மேலும், அமெரிக்காவைப் பணிய வைக்கும் தனது இலக்கை பின்லேடன் எட்டிவிட்டதாகத் தான் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள ஓமர், பின்லேடன் மரணிக்கும் பட்சத்தில் அவரது போராளிகள் மிக மிக அபாயகரமான தாக்குதல்களை நடத்தக்கூடுமெனவும் தெரிவித்துள்ளார்.
சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ள ஓமர்,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தவறிழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்லேடனின் 11 மகன்களில் தானும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ள ஓமர் தனது இளமைப் பருவத்தை சூடான் மற்றும் ஆப்கானில் கடும்போக்கான போராளிகள் மத்தியில் கழித்ததாகவும் ஆனால், அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே தான் பின்லேடனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2007 இல் பிரிட்டிஷ் பெண்ணைத் திருமணம் செய்த ஓமருக்குத் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை கட்டார்,எகிப்து,பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் மறுத்திருந்தன.
இந்நிலையில், ஓமரைப் பேட்டி கண்டுள்ள ரோலிங் ஸ்ரோன் என்னும் சஞ்சிகை, ஓமர் , சவூதி அரேபியாபில் ஒரு வர்த்தகராகத் தொழில்புரிந்து வருவதாகவும் இவரது கனவு ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட வேண்டுமென்பதும் ஒபாமா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்திக்க வேண்டுமென்பதும் எனத் தெரிவித்துள்ளது.
இச் சஞ்சிகைக்கு ஓமர் வழங்கியுள்ள பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஒபாமாவின் பதவியில் நான் இருந்திருந்தால் முதலில் தற்காலிகப் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தியிருப்பேன். ஆப்கான் ஒருபோதும் வெல்லப்பட முடியாதது.
உண்மையில் எனது தந்தை கொல்லப்படாததால் அமெரிக்கா அதிர்ஷ்டம் செய்திருப்பதாகவே கருதுகிறேன். எனது தந்தை இறந்திருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும். உலகில் மிகமிக அபாயகரமான அழிவுகள் இடம்பெற்றிருக்கும்.
அவருடன் இருக்கும் போராளிகளால் முன்வைக்கப்படும் மிக மோசமான தாக்குதல்களுக்கான யோசனைகளை எனது தந்தை கட்டுப்படுத்தி வருகிறார். எனது தந்தை மத ரீதியான இலக்கைக் கொண்டவர். அவர் ஜிகாத்தின் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டவர். தேவையேற்பட்டால் மட்டுமே அவர் ஒருவரைக் கொல்வது தொடர்பில் சிந்திப்பாரெனத் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்திலும் பாரிய தாக்குதல்களைப் பின்லேடன் நடத்துவாரெனத் தான் கருதவில்லையெனக் குறிப்பிட்டுள்ள ஓமர், அந்தத் தேவை அவருக்கு இல்லையெனவும் ஆப்கானுக்குள் அமெரிக்கா நுழைந்ததன் மூலம் பின்லேடன் ஏற்கனவே தனது திட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.