் ஆய்வுகளோடு ஒப்பிடும்போது இலங்கையில் பன்முகப்பட்ட ஆய்வுகளின் வருகை அரிதாகவே இடம்பெற்றுவருகின்றது.
மலையகத் தமிழ் நாட்டாரியல் ஆய்வு முயற்சிகளானது இலங்கையின் ஏனைய பிராந்திய மற்றும் சமூக நாட்டாரியல் ஆய்வுகளைவிட சற்று பின்தங்கிய நிலையிலேயே இருப்பது போலத் தெரிகிறது. மலையகத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் தொகுப்புச் செயற்பாட்டினைத் தொடக்கிவைத்தவராக ஸி.வி வேலுப்பிள்ளை விளங்குகின்றார். அவரைத்தொடர்ந்து சாரல்நாடன், சு.முரளிதரன், மு.சிவலிங்கம் போன்ற பலர் தொகுப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இற்றைவரை மலையக நாட்டார் வழக்காற்றியல் முழுமையாகத் தொகுக்கப்படாத நிலையிலேயே தொடர்கிறது.
மலையக நாட்டாரியல் ஆய்வுகளை முன்னெடுத்தோரில் ஸி.வி, சாரல்நாடன், கோமஸ், நவஜோதி, முரளிதரன், அந்தனிஜீவா, மாத்தளை
வடிவேலன், மாத்தளை கார்த்திகேசு, காரை செ. சுந்தரம் பிள்ளை, பேராசிரியர்கள் சிவத்தம்பி, தில்லைநாதன், அருணாசலம், வேல்முருகு, வ. மகேஸ்வரன், துரைமனோகரன், கலாநிதி சோதிமலர் ரவீந்திரன், அம்பிகை வேல்முருகு, லெனின் மதிவானம், பெ. சரவணகுமார், செ.சுதர்ஷன் போன்ற பலர் குறிப்பிடத்தக்கவர்கள். மலையக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் முன்னோடியாக விளங்கும் ஸி.வி வேலுப்பிள்ளையிடம் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பாகக் காணப்பட்ட தெளிவான சிந்தனை பின்வந்த ஆய்வாளர்கள் பலரிடத்தும் காணப்படவில்லை என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். வெளிவந்துள்ள ஆய்வுகளில் பெரும்பாலானவை விவரணையாகவும் ஒருசில ஆய்வுகள் சமூக வரலாற்றுப் பின்புலத்திலும் கோட்பாட்டடிப்படையிலும் நாட்டார் வழக்காற்றியலை அணுகுபவையாகவும் அமைந்துள்ளன. அவ் ஆய்வுகளில் அதிகமானவை நாட்டார்பாடல்கள் தொடர்பாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் மலையக நாட்டார் வழக்காற்றியலின் தொடக்கநிலை ஆய்வுகள் என்ற வகையில் அவை யாவும் வௌ;வேறு தளங்களில் முக்கியத்துவமுடையனவாக விளங்குகின்றன. எனவே,
இனிவருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மேற்கூறிய எல்லைகளிலிருந்தும் ஒற்றைப்படையான ஆய்வுத்தளங்களிலிருந்தும் விரிவடைந்து மலையக நாட்டாரியல் ஆய்வுப்புலத்திற்குப் புது ஒளியைப் பாய்ச்சுவதாக அமைய வேண்டும். இந்தப்பின்னணியில் ஹரிஷின் நூலினை நோக்கலாம்.
இந்நூலானது,
01. காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்துக்கள் பற்றிய எழுத்துக்கள்
02. மலையகம் என்பது…
03. காமன்கூத்து
04. அர்ச்சுனன் தபசு
05. பொன்னர் சங்கர்
06. கூத்துக்களுக்கிடையிலான ஒப்பீடு
என ஆறு இயல்களைக் கொண்டுள்ளது. இவ்வியல்களில் பேசப்படுகின்ற விடயங்களை பொதுமை நோக்கில் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.
01. மலையகத்தின் சமூக பண்பாட்டுப் பின்புலத்தைத் தெளிவுபடுத்தல்
02. காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்களின் தொன்மங்கள், சடங்குகள் மற்றும் வரலாற்றினை விளக்குதல்
03. அக்கூத்துக்களின் அவைக்காற்றுமுறை, ஆடுகளம், ஒப்பனை, இசை போன்றவற்றை விளக்குதலும் ஒப்பிடுதலும்
04. அக்கூத்துக்கள் நிகழ்த்துதலின் பனுவலை ஆவணப்படுத்தல்
01. மலையகத்தின் சமூக பண்பாட்டுப் பின்புலத்தைத் தெளிவுபடுத்தல்
ஒரு சமுதாயத்தின் நாட்டார்கலை இலக்கியங்கள் பற்றிய புரிதலுக்கு அச்சமுதாயத்தின் உற்பத்திமுறை, சமூக அமைப்புக் குறித்த தெளிவு அவசியமாகும். குறிப்பாகக் கூத்து முதலிய கிராமியக் கலைகள் உழைப்பிலிருந்தே தமது கலைப்பயணத்தை தொடங்கியவையாகும். அதாவது உழைப்பிலிருந்து சடங்குகளும் சடங்கிலிருந்து கூத்து முதலிய நாட்டார் கலைகளும் முகிழ்ப்புப் பெற்றன.
நூலாசிரியரும் தன் ஆய்வினை மேற்கொண்ட சமுதாயத்தின் சமூக பண்பாட்டுப் பின்புலத்தினை தெளிவுபடுத்த முயன்றுள்ளார். அவை அச்சமூகத்தின் பாரம்பரிய கலைகள் பற்றிய புரிதலுக்கு மிகவும் அவசியமானவையாகும். இதன்படி மலையகம் என்ற சொல்லின் பொருள்கோடல், அச்சொல்லின் பயில்நிலை வளர்ச்சி, பெருந்தோட்ட உற்பத்தி முறைமையின் தோற்றம், இந்திய தொழிலாளர்களின் வருகை, அத்தொழிலாளர்களின் மொழி, சாதி, சமயம், சடங்கு, உணவு, உடை, கலை முதலிய பல அம்சங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். இவற்றுடன் அச்சமூகத்திற்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள கூத்துக்களுக்கும் இடையிலான ஊடாட்டத்தினை ஆராய்வதில் ஆசிரியர் மேலும் கவனம் செலுத்தியிருப்பாரேயானால் நூல் இன்னும் கனதிபெற்றிருக்கும்.
02. காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்களின் தொன்மங்கள் சடங்குகள் மற்றும் வரலாற்றினை விளக்குதல்
நூலாசிரியர் தெரிவு செய்யப்பட்ட கூத்துக்களின் தொன்மங்கள் மற்றும் ஐதீகங்களை அவை ஒரு திரண்ட முழுவடிவமாகிய பனுவல்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள்ளார். உதாரணமாக காமன்கூத்தின் தொன்மத்தினை கந்தபுராணத்தின் காமதகனப்படலத்தை அடிப்படையாகக் கொண்டும் அர்ச்சுனன் தபசின் தொன்மத்தை பாரதத்தின் அர்ச்சுனன் தவநிலைக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விளக்கியுள்ளார்.
தமிழ்ச் சூழலில் காமனைப் பற்றிய பதிவுகள் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவருகின்றன. சிலப்பதிகாரத்தில் காமவேள்க்;கோட்டம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. பெருங்கதை, தேவார திருமுறைகள், சீவகசிந்தாமணி போன்றவற்றிலும் காமனைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுவதோடு ஆண்டாள் தனது நாச்சியார் திருமொழியில் காமண்பண்டிகையினை விரிவாகப் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அர்ச்சுனன் தபசின் தொன்மம், அதன் கதை மாறுபாடுகள் குறித்து ஆசிரியர் விரிவாக ஆராய்ந்துள்ளார். காமன்கூத்து, பொன்னர் சங்கரை விட அர்ச்சுனன் தபசினை ஆசிரியர் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கியுள்ளார் எனலாம். மூலபாரதக்கதை, வில்லிபாரதம், நல்லாப்பிள்ளை பாரதம், மகாபாரதச் சுருக்கம் போன்றவற்றில் அர்ச்சுனன் தவநிலை நிகழ்ச்சிகள் ஒத்தும் மாறுபட்டும் அமைந்துள்ளவாற்றை சிறப்பாக பதிவுசெய்துள்ளார்.
பொன்னர் சங்கர் கூத்தானது மேற்கூறிய இரு கூத்துக்களிலிருந்தும் வேறுபட்டதாகும். பொன்னர் – சங்கர் எனும் அண்ணன்மாரின் உண்மை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, இக்கதையின் வரலாற்றம்சங்களை மிகநிதானத்தோடும் வரலாற்றாதாரங்களோடும் ஆராய்தல் அவசியமாகும்.
பொன்னர் – சங்கர் கூத்தில் மாறுபட்ட கதைவடிவங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் ஆசிரியர் அவற்றில் இரண்டு கதை மரபுகளை விளக்கியுள்ளார். அவை வருமாறு,
01. பங்காளிகளுக்கிடையிலான முரண்பாட்டை மையச் சரடாகக் கொண்ட கதை (இது கலைஞர் கருணாநிதியின் பொன்னர் – சங்கர் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது)
02. சோழ மன்னனின் சூழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்ட கதை (ஆசிரியர் இக்கதை எங்கிருந்து பெறப்பட்டது என்பதைப் பதிவுசெய்யவில்லை)
இங்கு கவனிக்க வேண்டிய மிகமுக்கிய விடயம், ஆசிரியர், பொன்னர் – சங்கர் வரலாற்றை வரலாற்றடிப்படையில் கூறும் அடிப்படை நூல்களாக சக்திக்கனல் பதிப்பித்த அண்ணன்மார் சுவாமி கதை, வேட்டாம்பாடி பழனிசாமியின் பொன்னர் சங்கர் வரலாறு, பிரெண்டா பெக் பதிப்பித்த அண்ணன்மார் கதை மற்றும் இந்நூல்களுக்கெல்லாம் காலத்தால் முந்தித் தோன்றிய பொன்னர் சங்கர் அம்மானை (1891) போன்றவற்றை ஆதாரமாகக் கொள்ளாது இந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு கலைஞர் தன் சரக்குகளோடு இணைத்துப் புனைந்த பொன்னர் – சங்கர் வரலாற்று நாவலை மூலமாகக் கொண்டுள்ளார். அத்தோடு கலைஞரின் அந்நூலுக்கு எதிரான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக பேராசிரியர் கிருஷ்ணசாமி ‘வாய்மொழி வடிவத்திலேயே ஜீவனோடு வாழ்கிற ஒரு காப்பியத்தை நேரடியாகக் கேட்டுணராமல், கண்டுணராமல் வெறும் குடிப்பெருமை மட்டும் பேசும் அடிப்படையில் தனது கதையில் கருணாநிதி மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடாது. காலத்தால் அழியாத மக்களின் வாழ்க்கை மரபுகளையும் அவர்களின் நுட்பமான கதை வெளிப்பாட்டையும் புரிந்து அங்கீகரிக்கத் தவறிவிட்டார் கலைஞர் கருணாநிதி’ என்று கூறியுள்ளார். எனவே, அந்நூலினை ஆசிரியர் அடிப்படையாகக் கொண்டுள்ளமையானது அவரின் தமிழ்க் கலைவடிவங்களையும் கூத்துக்களையும் கட்டிக்காக்கும் நோக்கிற்கு முரணானதாவே தோன்றுகிறது.
இக்கூத்துக்களில் நிகழ்த்தப்படுகின்ற சடங்குகளை மிக விரிவாக அப்பிராந்தியத்திற்கேயுரிய மொழியில் அதன் நிகழ்த்துதல் முறையோடு பதிவு செய்துள்ளமைப் பாராட்டத்தக்கதாகும்.
03. தெரிவுசெய்யப்பட்ட கூத்துக்களின் அவைக்காற்றுமுறை, ஆடுகளம், ஒப்பனை, இசை போன்றவற்றை விளக்குதலும் ஒப்பிடுதலும்
நிகழ்த்துதல் என்பது ஒருவகையான கருத்துப்பரிமாற்ற நடவடிக்கையாகும். இப்பரிமாற்றத்தில் கலைஞர், சுவைஞர், வாய்மொழிக்கூறுகள், இசைக்கூறுகள், ஆட்டம் போன்றவையும் காலம், களம், ஒலி, ஒளியமைப்பு, ஒப்பனை முதலியனவும் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிகழ்கலை உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஒவ்வொரு கூத்துக்களிலும் விளக்கியுள்ளதோடு அவற்றுக்கிடையிலான ஒப்பீட்டையும் ஆசிரியர் மேற்கொள்ள முயன்றுள்ளார். நிகழ்கலை உறுப்புக்களை ஒவ்வொரு கூத்துக்களிலும் விரிவாக நோக்கியவர், ஒப்பிடும்போது பொதுப்படையாகவே விளக்கியுள்ளதை அவதானிக்கமுடிகிறது என்றாலும் இவ்வொப்பீடு ஒரு முன்னோடி முயற்சி என்பதால் அக்கூத்துக்களுக்கு இடையிலான ஒப்பீட்டுமுறையின் முக்கியத்துவத்தினை உணர்த்திநிற்கிறது.
04. கூத்துக்கள் நிகழ்த்துதலின் பனுவலை ஆவணப்படுத்தல்
நூலாசிரியர் தான் கள ஆய்வில் திரட்டிய பனுவல்களின் சில பகுதிகளை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். போட்மோர், டயகம, சாஞ்சிமலை ஆகிய தோட்டங்களில் நிகழ்த்தப்படும் அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்துக்களின் சில பகுதிகளையும் காமன் கூத்தின் ஒரு பனுவலையும் ஆவணப்படுத்தியுள்ளார். இங்கு காமன்கூத்தின் பனுவல் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவல் இல்லை. இப்பனுவல்கள் எல்லாம் எங்கிருந்து, யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற தகவல்களை ஆசிரியர் தந்திருப்பாரேயானால் அது எதிர்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்திருக்கும்.
நாட்டார் கலைகளின் நிலைப்புக்கும் அவை பற்றிய ஆய்வுகள் பல தளங்களில் விரிவடைவதற்கும் அவற்றின் பனுவல்களை ஆவணப்படுத்தல் அடிப்படைத் தேவையாகும். அவ்வகையில் ஆசிரியரின் மிகமுக்கியமான பங்களிப்பாக இதனைக் கருதலாம். அக்கூத்துக்களின் பனுவல்கள் இற்றைவரை முழுமையாக ஆவணப்படுத்தப்படாத சூழலில் அதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக இவ் ஆவணப்படுத்தலைக் கொள்ளலாம். அத்தோடு இந்நூலாசிரியரே எதிர்காலத்தில் இக்கூத்துக்கள் தொடர்பாக மலையகத்தில் கிடைக்கின்ற பனுவல்களை பிராந்திய வேறுபாடுகளுடன் தமிழ் நாட்டில் கிடைக்கின்ற பனுவல்களுடனும் ஒப்பிட்டு ஓர் ஆய்வுப் பதிப்பினை தருவாரெனில் அது தமிழுக்கும் மலையகச் சமுதாயத்திற்கும் பெருங்கொடையாக அமையும்.
தொகுத்து நோக்கும்பொழுது இந்நூலானது மலையகத்தில் நிகழ்த்தப்படுகின்ற காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்கள் – தொன்மம், வரலாறு, சடங்குகள் மற்றும் அரங்கக்கூறுகள் ஆகியவற்றை பெற்றிருக்கும் முறைமையை விளக்கும் நூலாக அமைகின்றதென்பது தெளிவு. பொதுவாகத் தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ள கிராமிய நிகழ்கலைகள் பற்றிய ஆய்வுகளை ஐந்து வகைக்குள் வகைப்படுத்துவர். அவையாவன:
01. நிகழ்த்துகலைகள் தொன்மம், சடங்குகள், அரங்கக்கூறுகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் நிலையை ஆராய்தல்
02. நிகழ்த்துகலைகளின் தனித்தன்மைகளை ஆராய்தல்
03. கலைகளின் பரிணாம வளர்ச்சியில் கிராமிய நிகழ்கலைகள் பெறுகின்ற இடத்தினை மதிப்பிடுதல்
04. சமூக வரலாற்றம்சங்களை நிகழ்கலைகளில் தேடுதல்
05. நவீன கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கலைகளை ஆராய்தல்
இங்கு நிகழ்த்துகலைகள் தொன்மம், சடங்குகள், அரங்கக்கூறுகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் நிலையையும் அக்கலைகளின் தனித்தன்மைகளையும் ஆராய்தல் நிகழ்கலை ஆய்வுகளின் தொடக்ககாலத்தில் மேற்கொள்ளப்பட்டவையாகும். அதனைத் தொடர்ந்தே ஏனைய நோக்குமுறைமைகளில் அதன் ஆய்வெல்லை விரிவடைந்தது.
மலையகக் கிராமிய நிகழ்கலை ஆய்வுகளைப் பொறுத்தவரை இதுவரை காலமும் வெளிவந்தவை பெரும்பாலும் மேற்கூறியவகையிலான தொடக்கநிலை ஆய்வுகளாகவே அமைந்துள்ளன. அவ்வகையான ஆய்வுகளின் தொடர்ச்சியாகவே இந்நூலும் அமைந்துள்ளது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மற்றும் கவிஞர் சு. முரளிதரன் ஆகியோர் தமது உரையில் குறிப்பிட்டதைப் போல முன்னைய ஆய்வுகள் தொடர்பான மீளாய்வினை ஆசிரியர் சிறப்பாக மேற்கொண்டிருந்தால் ஆய்வுகளின் தொடர்வளர்ச்சியினைச் சிறப்பாக எட்டியிருக்கலாம். என்றாலும் இதுவரை காலமும் வெளிவந்த மலையகக் கிராமிய நிகழ்கலைகள் தொடர்பான ஆய்வுகளிலிருந்து இந்நூலானது சில வளர்நிலைகளையும் வேறுபாடுகளையும் கொண்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவை வருமாறு,
* மலையகத்தில் நிகழ்த்தப்படும் முப்பெரும் கூத்துக்களையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய வகையில் விரிவாக விளக்கியுள்ளமை.
* கூத்துக்களின் பனுவல்களை ஆவணப்படுத்தும் முயற்சி முழுமையாக மேற்கொள்ளப்படாவிட்டாலும் குறிப்பிட்ட பிராந்தியங்களில் பயில்நிலையில் உள்ள பனுவல்களின் சில பகுதிகளை ஆவணப்படுத்தியுள்ளமை
* அம்மூன்று கூத்துக்களையும் ஒப்பிடும் முன்னோடி முயற்சி
* மலையகத்தையும் தமிழ் நாட்டையும் இணைத்து அக்கூத்துக்களை விளக்க முயற்சி செய்தல்
மலையகத்தில் வழக்கிலுள்ள கூத்துக்கள் யாவும் தமிழ்நாட்டிலிருந்தே இங்கு கொண்டுவரப்பட்டவையாகும். எனவே, அவைகுறித்த புரிதலுக்கு அவ்விரு பிராந்தியங்களையும் இணைத்து விளக்கம் தர முயல்தலும் பிராந்திய வேறுபாடுகள் அக்கலைகளில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆராய்தலும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் நிலமானியச் சமூக அமைப்பில் வழக்கிலிருந்த இக்கூத்துக்கள் இலங்கையில் முதலாளித்துவ சமூக அமைப்பிற்குள்; அச்சமூகத்தவர் வாழநேர்ந்த போது எத்தகைய மாற்றங்களைப் பெற்றன, அப்புதிய சமூக முறைமைக்குள் அம்மக்களுக்கும் அக்கூத்துக்களுக்கும் இடையிலான ஊடாட்டம் எத்தகையது என்பன போன்றன இந்நூலாசிரியராலும் ஏனைய ஆய்வாளர்களாலும் இன்னும் முழுமையாக ஆய்வுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவாறான சில புதிய அம்சங்களை, வளர்நிலைகளை இந்நூல் கொண்டிருந்தாலும் நூலாசிரியர் தகவல் திரட்டுதலில் செலுத்திய ஆர்வத்தை ஆய்வில் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக சிலவருமாறு:
* இவ்வாய்வு எவ்விதமான ஆய்வு அணுகுமுறையையோ கோட்பாட்டுத் தளத்தையோ அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படவில்லை. வெறுமனே தகவல்களின் திரட்டாகவே அமைந்துள்ளது.
* தகவல்களின் தர்க்கரீதியான ஒழுங்கமைப்பு ஆங்காங்கு குன்றிப்போயுள்ளது. உதாரணமாக பொன்னர்
* சங்கர் கதைமரபுகளில் ஆசிரியர் கூறும் இரு கதைமரபுகளிலிருந்து கள ஆய்வில் திரட்டப்பட்டுள்ள பனுவலின் கதைமரபு மாறுபட்டதாக உள்ளது. அதில் சில அம்சங்கள் தமிழ்நாட்டு கதைமரபுகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துள்ளது. ஆனால், ஆசிரியர் இம்முரண்நிலை குறித்து அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
* தமிழ்மரபு, நூலாக்கத்தில் குன்றக்கூறல், கூறியது கூறல், மிகைப்படக்கூறல் முதலிய பத்துவகை குற்றங்களைக் கூறுகிறது. இந்நூலில் கூறியது கூறல் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். உதாரணமாக முதலாம் இயலில் தெரிவுசெய்யப்பட்ட கூத்துக்களின் தொன்மம், சடங்குகள் முதலியவற்றை விளக்கிய ஆசிரியர் பின்னர் அக்கூத்துக்களை தனித்தனியே விளக்கும் போது அவற்றை மறுபடியும் ஒப்புவித்துள்ளார்.
* நூலில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்களுக்கு சான்றாதாரங்கள் தரப்பட்டில்லை. பல நூல்களிலிருந்தும் பெறப்பட்ட தகவல்கள் மாற்றமேதுமின்றி இந்நூலில் இடம்பெறுகிறது. ஆனால், அவை எங்கிருந்து பெறப்பட்டவை என்ற குறிப்பில்லை. சில நூல்கள் உசாத்துணைப் பட்டியலில் தரப்பட்டிருந்தாலும் தகவல்களைப் பெற்றுக்கொண்ட சில நூல்களை ஆசிரியர் ஏனோ அங்கும் குறிப்பிடவில்லை.
* நூலில் இரண்டு பதிப்பாசிரியர்கள் நூலாசிரியர்களாகச் சுட்டப்பட்டுள்ளனர். (பேராசிரியர் சிவத்தம்பி, வி.என்.எஸ் உதயசந்திரன் ஆகிய இருவரும் முறையே மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும், கலைக்குரல்கள் ஆகிய இரு நூல்களினதும் பதிப்பாசிரியர்களே) அவ்விருவரையும் நூலாசிரியர்களாகச் சுட்டியது (மேலோட்டமாகப் பார்க்கும்போது) சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில் ஆசிரியர் தகவல்களைப் பெற்றுக்கொண்ட எழுத்துக்களுக்குச் சொந்தமானவர்கள் ஒருவகையில் இங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய போக்குகள் ஆய்வு நாகரிகத்திற்குச் செழுமைதரக்கூடியவை அல்ல என்பது மனங்கொள்ளத்தக்கது.
மேற்கூறிய யாவற்றையும் தொகுத்து நோக்கின், இந்நூலில் இயல்பாகக் கலைகளில் ஈடுபாடுள்ள ஒரு கலைஞரின் முகம் மேலோங்கியதாகவும் அக்கலைஞரின் ஆய்வு முகம் அருகியதாகவும் வெளிப்பட்டுள்ளது எனலாம். என்றாலும் மலையக நாட்டாரியல் ஆய்வு வளர்ச்சியோடு ஒப்பிடும் போது ஹரிஷின் இந்நூலாக்கத்திற்கான தேடலும் உழைப்பும் பாராட்டத்தக்கதாகும். எதிர்காலத்தில் இந்நூலின் அடுத்த பதிப்பில் அடையாளங்காணப்பட்ட பலவீனங்கள் செம்மைப்படுத்தப்பட்டு விரிவாக்கம் பெறும்போது மலையகப் பாரம்பரிய கூத்துக்கள் பற்றிய ஆய்வில் இந்நூலும் வலுவான ஏற்புடைமையைப் பெற்றுக்கொள்ளும். நூலாசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.