Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒடுக்கு முறையின் உள்ளூர் முகங்கள் – தீபம் தொலைக்காட்சியில் விவாதமும் அவதூறுகளும்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் இரண்டு மணி நேர அவகாச்த்துள் வெளியேற்றப்பட்டமை மனித குலத்தை வெட்கித் தலைகுனிய வைக்கும் ஈனச் செயல் என்பதை இன்று யாரும் மறுக்கவில்லை. முஸ்லீம் மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் இலங்கைப் பாசிச அரசு முஸ்லீம் மக்களை வியாபாரப் பொருளாக்குகின்றது. இந்த வியாபார வலைக்கு தலைமை தாங்கும் ஒரு பகுதி சமூகத்தின் புத்திசீவிகளாக உலா வருதலும், இன்னுமொரு பகுதி இந்த வலைக்குள் தம்மையறியாமல் வீழ்ந்திருப்பதும் அவல அரசியல்.

இலங்கையில் தன்னுரிமையும் கொண்ட தேசிய இனமான முஸ்லீம் தமிழர்கள் வெறுமனே தேசிய இனம் மட்டுமன்றி, சர்வதேசியப் பண்பையும் கொண்டவர்கள். இலங்கை அரச ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் முஸ்லீம்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடினால் இலங்கை மகிந்த குடும்ப அதிகாரம் ஆட்டம்காண ஆரம்பிக்கும் என்பதை அரசும் அதன் ஆதரவாளர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மகிந்த குடும்பம் கட்டவிழ்த்துவிட்ட கிரீஸ் பூதம் கிழக்கிலிருந்து துரத்தப்படமைக்கு முஸ்லீம்களின் வீரம் மிக்க போராட்டமே அடிப்படையாக அமைந்தது. வன்னி இனப்படுகொலைக்குப் பின்னர் முஸ்லீம் மற்றும் வட கிழக்குத் தமிழர்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது.

முஸ்லீம் தமிழர்களுக்கும், வட-கிழக்குத் தமிழர்களுக்கும் திட்டமிட்ட முரண்பாட்டை இலங்கை அரசு ஏற்படுத்த முனைகிறது.
இந்த நிலையில் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடும் முஸ்லீம்களை வழ-கிழக்குத் தமிழர்களுக்கு எதிராக திசைதிருப்பும் வகையில் 71 பேர் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட அறிக்கை அமைந்திருந்தது.

இவ்வறிக்கையை விமர்சிப்பவர்களை தனி நபர் தாக்குதலுக்கு உள்ளாக்க முற்படும் இருவரை இங்கே காணலாம். சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்(EPDP) கீரன் (சிறீ TELO) ஆகிய இருவருமே இங்கு விவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
பாசிச இலங்கை அரச அமைச்சர் ஒருவரை ஐரோப்பாவிற்கு அழைத்து தலித் மாநாட்டை நிகழ்த்திவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரலெழுப்புவதாகக் கூச்சலிடும் இவர்கள் அபாயகரமானவர்கள்.
இவ்வேளையில், அண்மையில் தமிழ் நாட்டில் இந்து பாசிச குழு ஒன்றின் யாத்திரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டமை மட்டுமன்றி அவர் விஷ்வ இந்து பரிஷாத்தில் இலங்கைப் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.

இது மற்றொரு வழியில் முஸ்லீம் தமிழர்களுக்கும் வடகிழக்குத் தமிழர்களுக்கும் எதிரான முரண்பாட்டை ஆழப்படுத்தும் செயற்பாடாகும். இவர்கள் அனைவரதும் பின்புலத்தில் இலங்கை இந்திய அதிகார வர்க்கங்கள் செயலாற்றுகின்றனவா என்ற அச்சம் ஏற்படுகின்றது.

இந்த நிலையில் அனைத்து சமூக உணர்வுள்ள, மக்கள் பற்றுமிக்க சக்திகளுக்கும் மக்களைக் கூறுபோட்டு அரசியல் வியாபாரம் நடத்தும் இந்த நச்சு விதைகளுக்கு எதிராக விழிப்படைய வேண்டும்.




Exit mobile version