நீண்ட காலமாக தமிழகத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.அடர்த்தியான அரசியல் பொருளோடு இந்தியாவின் புவியியல் பரப்பை வரையறுக்கும் ஒன்றிய அரசு என்ற சொல் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
அறிஞர் அண்ணாவால் பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த சொல்லை திமுக தன் தேர்தல் அறிக்கையில் பயன்படுத்திய பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பயன்படுத்தியதையொட்டி இச்சொல் புகழ்பெற்றது. இந்நிலையில் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்தினார். “இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில் என்னுடைய கடைமைகளை உண்மையாகவும், மனச்சான்றின் படியும் ஆற்றுவேன்” என்ற உறுதிமொழியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூற, அதை பதவியேற்ற அமைச்சர்களும் அப்படியே கூறினர்.அவர் பாஜக பிரமுகர் என்பதால் அவரே இந்த சொல்லை பயன்படுத்தலாமா என்று பாஜகவினரும் இந்துத்துவ அமைப்பினரும் விமர்சித்தார்கள். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில்,
“எவ்வாறு தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம் என்று கூறினார்களோ அதேபோல் “Indian Union Territory of Puducherry” என்ற வாசகம் “இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு” என அழகாக, வெகுகாலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழ் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த படிவம்தான் வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.” என்று விளக்கம் அளித்துள்ளார்.